பக்கம் எண் :

2598.

     வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
          வேத முதல்ஆ கமம்எலாம்
     மிகுபறைஅ றைந்தும்இது வெயில் மஞ்சள் நிறம்எனும்
          விவேகர் சொற்கேட் டறிந்தும்
     கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
          கணத்திடை இறத்தல் பலகால்
     கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
          கடுஅளவும் விடுவ தறியேன்
     எவவம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
          இன்னமதி என்றுணர் கிலேன்
     இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
          இன்பநிலை கண்டு மகிழ்வேன்
     அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
          அண்ணலார் மகிழும் மணியே
     அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
          வானந்த வல்லி உமையே.

உரை:

      அவ்வியமாகிய குற்றம் போக்கி யருளும் தில்லைப் பதியில் அருளும் அண்ணலாகிய கூத்தப் பெருமான் கூடி மகிழும் மரகத மணியே, அண்டங்களனைத்தையும் அவற்றிலுள்ள சராசரங்களையும் படைத்தளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமையம்மையே, வெவ்வினைப் பயனாய்த் தோன்றும் இவ்வுடம்பு மாய்ந்து கெடுவதென வேதங்கங்களும் ஆகமங்களும் பிற நூல்களுமெல்லாம் பிகவும் பறையறைவது போல எடுத்து விளம்பினாலும் இவ்வுடல் வாழ்க்கை மாலை மஞ்சள் வெயில் போல்வது எனக் கூறும் மெய்யறிஞர் சொற்களைக் கேட்டறிந்தும் முழங்குதலையுடைய கடல் சூழ்ந்த வுலகில் வைரமலை போன்ற வலியவர்களும் கணப் பொழுதில் இறந்து போவதைப் பலகாறும் கண்டும் புலால் நாறும் இவ்வுடம்பின் மேல் உள்ள பற்று கடுகளவும் குறையாமலுள்ளேன்; குற்றத்தால் சிறுமை புடையவனாகிய எனது சிற்றறிவு எத்தகையதாம்? இத்தன்மையது என என்னால் அறியமுடியவில்லை. இந்தக் குறையறிவைக் கொண்டு நிலைத்த இன்பநிலையை எவ்வகையிற் கண்டு மகிழ்வேன். எ.று.

      அவ்வியம் - பொறாமை; பொறாமைச் செயலுடையவர் இம்மையிற் செல்வமிழந்து வறுமையுற்று மறுமையில் தீவாய் நரகம் எய்துவரெனச் சான்றோர் கூறுவர்; எனவே, அவ்விய மகன்றா லன்றி அருள் வாழ்வு பெறலரிதாகலின், “அவ்விய மகற்றி யருள் அண்ணல்” என்று கூறுகின்றார். வினையின் வந்தது வினைக்கு வினையாவது, புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது மக்கள் யாக்வக” (மணிமே) என்று பெரியோர் கூறுவர். அதனால், வினைக் கீடான காயம்” என்றும், இவ்வுடம்பு மாய்ந்து கெடும் இயல்புடையதாதலால், “இது மாயம்” என்றும், இக்கருத்து வேதாகமங்கள் முதல் எல்லா நூற்களாலும் உரைக்கப்படுவது பற்றி, “வேத முதல் ஆகமமெலாம் மிகுபறையறைந்தும்” என்று இயம்புகின்றார். அந்தி மாலை வெயில் மஞ்சள் நிறமுற்றுச் சிறிது போதில் இரவிருளால் விழுங்கப்படுவ தாகலின் யாக்கையின் நிலையாமைக்கு அதனை உவமம் கூறுகின்றார். விவேகர் மெய்யுணர்ந்தோர். கவ்வை - முழக்கம். வயிரமலை - மிக்க வன்மையுடைய மலை. புலால் நாறும் இயல்பிற்றாதலால் உடம்பைப் புலையுடல் என்று கூறுகின்றார். உடலின் மானம் - உடல் மேலுள்ள ஆசை. எவ்வமுறு சிறியனேன் - குற்றமுடைமையால் சிறுமை யுடையனாகிய யான். ஏழைமதி - குறையறிவு. என்னமதி - எத்தகைய அறிவு. ஞானத்தால் வீடு பேறு எய்துவது இயல்பாதலால் - “எந்தவகை யழியாத இன்பநிலை கண்டு மகிழ்வேன்” என வருந்துகின்றார்.

      இதனால், தமது அறிவின் குறைபாடு கூறி, இன்பநிலை பெறுந் திறம் இல்லாமையெண்ணி வருந்தியவாறாம்.

     (8)