பக்கம் எண் :

2599.

     ஒளிமருவும் உனதுதிரு அருள்அணுத் துணையேனும்
          உற்றிடில் சிறுது ரும்பும்
     உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
          உயர்மறைகள் ஓர்அ னந்தம்
     தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
          தியானம் இல்லா மல்அவமே
     சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
          சேராமை எற்க ருளுவாய்
     களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
          கருணைதரு கலாப மயிலே
     கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
          கலைகி ளரவளர் அன்னமே.
     அளிநறைகொள் இதழிவனை தில்லைஅம் பதிமருவும்
          அண்ணலார் மகிழும் மணியே
     அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
          வானந்த வல்லி உமையே.

உரை:

      இன்பம் பொருந்திய இமயமலைக் கரசன் மகளாய் எழுந்தருளும் உமையம்மையாகிய அருள் வழங்கும் தோகை மயில் போன்றவளே, நினைந்து போற்றும் அடியார்களின் மனமாகிய தாமரை மலரின் கண், உலகில் அருட் கலை சிறந்தோங்க வீற்றிருந்தருளும் அன்னமே, வண்டினம் படிந்து தேனுண்ணும் கொன்றை மாலையணியும் தில்லைப்பதியில் உள்ள, அண்ணலாகிய சிவனோடிருந்தருளும் மரகத மணி போல்பவளே, அண்டங்களனைத்தையும் அவற்றிலுள்ள சராசரங்களனைத்தையும் படைத்தளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமாதேவியை, ஒளி பொருந்திய நினது திருவருளின் ஓர் அணுவளவு தோயினும் சிறு துரும்பும் உலகங்களைப் படைத்தல் முதலிய முத்தொழில்களையும் செய்ய வல்லதாம் என உயர்ந்த வேதங்கள் அனைத்தும் யாவரும் தெளியும்படி, எடுத்துரைப்பதால் அதனைக் கேட்டும் நினது திருவடியை எண்ணாமல் வீணாகச் சிறு தெய்வங்களின் சிறு நெறிக்கண் நிற்கும் மக்களினத்துப் பேய்களொடு கூடாமல் விலகியொழுகுமாறு எனக்கு அருள் செய்வாயாக. எ.று.

          களி - இன்பக் களிப்பு. இன்ப வடிவினளான உமாதேவியிருப்பதால் எவ்வுயிரும் இன்புறும் தூய விடமாதல் கண்டே, “களி மருவும் இமய வரை அரையன் மகள்” என்று புகழ்கின்றார். மயில்கட்கு மலை உறை விடமாதலால், இமயமலையிடத்து வாழும் “கலாப மயிலே” எனவும், ஏனை மயில்களின் வேறுபடுத்தற்குக் “கருணை தரு கலாப மயிலே” எனவும் உரைக்கின்றார். கலாபம் - தோகை. உமையம்மை திருவருட் சத்தியாதலால் அடியவர்கள் அவளைத் தம் மனத்தின்கண் வைத்துத் தியானிக்கும் இயல்புடையராதலால், ”கருதும் அடியவர் இதய கமல மலர் மிசை வளர் அன்னமே” என்றும், அன்னப் புள் தாமரை மலரில் இருப்பது என்பவாகலின் “இதய கமல மலர் மிசை வளர் அன்னமே” என்றும், அங்ஙனம் எழுந்தருளுவதால் விளையும் பயன் இது வென்பார். “அருட் கலை கிளர வளரன்னமே” என்றும் இயம்புகின்றார். அளி - நறை, தேன். இதழி - கொன்றை மலர். இறைவன் திருவருள் ஞானவொளி மயம் எனச் சான்றோர் கூறுவது கொண்டு, “ஒளி மருவும் உனது திருவருள்” என வுரைக்கின்றார். திருவருளாவது பெறலரும் பேரருஞ் சிவசத்தியாகலின், அதன் ஆற்றலை யுணர்த்தற்கு “அருள் அணுத் துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும்” என்று கூறுகின்றார். படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழிலையும் மும்மூர்த்திகளாய் நின்று செய்வதாகலின், சிவத்தின் சத்தி “ஓர் அணுவளவு பதியின்” எனவும், பெறலருமை தோன்ற, “உற்றிடில்” எனவும், செயலற்ற அசத்தாகிய சிறு துரும்பும் காந்த சத்தி பெற்ற சிறு இரும்புத் துண்டும் பிற இரும்புத் துகளைத் தன்பால் ஈர்த்துக் கோடல் போலப் பெருஞ் செயல் புரிய வல்லதாம் என்பார், சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் வல்லதாம் என்பாராய், “சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் எனவும் கூறுகின்றார். முற்றும்மை தொக்கது, சிறு துரும்பும் இத்துணைப் பேராற்றல்களைப் பெறும் என்பதனால், மக்களுயிர் பெறக் கடவ ஆற்றல் அளப்பரிதாம் என்பது குறிப்பு. வேதங்கள் நான்கென வகுக்கப்படுமுன் எண்ணிறந்தனவாய் இருத்தன என்பவாகலின், உயர்மறைகள் ஓர் அனந்தம்” என்றும், அவையனைத்தும் திருவருளின் ஆற்றல் நலத்தை எடுத்தோதுகின்றன என்பாராய், “தெளிவுற முழக்க” என்றும், அது கேட்டும் மனம் தெளிந்திலர் என்றற்குக் “கேட்டும்” என்றும் இயம்புகின்றார். உம்மை - எதிர்மறைப் பொருட்டு. தெளிவின்மையால் சிறு தெய்வங்களை நினைந்தொழுகும் கீழ்மக்களை இகழ்ந்து, “அவமே சிறு தெய்வ நெறி செல்லும் மானிடப் பேய்கள்” என்று பழிக்கின்றார். மேற் கொள்ளத்தக்கது பரசிவானந்த உமையம்மை வழிபாடு என்றற்கு “நின் திருவடித் தியானம்” எனக் கூறுகின்றார். சிறு தெய்வ வழிபாடு கூடாதென்று விண்ணப்பிக்கின்றா ராகலின், “சிறு தெய்வ நெறி சேராமை ஏற்கருளுவாய்” எனவுரைக்கின்றார்.

     இதனால் சிவசத்தியை வழிபடும் பெருநெறியன்றிச் சிறு தெய்வ வழிபாட்டுச் சிறு நெறி தமக்கு எய்தலாகாது என வேண்டியவாறாம்.

     (9)