பக்கம் எண் :

2620.

     குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
          கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
     மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
          வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
     பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
          பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
     எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
          இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

உரை:

      அன்பராயினார் செய்யும் குற்றங்களை யெல்லாம் குணமாகக் கொண்டு பொறுப்பவனும், அம்பலத்திற் கூத்தாடுபவனும், உமாதேவியாகிய பெண்ணைத் தன் மேனியில் இடப்பாகத்தே கொண்டவனும், அன்பிலாராகிய பிறர் அனைவருக்கும் பெறற் கரியவனும், அன்புடன் வழிபடுவேராக்கு மிகவும் எளியனாய் அருள் செய்பவனும், எருதேறும் பெருமையையுடைய தலைவனும், பிறைமதி தங்குகிற முடியை யுடையவனும், பெருமானும், எம்மையுடையவனும், என் துன்பங்களைப் போக்கி இனித் தாக்காவாறு ஒழித்தவனுமாகிய சிவபெருமானை இன்றைய இரவில் கண்டு எதிர்கொண்டு வரவேற்று மகிழ்வேன். எ.று.

          உயிர்கள் செய்யும் குற்றங்கட் கெல்லாம் காரணம் மலமாயை கன்மங்களின் மயக்க மென்பதை இறைவன் நன்கறிந்தவனாதலின், குழந்தை செய்யும் குற்றத்தைத் தாய் பொறுப்பது போலப் பொறுத்தாள்கின்றா னென்பாளாய், “குற்ற மெல்லாம் குணமாக்கொள்வான்” எனக் கூறுகின்றாள். மல முதலியவற்றின் புணர்ப்பால் உளவாகிய குணமென நினைத்தல், குணமாக் கொள்ளுதல் என அறிக. உயிர்கட்குரிய உலகியல் வாழ்வு நடத்தற் பொருட்டே இறைவன் திருக்கூத்து இடையற வின்றி நடப்பது பற்றி, “கூத்துடையான்” என்று உரைக்கின்றாள். “மாயைதனை யுதறி, வல்வினையைச் சுட்டு மலம், சாய வமுக்கி யருள் தானெடுத்து - நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான் “ (உண். விளக். 37) எனச் சான்றோர் உரைப்பது காண்க. திருக்கூத்தை நினைக்குமிடத்து, உமையம்மையதனைக் கண்டு தன் காட்சியினால் பயன் விளைக்கின்ற திறம் உடன் நினைக்கபடுமாறு விளங்க, “பெண் கூறுடையான்” எனப் புகழ்கின்றாள். “கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடையுமையவள் காண ஆடிய அழகா” (வடதிருமுல்லை) என்று நம்பியூரர் நவில்கின்றமை ஈண்டு நினைவு கூரற் பாலது. அன்புடைமை சிவஞான மாதலின், அஃது இல்லார்க்குச் சிவனருட் காட்சி எய்தாதாகலின், “மற்றவர் யார்க்கும் அரியவன்” என்கின்றாள். “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞான முண்டார்” (ஞானசம். புரா) எனச் சேக்கிழார் தெரிவிப்பர்.“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன்” என்பதனால், “வந்திப்பவர்க்கு மிக எளியன்” எனவுரைக்கின்றாள். “அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன்” (இடைமருது) என்பர் ஞானசம்பந்தர். “பெற்ற மூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மான்” (பிரமபு) எனப் பெரியோர் புகழ்தலின், “பெற்றம தூரும் பெரிய பிரான்” எனப் பரவுகின்றாள். பெற்றம் -எருது - “பெரும் பெருமான்” என்றெல்லாம் சான்றோர் போற்றுவ துண்மையின், “பெரிய பிரான்” என்பது இயல்பாயிற்று, பெருமான், பெம்மான் என வரும். “பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்” (அம்மா) என்பது திருவாசகம். எம்மான் - எம்மையுடையவன்; “இன்னதன்மையன் என்றறி யொண்ணா எம்மான்” (ஆரூர்) என்று நம்பியாரூரர் புகல்வது காண்க. துன்பத்தை வேரொடு களையுமாறு தோன்ற “என் துன்பமெல்லாம் சாலால் எற்றி ஒழித்தான்” எனவுரைக்கின்றார். எற்றுதல் - தள்ளிப் போகச்செய்தல். “தொழுவார் தங்கள் உறுநோய்கள் தள்ளிப் போக அருளும் தலைவன்” (வெண்காடு) என ஞானசம்பந்தர் வழங்குவர். மணிவாசகர், சிவனைப் “பாச வேரறுக்கும் பழம்பொருள்” (பிடித்த) எனத் திருவாசகம் உள்ளம் உருக வுரைப்பது அறிக.

      இதனால் அம்பலவாணருடைய பெருமை எளிமை இயல்பும் திருக்கூத்தின் நோக்கமும் இயக்குமும் தெரிந் துரைத்தவாறாம்.

     (10)