2616. கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
கருணாநி தியைக்க றைமிடற் றானை
ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்த்துகொள் வேனே.
உரை: கண் பொருந்திய நெற்றியை யுடைவனும், என் கண்ணையே தனக்கு இடமாகக் கொண்டவனும், திருவருட் செல்வமே யாயவனும், கடல் விடத்தின் கறை படிந்த கழுத்தை யுடையவனும்; ஒளி திகழும் நெற்றியையுடைய உமையம்மையாகிய தேவி பொருந்திய இடப்பாகத்தை, யுடையவனும், ஒருவன் எனப்படுபவனும், ஒப்பாக ஒருவருமில்லாத உத்தமனும், யாவர்க்கும் நெருங்க முடியாதவனும் நாதனாகியவனும்; எத்தகையோர்க்கும் நலமே செய்யும் நல்லவனும், என்னையும் ஒரு பொருளாக எண்ணி இன்பம் தருபவனுமாகிய சிவபெருமானை இன்றிரவு கனவிற் கண்டு எதிரேற்று இன்புறுவேன். எ.று.
கண்ணுதலான் - கண் பொருந்திய நெற்றியையுடைய கடவுள். என்கண் அமர்ந்தான் -என்னுடைய கண்கள் இடமாக இருப்பவன்; என்னிடத்தே விரும்பி யுறைவன் என்றும் சொல்வதுண்டு. கருணாநிதி - கருணையாகிய நிதியானவன்; கருணை - அருள். நிதி - செல்வம். கறை மிடற்றான் - விடக்கறை பொருந்திய கழுத்தை யுடையவன்; ஒண்ணுதலாள் உமை - ஒள்ளிய நெற்றியையுடைய உமாதேவி. உமைவாழ் இடத்தான், உமாதேவி இருந்தருளும் இடப்பாகத்தை யுடையவன் என வுரைப்பினும் அமையும். ஒருவன், தன்னின் வேறொரு நிகர் இல்லாதவன்; ஒருவன் என்று சான்றோராற் புகழப் படுபவன்; “ஒருவனென்னும் ஒருவன் காண்க” (அண்டப்) என்று திருவாசகம் ஓதுகிறது. ஒப்பிலா உத்தமன் - ஒப்புக் கூறலாவதொரு பொருளும் இல்லாமல் உயர்ந்தவன். “தன்னொப்பார் இல்லாதான்” (ஆவடு) எனத் திருநாவுக்கரசர் கூறுவர். காண்டற்குரிய எல்லைக்கண் இருந்தாலன்றி நண்ணுவதென்பது யாவர்க்கும் அரிதாகலான், “நண்ணுதல் யார்க்கும் அருமையினான்” என வுரைக்கின்றாள். “காணுமா றரிய பெருமான்” (வீழி) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. நாதன் - தலைவன்; நாதமாய் விளங்குபவன் எனலுமாம். “நாதனை நாத மிகுத்து ஓசையதானவனை” (கானப்பேர்) என்பர் நம்பியாரூரர் எல்லார்க்கும் இடமளிப்பது கொண்டு, “எல்லார்க்கும் நல்லவன்” என்று புகழ்கின்றார். “நல்லார்க்கெல்லாம் நல்லவன் நீ” (571) என்று பிறாண்டும் முன்னிலைப்படுத்து மொழிகின்றார். எளியனாகிய என்னையும் பொருளாகக் கருதி இன்பம் தருகிறான் என்பாளாய், “எண்ணுதல் செய்தெமக்கு இன்பளித்தான்” என வுரைக்கின்றாள். “உண்ணின்றுருக உவகை தருவார்” (பரசூர்) என ஞானசம்பந்தர் நவில்வர்.
இதனால் இறைவன் எல்லார்க்கும் நல்லவனாய் யாவரையும் நன்கெண்ணி இன்பளிப்பவனாய் விளங்கும் திறம் தெரிவித்தவாறாம். (6)
|