2612. அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
கண்ணுத லானைஎம் கண்ணாக லானை
எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானே
இன்றைஇ ரவில்எ திர்த்துகொள் வேனே.
உரை: தன்னுடைய திருவருளை நயந்து அடியடைபவர்க்கெல்லாம் அருள் நலம் தருபவனும், அம்பலத்தில் ஆடல் புரியும் கூத்தப்பிரானும், எங்கட்குப் பெருமானும், நில்லாப் பொருள் மேற்செல்லும் எமது கருத்தைத் தடுத்து நிலைத்த தன் அருட் செல்வம் பெறுமாறும் ஆண்டு தன்பால் செய்தற்குரிய அன்பை அளித்தவனும், சங்கரனும், எனக்குத் தந்தையும் தாயுமானவனும், விடம் தங்கித் தோன்றும் நீல மணி போலும் கழுத்தை யுடையவனும், கண் பொருந்திய நெற்றியையுடையவனும், என் கண்களினின்றும் நீங்காதவனும், துன்பக் குழியினின்றும் விடுவித்து எடுத்து இன்பக் கரையிடத்தே வைத்தவனுமாகிய சிவபெருமானை இன்று இரவு கனவிற் கண்டு அன்புடன் எதிர் கொண்டு மகிழ்வேன். எ.று.
தன்னுடைய திருவருள் ஞான வின்பத்தைப் பெற விரும்பி அன்புடன் அடைந்தவர்க்கு அவர் விரும்பியவண்ணம் நல்கும் சிவனது அருணலத்தை “அடுத்தவர்க் கெல்லாம் அருள் புரிவான்” என்றும், உலகியல் இன்பம் நிலையின்றி மாறுமியல்பிற்றாதலை யுணராது அதன் மேற் செல்லும் செலவைத் தடுத்து மெய்யறிவு தந்து தன்னை நினைவித்து ஆன்மாக்களை யுய்யக் கொள்ளும் இயல்பினனாதலை, “தடுத்தெமை ஆண்டுகொண்டு அன்பளித்தான்” என்றும் உரைக்கின்றாள். இன்ப நினைவைத் தடுத்தமைக்கு வெகுளும் உள்ளத்தில் வெறுப்புண்டாகாவாறு தடுத்தாண்ட தன்பால் அன்பு தோன்றுவித்தமை பற்றி “அன்பளித்தான்” என விளக்குகின்றாள். அவன் அருளினா லன்றி ஆன்மாக்கட்கு அவன் பால் தோன்றுதலும் சிறத்தலும் இல்லையாம் என்பதாயிற்று. இவ்வண்ணம் அன்பளித்த தலைவன், இன்பத்துக்கு மறுதலையான துன்பத்தில் தோயந்த ஆன்மாக்களை அத்துன்பப் படுகுழியினின்றும் கரையேற்றி இன்ப வாழ்வில் உய்ப்பது புலனாமாறு, “எடுத்தெனைத் துன்பம் விட்டு ஏற வைத்தான்” என இயம்புகின்றாள். சங்கரன் - சுகத்தைச் செய்பவன். கடு - விடம். ததும்புதல் - மிக்கு விளங்குதல். மணிகண்டம் - நீலமணி போலும் நிறமும் ஒளியுமுடைய கழுத்து. கண்ணுதல் - கண் பொருந்திய நெற்றி. கண்ணகலான் - கண்ணினின்றும் நீங்காதவன்.
இதனால், அருள் புரிபவனும் அன்பு அளிப்பவனும் துன்பத்தினின்றும் கரையேற்றி உய்விப்பவனும் ஆகிய சங்கரனைக் கனவிற் கண்டு எதிர் கொண்டு மகிழ்வேன் என்று சொல்லியவாறாம். (2)
|