பக்கம் எண் :

2610.

     மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
          மாக்களாய் ஆன்மாக்களின்
     மலமொழித் தறியாத பெருவாழ் வினைத்தரும்
          வள்ளலாய் மாறாமிகத்
     திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
          தேவாய் அகண்டஞானச்
     செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
          செம்மலாய் அணையாகவெம்
     பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
          பரமபதி யாய்எங்கள் தம்
     பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
          பரமமோ க்ஷாதிக்கமாய்
     அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
          ஆர்ந்துமங் களவடிவமாய்
     அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
          ஆனந்த நடனமணியே.

உரை:

      எண்ணிறந்த வகையினவான மணிகளையுடைய இவ்வுலகமாயும், இதன்கண் எண்ணற்காகாமல் உறையும் ஆன்மாக்களாயும், அவ்வான்மாக்களை இயல்பாய்ப் பற்றியிருக்கும் மலவிருளைப் போக்கி, அழியாத பெருவாழ்வை நல்கும் வள்ளன்மை யுடையனாய்; தன்னோடு மாறுபட்ட மிகவும் வலியரான திரிபுர வசுரர்கள் எரிந்து கெடுமாறு நகைத்தழித்த தேவனாய்; அளத்தற்கரிய பெருஞானமாகிய செல்வமாய்; வேற்படையைக் கையிலேந்துகிற முருகனாய்; யானை முகத்தையுடைய தலைவனாய்; படுக்கையாகக் கொடிய பாம்பைக் கொண்ட கடவுளாகிய திருமாலாய்; ஏனைத் தேவர் எல்லாரும் தொழுதேத்தும் பரமபதியாய்; எங்கட்கெல்லாம் பரமேட்டியாய்; பரம ஞானமாய்; நாத தத்துவமாய்; மேலான மோட்சத்துக்குத் தலைமையாய்; அழகிய சுத்த நிலையிற் பெறும் அனுபவமாய்; அருட்சோதியாய் நிறைந்து மங்கல வுருவில் அற்புதமான சிதாகாசமாகிய ஞானசபையின்கண் கூத்தாடுகிற ஆனந்தநடனத்தைப் புரியும் சிவமாகிய மாணிக்க மணியே, வணக்கம். எ.று,

      உலகில் காணப்படும் மணிவகைகள் மிகப் பலவாதல் தோன்ற, “மணி கொண்ட நெடிய வுலகு” எனப் பொதுப்பட மொழிகின்றார். மணி கொண்ட வுலகமெனப் புகழ்ந்தோதியது, தன்கண் வாழும் அறிவுடைய ஆன்மாக்களை மணிகளாலான செல்வ மயக்கம் தந்து விரும்பச் செய்தற்கென அறிக. ஆன்மாக்களின் வேறாயினும், “அவையேயாய்”க் கலந்து நின்று வாழ்வித்தல் பற்றிப் பரமனை, “அதில் தங்கும் ஆன்மாக்களாய்” எனவும், அக் கலப்பால் ஆன்மாக்கள் செய்வன செயது மலவிருளின் நீங்கி “அந்தமில் இன்பத்து அழிவில் வீடு” பெறவருளும் சிறப்பு விளங்க, “ஆன்மாக்களின் மலமொழித்து அழியாத பெரு வாழ்வினைத் தரும் வள்ளாய்” எனவும் கூறுகின்றார். சிவனருட் பேற்றுக்குரிய நெறி கொள்ளாது மாறாய நெறி மேற்கொண்டு உலகுயிர்கட்குத் தீங்கு செய்தும் பிறரால் வெல்லுவதற்கரிய வலிமையுற்றும், பொன் வெள்ளி இரும்பாகிய மூன்றாலும் மூன்று மதில் சூழ்ந்த நகரமைத்துச் செருக்கியும் வானத்தே திரிந்தவர்களாதலால், திரிபுரத்தசுரர்களை, “மாறாம் மிகத் திணிகொண்ட முப்புராதிகள்” என்றும், அவர்களுடைய மதில் சூழ்ந்த முப்புரத்தையும் அவர்களின் படை வகை வலிமைகளையும் தனது முறுவல் நகைப்பிற் பிறந்த தீயால் எரித்து நீறுபடுத்திய திப்பியத் திறத்தை “முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய்” என்றும் இயம்புகின்றார். “விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந் தேத்தவே, எண்ணிலார் முப்புரம் எரியுண நகை செய்தார்” (மழபாடி) என ஞானசம்பந்தர் கூறுதல் காண்க. முருகப்பெருமானை ஞானமூர்த்தி என்பதுபற்றி, “அகண்ட ஞானச் செல்வமாய்” எனவும் அருட்சத்தியை வேற்படையாகக் கையில் ஏந்துதலால், “வேலேந்து சேயாய்” எனவும் புகல்கின்றார். சிவனே முருகனாய் விளங்கும் திறம் கூறியவாறாம். அகண்டம் - அளப்பரியது. கயம் - யானை; அதனால் ஆனை முகப் பெருமனைக் “கயானைச் செம்மலாய்” என வுரைக்கின்றார். “செம்மலாய்” என்றது ஆயவன் சிவன் என்றற்கு. பாம்பைப் படுக்கையாகக் கொண்ட கடவுள், திருமால். கடவுள், தெய்வம் என்னும் பொருளில் வந்தது. தேவரெல்லாம் தொழ நின்ற தேவதேவனாதலால், சிவனைக் “கடவுளரெலாம் தொழும் பரமபதியாய்” என்கின்றார். பரமபதி - மேலான தலைவர். “தொழப்படும் தேவர் தொழப்படுவான்” (தனி) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. மானிட வுருவில் பரமகுருவாய்த் தோன்றித் தீக்கையும் ஞானமும் நல்குதலால், “எங்கள் தம் பரமேட்டியாய்” என்றும், அவனருளும் பரஞானமும் பரம்பொருளும் அவனே என்றற்குப் “பரம போதமாய்” என்றும், நாதம் - நாத தத்துவர்; அது ஞான மயமாய்ச் சிவனெனப் படுதலின், “நாதமாய்” என்றும் உரைக்கின்றார். பரம இஷ்டன் எனபது பரமேஷ்டியாகித் தமிழிற் பரமேட்டியாயிற்று. சிவன் முதலிய மூவரையும் தனித்தனியே பரமேட்டி என்பது வழக்கு. போதம் - ஞானம். நாத தத்துவம் - சுத்த மாயையின் உச்சியிலுள்ள சிவதத்துவம்; இங்கே சிவம் ஞானமயமாய்த் தோய்தலின் இவ்வாறு குறிக்கப்படுகிறது. “ஞானமேயானபோது சிவன்” (சிவ. சித்தி : 1 : 65) என்பது காண்க. முத்தி யுலகிற்கு முதல்வனாதலால், “பரமமோட் சாதிக்கமாய்” எனக் கூறுகிறார்.

          ஆதிக்கம் - அதிகாரம்; தலைமையுமாம். சுத்தாவத்தையுற்ற ஆன்மா பெறும் சிவானந்தானுபவம் “சுத்த அனுபூதி “ எனவும், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியாதலால், “சோதியாய்” எனவும் இயம்புகிறார். ஆர்தல் - நிறைதல். மங்கள வடிவம் -சிவ மூர்த்தம். “சிவனாய மூர்த்தி அவனாம் நமக்கோர் சரணே” (தசபுரா) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பது அறிக:

          இதனால் பரசிவத்தின் பரமாம் தன்மை முதல் சிவமூர்த்த வியப்பீறாகக் கூறியவாறாம்.

     (10)