பக்கம் எண் :

2607.

     பவமான எழுவகைம் பரப்பான வேலையிற்
          பகவான பாவி இன்னும்
     பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
          படராது மறையனைத்தும்
     உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
          உற்றதனை யொன்றிவாழும்
     உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
          உய்குவேன் முடிவானநல்
     தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
          தன்னில்நினை நாடியெல்லாம்
     தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
          தற்பரர்க ளகநிறைந்தே
     அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
          அடியேனுக் கருள்செய்குவாய்
     அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      அற்புத சிதாகாசமான ஞான மன்றில் திருக்கூத்தாடும் ஆனந்த நடன மணியாகிய சிவனே, பிறவியாகிய எழுவகைப்பட்ட பரந்த கடலிற் பசுத்தன்மையையுடைய, பாவியாகிய யான் இப்பொழுதும் இருவகைப் பற்றுக்களைக் கொண்டு அலைகின்ற சிறு துரும்பு போல அவற்றின் வழிச் செல்லாமல் வேதங்கள் யாவற்றாலும் ஒப்புரைக்கமாட்டாத சிவமாந் தன்மையை எய்தி, அதன்கண் ஒன்றி வாழும் உபாயமான நெறியிதுவாகும் என்று காண்பித்துத் திருவருள் செய்குவாயாயின், யான் உய்தி பெறுவேன்; எல்லா நெறிகளிலும் முடிந்த நெறியாகிய தவநெறி பற்றி இரண்டறக் கூடி நுகரும் இன்பக் கடலில் நின்னையே எல்லாமாய் நினைந்து, தானே சிவமாகிய சுத்த சன்மார்க்க அனுபவமுற்றுச் சாந்த சீலர்களாகிய தற்பரர்களின் மனத்தின்கண் குறைவற நிறைந்து, தன்னையொழிந்த பிற நலமெல்லாம் அவமாம் என்று கருத விளங்கும் திருவருள் இன்ப வொளியையுடைய பெருமானே, நின்னுடைய அந்தத் திருவருளை அடியவனாகிய எனக்கு அருள வேண்டுகிறேன். எ.று.

          பவம் - பிறப்பு. எழுவகையாவன : “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம், நீர் பறவை நாற்கால் ஓர் பப்பத்து - சீரிய, பந்தமாம் தேவர் பதினாலயன் படைத்த, அந்தமில் சீர்த்தாவரம் நாலைந்து” எனப் பழைய பாட்டொன்று கூறுவது காண்க. பரப்பான வேலை -அளவிறந்த பரப்பையுடைய கடல். பசுவாதல் - இயற்கையும் செயற்கையுமாகிய மூவகை மலங்களாற் பிணிக்கப்படுதல். பசு நீகாரம் எனப்படும் ஆணவ மலத்தால் இயற்கையாகக் கட்டுண்பது பற்றி ஆன்மா பசுவாம் தன்மை யுறுகிற தெனச் சிவாகமங்கள் ஓதுவதால், “பசுவான பாவி” என்று குறிக்கின்றார். மலம் காரணமாக ஏனைக் கன்மமும் மாயையுமாகிய இரண்டும் உண்டாவதால் அவை செயற்கை மலம் எனப்படுகின்றன. “செழுநவை யறுவை சாணி யுவர் செறிவித்தழுக்கை முழுவதும் கழிப்பன் மாயை கொடுமலம் ஒழிப்பன் முன்னோன்” (சிவ. சித்தி : 1:52) என்று சான்றோர் உரைப்பது காண்க. இருவகைப் பற்று : யான் எனது எனப்படுவன; இவற்றை அகப்பற்று, புறப்பற்றென இரண்டாக வுரைத்தலு முண்டு. இவற்றை வடநூலார் அகங்காரம் மமகாரம் என்பர். ஆன்மாக்கள் எய்தும் துன்பம் இன்பம் ஆகிய இரண்டும் இப்பற்றுக்களால் உண்டானவாதலால், “பசுவான யான் இன்னும் பற்றான குற்றமதையுற்று” என்று கூறுகின்றார். பற்று உற்றதால் விளைந்த பயன் இதுவென்பார், “அலை துரும்பென” எனக் காட்டுகின்றார். ஞான நூல்களில் தலைமையும் தொன்மையுமுடைய வேதங்களாலும் எடுத்துக்காட்டுக்களால் விளக்க முடியாதது சிவமாம் தன்மையுறும் சிவநிலை” என்பாராய், “மறையனைத்தும் உவமானம் உரை செய்ய அரிதான சிவநிலை” என வுரைக்கின்றார். சிவநிலையில் ஆன்மா ஒன்றியும் உடனிருந்தும் சிவபோகத்தை நுகர்வதாகலின், “ஒன்றி வாழும் உளவான வழி இது” எனவும், அது தானும் காட்டக் காணப்படுவன்றி, செலுத்தி நுகர்வித்தலன்றா மெனற்குக் “காட்டியருள் செய்யின் உய்குவேன்” எனவும் இயம்புகிறார். உய்தி - பிறவாப் பேரின்ப நிலையைப் பெறுதல். சன்மார்க்க நெறிகளின் முடிவான பொருள் சிவத்தோடு இரண்டறக் கலந்து பெறும் சிவபோக மாகலின் அதனைப் பெறும் தலையாய நெறி என்றற்கு, “முடிவான நல்தவமான நெறி” என்றும், உணர்வால் இர்ண்டாதலின்றி ஒன்றாகிச் சிவபோகம் நுகரப்படுதலால், அச்சிவயோக போகிகளை, “இரண்டற்ற சுகவாரி தன்னில் நினை நாடி எல்லாம் தானான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள்” என்றும், போகப் பொருளாகிய சிவத்தை நோக்கப் போக நுகரும் தற்பரர்களான சுத்தான்மாக்கள் பெரிதும் சிறுமையுடையராதல், சிவபோகம் அவரது அகம் நிறைந்து அடங்காது பெருகிப் பேரொளியாய்ப் பிறங்குதல் பற்றி, “அகம் நிறைந்து பெருகும் கருணைப் பிரகாச” என்றும் இயம்புகின்றார். நன்னெறியாகிய ஞானத்தை நல்குவதால், சரியை கிரியை யோகங்களாகிய தவநெறி, “நல்தவமான நெறி” எனப்படுகிறது. இரண்டற்ற சுகவாரி, நுகர்வோனும் நுகரப்படும் பொருளும் என இரண்டாகாது ஒன்றாய் உணர்வொன்றி நுகரும் இன்பக் கடல். சுக நுகர்ச்சியில் சிவமே நினைந்தொன்றுதலைச் “சுகவாரி தன்னில் நினை நாடி” எனவும், சுகானுபவத்தில் சுத்த சன்மார்க்கமே அனுபவமாய் உணர்வின்கண் அசைவின்றித் தானே தனக்குத் தலைவனும் பரனுமாய் விளங்கும் சுத்தான்மாக்களை “எல்லாம் தானான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்” எனவும் கூறுகின்றார். எல்லாம் தானாதல், பசுகரண மனைத்தும் பதிகரணமாதல். அவமான கருணைப் பிரகாசம், அருளொளியன்றிப் பிற பொருளொளியும் விருப்பும் பிறவும் வீணாம் எனக் கருதுவிக்கும் சிறப்புடைய திருவருள் ஞானவொளி அவமானம் என்பதற்கு அளவு கடந்த என்பதும் ஒன்று. மானம் - அளவு; அவமாகிய அளவென்பதாய், அளக்குமெல்லை கடந்தது எனக் கோடலும் உண்டு. மானம் குற்றமெனக் கொண்டு, அவமானமானது குற்றமின்மை என்பாரு முண்டு.

          இதனால், சிவநிலையைப் பெறும் உளவை நல்குக என வேண்டி, சுத்தான்மாக்கள் பெறும் சிவபோகானுபவமும் தெரிவித்தவாறாம்.

     (7)