பக்கம் எண் :

2600.

     நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
          நெறிநின்று னக்கு ரியஓர்
     நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
          நின்னடிப் பூசை செய்து
     வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
          வித்தகர்ப தம்பர வும்ஓர்
     மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
          விரைந்தருள வேண்டும் அமுதே
     பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
          பெருமையை அணிந்த அமுதே
     பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
          பெண்கள்சிரம் மேவும் மணியே
     ஆறணிந் திடுசடையர் தில்லைஅம் பதிமருவும்
          அண்ணலார் மகிழும் மணியே
     அகிலாண்டமும்சரா சரமும்ஈன் றருள்பரசி
          வாநந்த வல்லி உமையே.

உரை:

      அமுத மயமானவளே, நற்பேறுகள் பலவுமுடைய பிரமனும் திருமாலும் இந்திரனும் அளந்தறிய மாட்டாத பெருமையையுடைய அமுதாம்பிகையே, தாமரை மலரில் எழுந்தருளும் திருமகளும், கலை பலவும் சொல்கின்ற கலைமகளும், வெற்றித் திருமகளும் பிறரும் தெய்வ மகளிர்க் கெல்லாம் முடிமணியானவளே, கங்கையாற்றைத் தாங்கிய சடையையுடைய பெருமானும் தில்லைப் பதியில் எழுந்தருள் பவருமாகிய சிவபிரான் மகிழும் மரகத மணி போல்பவளே, அண்டங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள சராசரங்களையும் படைத்தளிக்கும் பரசிவானந்த வல்லியாகிய உமாதேவியே, திருநீறணிந்து அக்கமணி பூண்டு உயர்வுடைய சைவ நெறிக்கண் நின்று, நினக்குரிய ஒப்பற்ற நின்மல நிலையை நல்கும் திருவைந் தெழுத்தை நினைவின்கண் நிலைபெறக் கொண்டு, நினது திருவடிக்குப் பூசை செய்து, தனிச் சிறப்பெய்தி, என்றும் ஒரு தன்மை பெற்ற சிவஞானச் செல்வர்களின் திருவடிகளைப் பூசிக்கும் மெய்மைச் செல்வ வாழ்வைப் பெறும் விருப்ப முடையேனாதலின், அதனை எனக்கு விரைந்தருள வேண்டுகிறேன். எ.று.

     சைவ மந்திர மாதலால், சிவாய நம என்று அணியும் திருநீற்றை “நீறணிந்து” என எடுத்துரைக்கின்றார். சிவ வேடமாய்ச் சிவத்தை நினைப்பிக்கும் சிறப்புடைமை பற்றி, “ஒளிர் அக்கமணி தரித்து” என்று கூறுகின்றார். எல்லாச் சமய நன்பொருள்களைத் தன்கண் கொண்டிருப்பது சைவ நெறியாகலின், “உயர் சைவ நெறி” என இயம்புகின்றார். “ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோ டொன் றொவ்வாமல் உள பலவும் இவற்றுள், யாது சமயம் பொருள் நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்கதின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நின்றது யாதொரு சமயம் அது சமயம் பொருணூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை யாகமத்தே அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக் கீழ் அடங்கும்” (சிவ. சித்தி. 8 : 13) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. சிந்திப்பார் சிந்தையைத் தூய்மை செய்வ தென்பதனால் “நிமல முறும் ஐந்தெழுத்து” என்றும், நெஞ்சின்கண் நிலையாக நினைக்கப்படும் நீர்மையாதாகலின் “நிலையுறக் கொண்டு” என்றும் இயம்புகின்றார். சிவபூசை செய்வார்க்குரிய நியமங்களாதலின், நீறணிதல் முதலியவற்றை முறையாக மொழிகின்றார். சிவ பூசையால் மனம் பழுத்த பெருமக்கள் மிக்க சிறப்பும் தூய ஞான நலமும் எய்தி மேன்மை யுறுவது கண்டு, “என்றும் ஒருதன்மை பெறு சிவஞான வித்தகர்” எனச் சிறப்பிக்கின்றார். சிவஞான வித்தகர் சிவமெனவே கருதி வழிபடப் பெறும் செம்மை யுடையராதலால், அவரது வழிபாடு திருவருட் செல்வம் தருவது மெய்மையாதலால் “பதம் பரவுமோர் மெய்ச் செல்வ வாழ்க்கையில் விருப்ப முடையேன்” எனவும், முக்குண வயத்தால் அவ்விருப்பம் மாறாமைப் பொருட்டு “விரைந்தருள வேண்டும்” எனவும் எடுத்துரைக்கின்றார். நிலைத்த இன்பநிலை பெற்றவர்களாதலால் திருமால் முதலிய தேவர்களைப் “பேறணிந்தயன் மாலும் இந்திரனும்” என்றும், அவர்கள் மக்களறிவினும் பெரிது அறிவுடையவராயினும், அதனால் அளத்தற் கரிய பெருமை உமாதேவிக் குண்மை தோன்ற “அறிவரிய பெருமையை அணிந்த அமுதே” என்றும் புகழ்கின்றார். பிரசம் - தேன். தேன் மிகவுடைமை பற்றித் தாமரை, “பிரச மலர்” எனப்படுகிறது. கலை பலவற்றையும் ஓதியும் ஓதுவித்தும் உயர்ந்தோங்கும் தேவியாதலால், கலைமகளைக் “கலைசொல் மகள்” எனப் போற்றுகின்றார். விசய மகள் - வெற்றித் திருமகள். சிரம் மேவும் மணி, முடிமேற் கொண்டணியும் மணி; சிரோமணி என்பதாம். ஆறணிந்திடு சடையர் - கங்கை யாற்றைச் சடை முடியிற் தாங்கும் சிவமூர்த்தி.

     இதன்கண் சிவபூசை செய்யும் வித்தகர்களின் திருவடியை வணங்கும் விருப்பம் நிறைவுற வேண்டு மென விண்ணப்பித்தவாறாம்.

     (10)