பக்கம் எண் :

2606.

     பண்ணாரு மூவர்செயற் பாவேறு கேள்வியிற்
          பண்படா ஏழையின்சொற்
     பாவையும் இகழ்ந்திடா தேற்றுமை முடிவான
          பரமார்த்த ஞான நிலையை
     கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
          கருணைசெய் தாளாவிடில்
     கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள்அருட்
          கடவுளே கருணைசெய்வாய்
     தண்ணா ரிளம்பிறை தங்குடி மேன்மேணி
          தந்தஒரு சுந்தரியையும்
     தக்கவா மத்தினிடை பச்சையி லாம்அரிய
          சத்தியையும் வைத்துமகிழ்என்
     அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
          றன்பர் எட் பொழுதும் வாழ்த்தும்
     அற்யுத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      அருளுருவாகிய கடவுளே, குளிர்ந்த இளம்பிறை தங்கும் திருமுடி மேல் பெண்ணுருக்கொண்டு விளங்கும் சுந்தரியாகிய கங்கையையும், தகுதி யமைந்த இடப்பாகத்தே பச்சை மயில் போன்ற அருட்சத்தியாகிய உமையையும் வைத்து மகிழ்கின்ற எனக்கு, அப்பனும் அண்ணணுமாய், என்னுடைய அறிவும் அன்புமாகியவனே என்று சொல்லி மெய்யன்பர்கள் எப்போதும் வாழ்த்துகின்ற, அற்புத சிதாகாச ஞான அம்பலத்தில் ஆடல் புரிகின்ற ஆனந்த நடனமணியே, பண்ணிசை நிறைந்த திருஞான சம்பந்தர் முதலிய மூவருடைய பாக்களைக் கேட்டுவக்கும் நினது திருச்செவியில் செம்மை யறிவில்லாத ஏழையாகிய எனது சொல் மாலையையும் இகழாமல் ஏற்று, வேதங்களின் முடிபொருளான பரமார்த்த ஞானப் பொருளைக் கண்ணிற் காண அங்கையில் கொண்ட நெல்லிக் கனி போலக்காட்டி, நினது நல்லருளைச் செய்து என்னை ஆளாயாயின், கடையவனாகிய யான் ஞானத்தால் மேம்படும் திறம் எனக்கு எப்போது வாய்க்கும்; எனக்கு அதனைத் தெரிவித்தருள வேண்டுகிறேன். எ.று.

          அருளே திருமேனியாக வுடையவன் என்று ஞான நூல்கள் ஓதுவது பற்றி, “அருட் கடவுளே” என வுரைக்கின்றார். திருமுடியிற் சூடும் திங்கள் இளம்பிறையாயினும் குளிர்ச்சி மிக்குடைய தென்றற்கு, “தண்ணார் இளம்பிறை” எனவும், மிதந்து யாண்டும் ஓடாமல் நின்று திகழ்கின்றமை தோன்ற, “தங்கும் முடி” எனவும் இசைக்கின்றார். அத் திருமுடியின்கண், நீர் பெருகும் ஆறாகிய கங்கையை அழகிய பெண்ணுருவிற் கொண்டிருப்பது பற்றி “முடிமேல் மேனி தந்த ஒரு சுந்தரி” என்றும், மக்கள் மேனியில் இடப்பாகம் மென்மை யுடைமை பற்றி அதுவே அருட் சத்தியாகிய உமையம்மைக்கு உற்ற பாகமாதல் கருதி, “தக்கவா மத்தினிடைப் பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து” என்றும் இயம்புகின்றார். சுந்தரி - அழகி. பச்சை நிற மேனியும் மயிலின் சாயலும் உடையவளாதலால் உமாதேவியைப் “பச்சை மயி”லெனவும், அவள் சிவனது அருட் சத்தியாவதால் “அரிய சத்தி” எனவும் எடுத்துரைக்கின்றார். அண்ணன், பெரியவன். அண்ணா அப்பா என்பனவாக மெய்யன்பர் வாழ்த்தும் திறத்தை எடுத்தோதுவாராய், “என் அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும்” என இயம்புகின்றார். இசைப் புலமையாற் பலவேறு பண்களால் இறைவன் அருணலத்தைப் பாட்டில் அமைத்துப் பாடல் வல்லவராதலால் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் நம்பியாரூரர் ஆகிய மூவரையும் “பண்ணாரும் மூவர்” என்கின்றார். அவர்களும் தம்முடைய பண் சுமந்த பாடல்களைப் “பண்ணார் இன்தமிழ்” எனவே பெயர் கொடுத்துரைப்பர் மூவர் பாட்டுக்களையும் சிவன் பெரிதும் விரும்புவது தோன்றப் “பண்ணாரு மூவர் சொற் பாவேறு கேள்வி” எனப்புகன்று மொழிகின்றார். பண்படுதல் - செம்மை யுறுதல். சொற்பா -சொற்களாலாகிய பாமாலை. மறை முடிவு - வேதாந்தம். பரமார்த்த ஞானம் - மேலான பரம் பொருளை உணரும் உணர்வு. பிரமப் பொருளைக் காண்பது பரமார்த்தம் என்றும், உலகியலோடு ஒப்பவுரைப்பது விவகாரார்த்தம் என்றும் வேதாந்திகள் கூறலின், “மறைமுடிவான பரமார்த்த ஞான நிலை” எனவுரைக்கின்றார். பரமார்த்தம் கூறுவோர், தருக்க வாதமும் சொற்பொருள் வாதமும் செய்து பொருள் விளங்காதபடி குழப்புவது பற்றி, “கண்ணார நெல்லியங்கனியெனக் காட்டி” என வேண்டுகின்றார். பாரமார்த்திகம் எனப்படும் பிரம ஞானத்தை அறிவுக் கண்ணுக்கு விளங்கக் காட்டுவதே அருட் செயலாதல் கண்டு, “நற்கருணை செய்தாளாவிடில்” எனவும், பரமார்த்தம் பேசுவோர் பலரும் உண்மை யுணர்ந்து உரைக்கும் திறமின்றிக் காலம் கடத்துவதால், “கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள்” எனவும் வருந்துகிறார். வடலூர் வள்ளற் பெருமான் காலத்தில் பரமார்த்தமான பிரம ஞானப் பொருளைப் பேசுவோர் வடமொழியையோ தமிழ் மொழியையோ முற்றவறிந்துரைக்கும் தெளிவில்லாதவராய் இருந்தமையால், “அருட் கடவுளே கருணை செய்வாய்” என ஓலமிடுகின்றார். இந்நாளிலும் புரியாத நிலையில், வடசொற்களும் சொற்றொடர்களும் மிகப்புணர்த்து மக்கள் இனிதுணரும் தமிழ் மொழியால் தெளிவாகவுரைப்போர் இல்லா திருப்பது வருந்தத் தக்கது; சங்கரர் உரைப்பதையே உரைத்து மருட்டியும் இயற்கையறிவுக்கு ஒப்பவுரையாது குழறியும் திரிவோரே எங்கும் காணப்படுகின்றனர்.

          இதனால், வேதாந்தம் கூறும் பாரமார்த்திகப் பொருளை இனிது விளங்கிக் கொள்ளத் திருவருள் செய்யுமாறு விண்ணம்பித்தவாறாம்.

     (6)