பக்கம் எண் :

261.

    கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
        கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
    வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
        மண்ணின் கட்டியும் மானும் முலைக்கட்டிக்
    கிச்சைக் கட்டி யிடும்பை எனும்சுமை
        ஏறக் கட்டிய வெற்கருள் வாய்கொலோ
    பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
        பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.

உரை:

     மனைதோறும் சென்று பலி ஏற்ற பித்தன் எனப்படும் சிவபெருமானுக்கு மகனே, பெருமை தருவதால் பெரிதாகிய தணிகை மலைச் செல்வனே, கச்சணிந்து நறுமணம் மேனிக்கு ஊட்டித் தம்மைக் காமுறும் ஆடவருடைய கண்ணையும் மனத்தையும் தம்பாற் பிணித்துத் தமது வஞ்சக் கருத்தை உள்ளே கொண்டு வலிய கழற்காயும் மண் கட்டியும் போன்ற கொங்கைகளில் ஆசை வைத்து அதனால் வரும் துன்பம் என்னும் சுமையை நிரம்பப் பெற்றுக் கொண்ட எனக்கு அருள் புரிவாயோ என ஐயுற்று வருந்துகிறேன், எ. று.

     இளமை கனிந்த மகளிர் தம் மார்பில் எழும் இளங் கொங்கைகளைத் தாழாவாறு இறுக்கி நிறுத்தும் பொருட்டு அணிந்து கொள்வது கச்சு என்பதாகும். காமுகர் - காமுறுபவர்; தம்பால் காம விச்சை கொள்ளும் ஆடவர். ஆடவர் கண்ணைக் கவர்ந்து தம்மையே மனத்தின்கண் நினைந்தொழுகச் செய்தற்கு நறிய வாசனைப் பொருள்களைப் பூசுதலா “கண்ணைக் கட்டி மனங்கட்டி” என்று கூறுகின்றார். உள்ளத்தில் அன்பில்லாமையும், விரும்பும் ஆடவருடைய பொருள் மேல் விருப்புடைமையும் கொண்டிருப்பதை அவ்வாடவர் அறிந்து கொள்ளாதபடி வஞ்சிக்கும் மகளிரைக் “கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம் வச்சுக் கட்டிய மகளிர்” எனவும், அவரது மார்பில் உள்ள இளமுலைகள் தொடக்கத்தில் வன்மை கொண்ட கழற்காய் போலவும் சிறிது வளர்ந்த பின் அடிபரந்து நுனி குவிந்த மண் கட்டி போலவும் இருப்பது பற்றி, “வன்கழற் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலைக் கட்டி” எனவும் மொழிகின்றார். வைத்தென்பது வச்சு என வந்தது. தசைக்கட்டி போறலின் முலைகளை, “முலைக்கட்டி” என்கின்றார். இடும்பை - துன்பம். ஏறக் கட்டுதல் - நிறைத்துக் கோடல். பலி யேற்கும் பெருமானாதலின், சிவனைப் “பிச்சைக் கட்டிய பித்தன்” என்று உரைக்கின்றார். பித்தன்-தன்பால் அன்பு கொண்டாரைப் பித்தேற்றுபவன், தன்னைப் பரவித் துதிப்பார்க்குப் பெருமை உண்டுபண்ணுவதால், “பெருமை கட்டும் பெருந் தணிகேசனே” என்று பரவுகின்றார்.

     இதனால் மகளிர் பால் இச்சை கொண்டு பெருந் துன்பமுறும் தமது புன்மை நினைந்து முறையிட்டவாறாம்.

     (10)