அறுச
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2562. மாதங்க முகத்தோன்நங் கணபதிதன்
செங்கமல மலர்த்தாள் போற்றி
ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுரு
பரன்பாத இணைகள் போற்றி
தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய
சிவபெருமான் சரணம் போற்றி
சீதங்கொள் மளர்க்குழலாள் சிவகாம
சவுந்தரியின் திருத்தாள் போற்றி
உரை: யானை முகத்தையுடையனாகிய நமது கணபதியின் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகள் போற்றி; துன்பங்களின் தொடர்பு நீக்கித் திருவருள் புரியும் குமர குருபரனாகிய முருகனுடைய இரண்டாகிய திருவடிகள் போற்றி; வலியுடைய பொன்னிறம் கொண்ட கொன்றை மலர் சூடும் சடையையுடைய சிவபெருமான் திருவடிகள் போற்றி; குளிர்ச்சி பொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுடைய தேவியாகிய சிவகாம சுந்தரியின் திருவடிகள் போற்றி. எ.று.
மாதங்கள் - யானை. செங்கமல மலர் - செந்தாமரைப் பூ. மலர் போலும் தாள் -மலர்த்தாள் என வந்தது. தாள் - திருவடி. ஏதம் - துன்பம். துன்பத்துக்கு ஏதுவாகிய அஞ்ஞானத்தைப் போக்கி இன்பத்துக்கேதுவாகிய ஞானம் நல்குவது பற்றி முருகனை, “ஏதங்கள் அறுத்து அருளும் குருபரன்” என்கின்றார். குருபரன் - மேலாய ஞான ஆசிரியன்; இளமையான ஞானாசிரியன் என்றற்குக் குமரகுருபரன் என்று வழங்குகின்றனர். இளமைப் பருவத்தே சிவனுக்குப் பிரணவ ஞானத்தைச் சொன்ன வரலாற்றை இச் சொற்றோடர் நினைப்பிக்கின்றது. தா - வலி. தங்க மலர் - பொன்னிறம் கொண்டமலர். “பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண்மார்பர்” (கச்சி யேகம்பம்) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. சீதம் - குளிர்ச்சி. சுந்தரி - சவுந்தரியென வந்தது.
இதனால் கணபதி, முருகன், சிவன், பார்வதியாகிய தெய்வங்கள் போற்றப்பட்டவாறாம்.
|