பக்கம் எண் :

2560.

     அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
     பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
     தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
     மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.

உரை:

      அருள் மிக்க யானை முகத்தையுடைய அண்ணலாகிய விநாயகர் திருவடியையும், ஞானப் பொருளாகிய ஆறுமுகங்களையுடைய தூயவன் திருவடியையும், தெளிவுமிக்க சிவபெருமானுடைய சிவந்த பொற்றாமரை போன்ற திருவடிகளையும் மருட்சி நீங்கற் பொருட்டு நாள்தோறும் வணங்கி வாழ்த்துவோமாக. எ.று.

     விநாயகர் பேரருளாளராதலால், “அருளும் கணபதி” என்றும், ஞான முதல்வனாதலால் அறுமுகப் பெருமானை, “பொருளுறு சண்முகப் புனிதன்” என்றும், ஞானத் திரளாய் நின்ற பெருமானாதலால், “தெருளுரு சிவபிரான்” என்றும் கூறுகின்றார். பொற்கஞ்சம் - பொற்றாமரை. தாமரை போற் சிவந்த சேவடி எனற்குச் “செம்பொற் கஞ்சம்” எனச் சிறப்பிக்கின்றார். மருட்சி மயக்கும் சகச மலத்தை, “மருள்” என உரைக்கின்றார். வணக்கம் - மெய்க்கும்; வாழ்த்துதல் மன மொழிகட்கும் உரியன என்க.

          இதனால், விநாயகர், முருகன், சிவபிரானாகிய மூவரையும் மனத்தால் நினைந்தும் வாயால் வாழ்த்தியும் மெய்யால் வணங்கியும் வழிபட்ட வாறாம்.

     (4)