பக்கம் எண் :

2602.

     ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
          சுத்தமணியே அரியநல்
     துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
          துலங்குமணி யேஉயர்ந்த
     ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
          தானந்த மானமணியே.
     சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
          சமரச சுபாவமணியே
     நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
          நினைவிலமர் கடவுண்மணியே
     நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
          நித்யஆ னந்தமணியே
     ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
          கன்புதவும் இன்பமணியே
     அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      ஞானவொளி திகழும் மணியானவனே; அளப்பரிய இன்ப ஞானப் பொருளாகிய தூய மணியானவனே; பெறுதற் கருமை வாய்ந்து துரியத்தானத்தில் தோன்றும் மணியே; துரியத்துக் கப்பாலான அதீதத்தில் விளங்கும் மணியே; மணிவகை பலவற்றினும் உயர்ந்த இனத்து மாணிக்க மணியே; சைவ சமயத்தவர் முடிமேற் கொண்டு புகழும் மணியே; நித்திய ஞான இன்பம் நல்கும் மணியே; ஆன்மாவின் இயற்கை நிலையைக் காட்டி அதனைச் சூழ்ந்துள்ள வினையையும் போக்கித் திருவருளின் இன்பவியலைத் தந்து எவ்வுயிரையும் சமநிலையில் வைத்துப் பேணும் இயல்புடைய மணியே; நீதி யுருவாகிய மணியே; திரிபேதும் இல்லாத மணியே, மெய்யன்பர்களின் நெஞ்சின்கண் எழுந்தருளும் கடவுளாகிய மணியே, மலவிருளில்லாத தன்னியல்பான சிவவொளி திகழும் அத்துவித நித்திய ஆனந்த மயமான மணியானவனே; எப் பொருட்கும் ஆதி முதலான மணியே; அழகிய அனாதி மணியே; எனது உள்ளத்தில் அன்பு நிறைந்து இன்பம் உண்டாக்கும் மணியே; அற்புதமான ஞானாகாசமாகிய தில்லையில் ஞான மன்றில் இன்ப நடம் புரியும் மணியே, வணக்கம். எ.று.

          திருவருட் பெருஞ் சோதி முதல்வனாதலால், “சோதி மணி” என்று சொல்லுகின்றார். தூய சிவஞானப் பெரிய மாணிக்க மணியாய் ஆன்ம சைதனியத்தால் அளக்கலாகாத இன்ப மயமான சிவ மென்பார், “அகண்ட ஆனந்த சைதன்ய சுத்தமணி” எனக் கூறுகின்றார். சைதன்யம் - ஞானம் - துரியம் - உந்தித் தானம். யோக நெறியில் சிந்தைக்கப்பாலான உந்தித் தானத்தே காண்டற் கரிதாய் நலம் விளைவிப்பதாய் இலங்குவது பற்றி, “அரியநல் துரிய மணியே” போற்றுகின்றார். துரியத்துக்கப்பால் உறுவது மூலாதாரம்; அவ்விடத்து, ஞானக் காட்சிக்குப் புலனாகி ஒளிர்வது பற்றி வியப்புற்று, “துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே” என்று துதிக்கின்றார். மாணிக்க மணி வகையில் உயர்வற வுயர்ந்த மணி போல்வது விளங்க, “உயர்ந்த சாதி மணியே” எனவுரைக்கின்றார். மாணிக்கத்தியல் வகுக்குங்காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான்கிடமும், நால்வகை வருணமும் நவின்றவி பெயரும், பன்னிரு குணமும் பதினெறு குற்றமும், இருபத்தெண் வகை யிலங்கிய நிறனும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையெனமொழிப வியல் புணர்ந்தோரோ” என்று அடியார்க்கு நல்லார் (சிலப் 2 : 14: 186-7) உரைப்பதனால் மாணிக்க மணிக்குச் சாதி வகுப்பு உண்மையறிக. சைவ சமயத்துள்ளும் அகம் ஆறு கூறலின், உயர்ந்ததன் உயர்வு தோன்ற, “சைவ சமய மணியே” எனச் சாற்றுகின்றார். ஏனை மணி வகைகள் போலச் சுவையுற்று உள்ளக முடையதன்று; சத்தாயும் சித்தாயும் இன்பச் சுவையாயு முள்ளது என விளக்குதற்குச் “சச்சிதானந்தமான மணியே” எனப் புகல்கின்றார். மலவிருள் கலந்து அது காரணமாக வினை பல புரிந்து அருளொளி விழைந்து உயரும் ஆன்மாக்கள் போலின்றி, தன்னியல்பில் இயற்கைத் தூய்மையும் யாவையும் தாயென வொப்ப நோக்கும் தனிப்பண்பும் பொருந்திய சிவமாகிய மணி எனற்கு, “சகச நிலை காட்டி வினை யோட்டி அருள் நீட்டி யுயர் சமரச சுபாவ மணியே” என இசைக்கின்றார். ஆன்மாக்கள் தன்னியல்பில் சுத்த சைதன்யப் பொருளாம் தன்மையை ஞானத்தாற் காண்பித்தலும், அவற்றைப் பற்றி வருத்தும் வினையிருளைப் போக்குதலும், திருவருள் இன்ப வொளியை நல்குதலும் சிவத்தின் சமநோக்குடைமையும் இயல்பாக இருத்தலால் இங்ஙனம் இயம்புகின்றா ரென்றலும் ஒன்று. நீதி பலவும் தன்னுருவாக வுடையவன் என்றற்கு “நீதி மணியே” என்றும், ஒருகாலைக் கொருகாலை வேறுபடுதலும் மாறுபடுதலும் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத் தாதல் தோன்ற “நிருவிகற்ப மணியே” என்றும், மெய்யன்பர்களின் மனத்தின் மணியுருவாய் மானத விலிங்கமாக எழுந்தருளும் தெய்வத் தன்மை விளங்க, “அன்பர் நிலைவிலமர் கடவுள் மணியே” என்றும் உரைக்கின்றார். “வாய்மையே தூய்மையாக மன மணியிலிங்கமாக” (தனி : நேரிசை) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. சிவவொளி, இருட் கலப்பின்றிப் பிறி தெவற்றிற்கு மில்லாத ஞான வொளியாதலின், “நின்மல சுயம் பிரகாசம் குலவும்” எனவும், இரண்டறக் கலந்து நிலைத்த ஞான வின்பம் நல்குவதால், “அத்வைத நித்ய ஆனந்த மணி” எனவும் பாராட்டிக் குறிக்கின்றார். “அத்விதீயம் பிரமம்” எனச் சாந்தோக்கியமும் உரைப்பது காண்க. உருவும் அருவுமாகிய பொருளனைத்துக்கும் முதலாதல்பற்றி, “ஆதி மணி” என்றும், தன் தோற்றத்துக்கு ஒரு முதல் இல்லாதவன், என்பார், “எழில் அனாதி மணி” என்றும், அவன்பால் அன்பு செய்தற்கும் அவனது பேரன்பு இன்றியமையாதலால், “எனக்கு அன்பு உதவும் இன்பமணி” யென்றும் அன்பிலார்க்கு இன்ப நுகர்ச்சியின்மையின், “இன்ப மணி” என்றும் இயம்புகின்றார். தில்லைச் சிற்றம்பலமே ஞான ஆகாசமும் அம்பலமுமாதலால், “சிதாகாச ஞான வம்பலம்” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், சிவபரம் பொருளைப் பல்வகை மணியாகப் புனைந்து பரவியவாறாம்.

     (2)