2576. எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவு எய்திகினும்
எய்துகபி றப்பில் இனிநான்
எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
இன்பம்எய் தினும்எய்துக
வழுவகைத் துன்மமே வந்திடினும் வருகமிகு
வாழ்வுவந் திடினும் வருக
வருமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
மதிவரினும் வருகஉயர்வோ
டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
தெதுபோ கினும்போகநின்
இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
எனக்கடைதல் வேண்டும் அரசே.
கழிவகைப் பவரோக நீக்கும்நல் அருள் எனும்
கதிமருந்து தவுநிதியே
கனகஅம் பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
உரை: போக்கத் தக்க பிறவி நோயை, நீக்குகின்ற நினது நல்லருட்குரிய கதியை யளிக்கும் ஞானமாகிய மருந்தைத் தரும் அருள் நிதியாகியவனே, கனக அம்பல நாதனே, கருணையங் கணனே, போத கமல குஞ்சித பாதனே, ஏழ் வகைப்பட்ட பிறப்புக்களில், எப்பிறப்பு வருவதாயினும் எனக்கு வருக; இனி எனக்குப் பிறப்பே இல்லையாயினும் இல்லா தொழிக; இம்மை மறுமையாகிய இரண்டிலும் இன்பமே யுறுவதாயினும் உறுக; அன்றி, குற்றங்கள் ஏதுவாக வரும் துன்பங்களே எய்தினும் எய்துக; அல்லது இன்பம் மிக்க நல்வாழ்வு வரினும் வருக; அல்லது வறுமையே யுறினும் உறுக; நன்மதிப்பு உண்டாயினும் உண்டாகுக; அதற்கு மாறாக அவமதிப்பு உண்டாயினும் உண்டாகுக; உயர்வும் தாழ்வுமாகிய இருவேறு வகையையுடைய உலகத்தில், எனக்கு எது வந்தாலும் வருக; அல்லது எது போனாலும் போகட்டும்; நின்னுடைய இரண்டாகிய திருவடிகளை மறவாமல் நினைக்கும் மனம் ஒன்றுதான் எனக்கு வேண்டுவது. எ.று.
கொள்ளுவதும் தள்ளுவதுமாகிய இரண்டினுள், ஒழிக்கத் தக்கது பிறவித் துன்பமாகலின், அதனைக் “கழிவகைப் பவரோகம்” என்றும், அதனைப் போக்கும் மருந்தாவது திருவடி ஞானமாகிய திருவருளுணர்வு என்பார், “நல்லருள் எனும் கதி மருந்து” என்றும், அதனை அயர்வும் இடையறவு மின்றி நல்குபவனென்றற்குக் “கதி மருந்துதவும் நிதியே” என்றும் இயம்புகின்றார். கதி, அயரா வின்பப் பேற்றுக்குரிய சிவகதி. “செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையு மன்றே” (தனி. நேரிசை) எனப் பெரியோர் கூறுவ தறிக. பிறப்பை, நோய் என்றமையின், பிறவாச் சிவகதியை, “கதி மருந்து” என வுரைக்கின்றார். எழுவகைப் பிறப்புக்களாவன; ஊர்வன, நடப்பன, பறப்பன, நீர் வாழ்வன, தாவரம், மானுடர், தேவர் என்பனவாம். “ஊர்வ பதினொன்றும் ஒன்பது மானுடம், நீர் பறவை நாற்காலோர் பப்பத்து - சீரிய பந்தமாம் தேவர் பதினா லயன் படைத்த, அந்தமில் சீர்த்தாவரம் நாலைந்து” எனப் பரிமேலழகர் எடுத்துக் காட்டுகிறார். பிறந்தவர் இறந்தால் இப்பிறப்பு வகை ஏழனுள் ஒன்றை எய்துவர் எனப் பண்டையோர் கூறினமையின் “எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துக” எனவும், பிறந்தே தீர்தல் வேண்டுமென்பது உறுதி யன்மையின், “பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக” எனவும் கூறுகின்றார். இம்மை மறுமை யிரண்டும் இருமை எனப்படும். பிறந்த வுயிரனைத்தும் இன்பமே நாடுவன வாதலால், “இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக” என்றும், குற்றங்கள் வாயிலாகவே துன்பங்கள் வருதலின், “வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக” என்றும், துன்பங்களை மிகுவிப்பதில் வறுமை தலையாயதாகலின், “வறுமை வருகினும் வருக” என்றும் இயம்புகின்றார். இன்பத்துக் கேதுவாகிய குணமே யுடையவரும், துன்பத்துக் கேதுவாகிய குற்றமே யுடையவரும் இல்லாமல், குணமும் குற்றமும் கலந்தவர்களே உலகில் வாழ்தலால், இருவகைகளையும் விரவிக்கூறுகின்றார். அறிவு செயல்களால் யாவரும் உலக வாழ்க்கையில் நன்மதிப்பும் அவமதிப்பும் எய்துவது இயற்கையாதலால், “மதி வரினும் வருக அவமதிவரினும் வருக” என்றும், நன்மதியால் உயர்வும், அவமதியால் தாழ்வும் உண்டாதலால், “உயர்வோடு இழிவகைத் துலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக” என இசைக்கின்றார். இவ்வாறு உலகிற் பெறப்படுவனவற்றைப் புறக்கணிப்பவர், தாம் வேண்டுவ திஃது என்பார், “நின் இணையடிகள் மறவாத மனம் எனக்கு அடைதல் வேண்டும்” என்றும், தம்மை யுள்ளிட்ட வுலகுயிர்களை அருளுருவாய்ப் புரந்தருளும் வேந்தனாகலின், சிவனை, “அரசே” என்றும் கூறுகின்றார்.
இதனால், இறைவன் திருவடி யிரண்டையும் மறவாமல் நினைக்கும் மனம் அருள வேண்டியவாறாம். (6)
|