பக்கம் எண் :

2569.

     பூணி லங்குந்தன வாணி பரம்பர
     வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.

உரை:

      பூணாரம் அணிந்து, விளங்கும் செல்வ வாணியும், மேன் மேலான ஞான வாணியும், கலைவாணர் மேற்கொண்ட கலைவாணியுமாகிய வாணி தேவிக்கு மங்கள முண்டாகுக. எ.று.

          பூணாரம், பொன்னினும் மணியினும் ஆகிய அணிவகைகள். இவை செல்வ மகளிர் பூண்பனவாதலால், “தனவாணி” என்றும், மேன்மேல் உயரும் இயல்பினது ஞானமாகலின், ஞான வாணியைப் “பரம்பர வாணி” யென்றும் கூறுகின்றார். இசை - கூத்து. ஓவியம் முதலிய கலை வல்லுநர் வழிபடும் தெய்வமாதலால், “கலைஞர் கொள் வாணி” எனச் சிறப்பிக்கின்றார். கலைவாணியைப் பிரமனுக்கு அருட் சக்தி என்பர்.