பக்கம் எண் :

5

5. எதிர்கொள் பத்து

 

      கைக்கிளைத் திணையில் ஆடவனொருவன் நங்கையொருத்தியின் கவின் கண்டு கருத்திழந்து பேசுவதும், நங்கையொருத்தி காட்சி நலமுடைய கட்டழக னொருவனைக் கண்டு காதலுறுவதும் பேசப்படும். காதலிக்கப்பட்டார் கருத்தறியாமல் காதலர் உள்ளத்தில் தோன்றும் காதல் ஒருதலைக் காதலாகும். இருவரும் ஒருவரையொருவர் கருத்தறியாமல் காதல் வேட்கையுற்று வருந்துவது இதன்கண் நிகழும் செயலாகும். சிவபெருமானைக் கண்ட நங்கை காதலன்பு மீதூர்ந்து அவனையே பலபட நினைந்து நினைந்து வருந்துகிறாள். நினைவு மிக்கவள் பெண்மைத் தன்மையால் அவன்பால் நேரிற் சென்று காண்டலும் உரையாடலும் கூடாமையால் வருத்தம் மிகுகின்றாள். இளமைப் பருவம் துடிப்பு மிகுந்து அவளை அலைக்கின்றது. காட்சி யாசையால் கையறவு கொள்கிறாள்.  இரவின்கண் கனவு தோன்றி அவட்குக் கலக்கம் விளைவிக்கின்றது. பல்வகைக் காட்சிகளாலும் சொல்லாட்டுக்களாலும் செயல்வகைகளாலும் மறந்தொழியும் மனம் இரவின் கண் தனித்துறும் நிலையால் காதல் நினைவு மிகுந்து கனவுக் காட்சிகளைக் காட்டுகிறது. காதலனை மெய்போலக் காட்டி அவனை மெய்யுறத் தீண்டுவது போலவும் உரையாடுவதுபோலவும் பூவும் பிறவுமாகிய இன்பப் பொருள்களைப் பரிமாறிக் கொள்வதுபோலவும் காட்சிகள் தோன்றி அவளது உறக்கத்தைக் கெடுக்கின்றன. கனவிற் காதலனைக் கண்டபோது புலவி மேற்கொண்டு தான் அவனோடு பிணங்குவது, கூடற்கண் கையகன்று கண் விழிப்புறுவதும் கனவு நிலைகளாகின்றன. நனவில்கனவிடை நிகழ்ந்ததை நினைந்து இனிப் பிணங்குவதின்றிக் கூடற்கண் செயல்படுவது நன்றெனக் துணிந்து இன்றிரவு கனவின்கண் கண்ணுதற் பெருமான் நேற்று முன் தினங்களிற் போந்ததுபோல வருவான்; வரக்கண்டதும் புலத்தலைக்கொள்ளாமல் இன்ப அன்பு நெறி மேற்கொண்டு வணங்கி வரவேற்பேன் எனத் தனக்குட் சொல்லிக் கொள்கிறாள். இப்பத்தில் வரும் பாட்டுக்கள் இதுவே கருத்துடையவையாகையால், எதிர்கொள் பத்து எனப்படுகின்றன.

 

      பத்தி நெறிக் காதலுறவு, சிவபெருமானொடு மேவுவதால், அப் பெருமானுடைய குணநலன்கள் இப் பத்தின்கண் ஓதப்படுகின்றன. சிவன் மோன நெறி முதல்வன்; அன்பு செய்யத் தலையளிப்பதும் அருள் புரிவதுமுடையன்; பொருள்கட்கு ஆதியாதலும், தனக்கு ஆதியந்தமின்மையும் உடையவன்; தொண்டர்க்குத் தூதாம் எளிமையும், உயிர்கட்குத் துன்ப நீக்கிச் சுகம் தருவதும், எல்லார்க்கும் நல்லவனாவதும், வினையிருள் போக்கி ஞானமருள்வதும், பார் முதல் அண்டங்களைப் படைத்தளித்தலும் இயல்பாகவுடையவன்; உணர்வார் உணர்ந்து பரவும் உண்மையன் என்பனவாகிய கருத்துக்கள் சிறப்பாக வுரைத்துப் போற்றப் படுகின்றன.

 

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2611.

     ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
          அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
     தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
          செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
     மோனந்தத் தார்பெறும் தாளந்தத் தானை
          முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
     ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
          இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

உரை:

      ஆனந்தக் கூத்தாடுபவனும், தில்லையம்பலத்தையுடையவனும், அற்புதமான தேன் போன்றவனும் எங்கள் ஆதி முதல்வனும், தேன் மிக்குறும் கொன்றை மலர்மாலை சூடிய சிவந்த சடையை யுடையவனும், சிவந்த கண்களையுடைய எருதை யூர்தியாகவுடையவனும் எமக்குக் கண்மணி போன்றவனும், மவுன யோகத்தின் முடிவு கண்ட பெரியோர்கள் பெறுகின்ற பதமுத்தியின் அந்தமாகிய முத்தியை யுடையவனும், முத்தி நல்குபவனும், முத்திப் பேற்றுக்குக் காரணமானவனும்; முத்துப் போல்பவனும், என்பாற் குற்றம் பொருந்தாதவாறு என்னைத் தன்பால் ஏற்றுக்கொண்டவனுமாகிய சிவபெருமானை இன்றிரவு கனவிற் கண்டு எதிர்கொள்ளாதொழியேன். எ.று.

      நங்கையொருத்தி சிவபெருமான்மீது ஆராக் காதலுற்று வருந்துகிறாள். பகல் முழுதும் அவனை நினைந்து நினைந்து உருகுகிறாள். பகற் போதில் யான் அப்பெருமானைக் காணவில்லை யெனினும் இரவிலேனும் கனவிற் கண்டு எதிர் கொண்டு இன்புறுவேன் எனத் தன் தோழிக்கு உரைக்கின்றாள். தில்லையம்பலத்தில் அப்பெருமானைக் கூத்தாடும் நிலையிற் கண்களாற் கண்டுளா ளாதலின் “ஆனந்தக் கூத்தன்” என்றும், “அம்பலத்தான்” என்றும் எடுத்த எடுப்பிலே இயம்புகின்றாள். காண்கின்ற கண்ணும் கருதும் மனமும் இன்பம் நிறையத் தோன்றலின், இறைவனது திருக்கூத்தை, “ஆனந்தக் கூத்து” என்றும், அக்கூத்தை யாடும் அரங்கமும் அவனதாகலின், அதுவும் அவனைக் கண்டாற் போல இன்பம் தருதலால், “அம்பலத்தான்” என்றும் கூறுகின்றாள். கூத்தும் அம்பலமும் இடத்து நிகழ்வும் இடமுமாய் இயைந்து தரும் இன்பம் உலகிற் காணப்படாத தேனினும் மிக்கிருத்தல் விளங்க, “அற்புதத் தேன்” என அறிவிக்கின்றாள். பிரான் - தலைவன். ஆதி முதல்வன் என்பது கருதி “ஆதிப் பிரான்” என இசைக்கின்றாள். தேனந்தக் கொன்றை, தேன் நந்து அக் கொன்றை எனப் பிரிந்து, தேன் மிக்குப் பெருகும் அந்தக் கொன்றை மலர் என வரும். சிவனுடைய செஞ்சடையிற் சூடிய கொன்றை மலர் மாலை அப்பெற்றியதாய் உளது என்பாளாய், “தேனந்தக் கொன்றையஞ் செஞ்சடையான்” என்று சிறப்பிக்கின்றாள். சிவன் ஊரும் எருது திருமால் என்பவாகலினாலும் திருமாலின் கண்கள் இயல்பாகவே சிவந்தவையாதலாலும், “செங்கண் விடையான்” எனவும், அவன்பால் உளதாகிய காதலன்பின் பெருக்கத்தாற் பிறக்கும் பெருமிதம் பற்றி, என் கண்மணி போல்பவன் என்னாமல், “எம் கண்மணி” எனவும் இசைக்கின்றாள். மோன அந்தத்தார் என்பது மோனந்தத்தார் என்று வந்தது. மௌனம் மோன மெனவும், மௌனி - மோனியெனவும் வழங்கும். “மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றமே” என ஞானசம்பந்தர் உரைப்பர். மோன யோக மேற்கொண்டு முற்றி அதன் முடிவிலிருக்கும் முனிவரரை, “மோனந்தத்தார்” என்றும், அவர் பெறற்குரிய சாரூப பதத்தின் முடிவிடத்தே சிவன் எழுந்தருளுதலால், “மோனந்தத்தார் பெறும் தானந்தத்தான்” என்றும் கூறுகின்றாள். தான அந்தத்தார், தானந்தத்தார் என வந்தது. தானம் - பதம். முத்தி முதல்வனை “முத்தன்” என்பது மரபு. முத்திப் பேற்றுக்கு ஏதுவாகிய சிவஞானம் நல்குவதால் சிவனை “முத்தியின் வித்தன்” என மொழிகின்றாள். வித்தாகியவன் வித்தன் எனப்படுவ தாயிற்று. முத்து -ஆகுபெயர். ஈனம் - குற்றம். ஞானத்திலும் ஒழுக்கத்திலும் குற்றம் குறைவு உண்டாகாமல் காத்தாண்டமை புலப்பட, ஈனம் தக்காது எனை ஏன்று கொண்டான்” எனவும், நனவின்கண் என்பால் வாரானாயினும் கனவின்கட் போதருவனாதலால் இன்று இரவு கனவின்கண் அவனைக் கண்டு காதல் வெம்மை குளிர எதிர் கொண்டு ஏற்று மகிழ்வேன் என்பாளாய், “இன்றை இரவில் எதிர்த்து கொள்வேனே” எனவும் சொல்லுகின்றாள்.

      இக்கருத்தே பொருளாக இப்பத்திலுள்ள பாட்டனைத்தும் அடுக்கி நிற்பதலால், ஒரு பொருள் மேல் பத்தடுக்கி வந்த பத்து என அறிக. வாழாப் பத்து, அருட் பத்து என மணிவாசகர் பாடியிருப்பது காண்க.

     (1)