2597. மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
வாதனைஎ னுங்கள் வர்தாம்
வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
வசமாக உளவு கண்டு
மேயமதி எனுப்ஒரு விளக்கினை அவித்தெனது
மெய்ந்நிலைச் சாளிகை எலாம்
வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
மிகநடுக் குற்று நினையே
நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
நின்செவிக் கேற இலையோ
நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
நிறைவும்இலை யோஎன் செய்கேன்
ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
வானந்த வல்லி உமையே.
உரை: நுண்பொரு ளுரைக்கும் வேத நூல்களின் முடிவில் விளங்குகின்ற தில்லைப் பதியில் எழுந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான் கூடி மகிழும் மரகத மணியே, அண்டங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள சராசரங்களையும் படைத்தளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமாதேவியே, உலக மாயை எனப்படும் இரவுப்போதில் என் மனைவியாகிய உள்ளத்திற் புகுந்து, விடய வாதனை யென்ற கள்வர்கள் என் மனமாகிய அடிமையை எழுப்பிப் பற்றித் தமது வசப்படுத்தி என்னுடைய உணர்வெனும் பொற்பையை யடைதற்குரிய உளவறிந்து; என்பாற் பொருந்திய இயற்கையறிவாகிய விளக்கை அவித்துவிட்டு, மெய்ம்மை நிலைபெற்றுள்ள ஞானமாகிய பொற்றிரனை அஃது இருந்த பை வேறாக வுடைத்தெறிந்து கொள்ளை கொண்டு செல்ல, அது கண்டு யான் மிகவும் அஞ்சி நடுக்கமுற்று, நின்னையே அன்புடன் நினைந்து இடையறாது கூவி முறையிடுகின்றேன்; நின் செவிக்கு அது சிறிதும் ஏறவில்லையோ? கேளாமை உனக்கு நீதியாகுமோ? அது தரும நெறியன்றோ? நின்பால் அருள் நிறைவில்லையோ? நீ செவியேற் றருளாயாயின், யான் என்ன செய்வேன். எ.று.
வறுமை, பிணி, மூப்பு, நிலையாமை, சாக்காடு முதலிய தீமைகளையுடை தாயினும் தன்கண் வாழ்வாரைத் தன்னையே விரும்பி வாழ்தல் வேண்டுமென மயக்கும் இயல்பிற்றாகலின் உலகியலை “மாயையெனும் இரவு” என்றும், உயிர் இருந்து வாழுமிடமாதலால் உடம்பை “மனை” என்றும் கூறுகின்றார். விடயவாதனை - சுவை ஒளி முதலிய ஐம்புலன்கள் மேற்செல்லும் ஆசை. உயிர்க்கு வேண்டும் விருப்பு வெறுப்புக்குரிய நினைவுகளை எழுப்பிப் பிற கரணங்களை இயக்கும் கருவியாதல்பற்றி, “மனத்தை அடிமை” என வுரைக்கின்றார். ஆசை வகைகள் மனத்தைத் தம் வசமாகப் பொய்யின்பம் தந்து மயக்கிக் கோடலால், “தமது வசமாக வுளவு கண்டு” எனவும், உயிர்ப் பண்பாகிய இயற்கை யறிவைக் கெடுத்துச் செயலறுவித்தலின், “மேயமதி யெனும் விளக்கினை யவித்து” எனவும் இயம்புகின்றார். மெய்ந்நிலைச் சாளிகை - மெய்யுணர்வு நிறைந்த பொற் பேழை; பையுமாம். பொற் பேழையை யுடைத்து ஞானப் பொருள்களாகிய பொற்காசுகளை விடயவாதனைக் கள்வர்கள் மதை அடிமைப் படுத்திக் கவர்ந்து கொண்டனரென்பார், “மெய்ந்நிலைச்
சாளிகை யெலாம் உடைத்து உள்ள பொருளெலாம் கொள்ளை கொள” என வுரைக்கின்றார். பொருளை யிழந்தவன் நல்லோரைக் கூவியழைத்துத் தனது இழப்பைச் சொல்லிப் புலம்புவது போல, நின்பாற் கூவிச் சொல்லிப் புலம்புகிறேன் என்பாராய், “மிக நடுக்குற்று நினையே நேயமுற ஓவாது கூவுகின்றேன்” எனச் சொல்லி வருந்துகின்றார். நேயமுற என்பதற்கு நினக்கு என்பால் அன்பும் இரக்கமும் உண்டாக எனவும், ஓவாது கூவுகின்றேன் என்பதற்குப் பன்முறையும் இடைவிடாது நின் திருவுள்ளத்தே அருள் சுரந்து பெருகுதல் அருள் வேண்டிப் புலம்புகின்றேன் எனவும் இசைக்கின்றார். அருளொளி விரைந்து தோன்றாமை புலப்பட, “சற்றும் நின் செவிக்கேறவிலையோ” என்றும், அழுது அரற்றுவார்க்கு விரைந்து அருள் செய்தல் நீதி எனற்கு “நீதியிலையோ” என்றும்; உலகியல் அறநெறியும் அதுவாம் என்பார், “தரும நெறியும் இலையோ” என்றும், பிறர்க்குதவுவார் தம்பால் பொருள் நிறை, வேண்டுதல் போல, அருள் நிறைவு நோக்குகின்றாயோ என்பவர் “அருளின் நிறைவும் இலையோ” என்றும் உரைக்கின்றார். முடிவில் தமது கையறவு புலப்பட, “என்செய்கேன்” என்கின்றார்.
இதனால், விடயவாதனைகளால் ஞானமிழந்து கையறவு படுதல் தெரிவித்தவாறாம். (7)
|