பக்கம் எண் :

6

6. புறமொழிக் கிரங்கல்

 

      முன்னின்று மொழியாமல் பின்னின்று பேசப்படுவது புறமொழி; ஒளி காணுமிடத்து இருளைக் காண்பது போல நலம் காணுமிடத்துத் தீங்கு காண்பது உலகவர் இயல்பு. நலம் பேசுவோர் உளரெனில் தீங்கெடுத்துரைப்பவரும் உளராவர். அத்தீங்குரையே புறமொழியாம். இதனை, அகம் மாறுப்பட்டு முகத் தெதிர் பேசப்படாமையோடு, பொருளாக மதிக்கப்படாமையும் புலப்பட, “புற மொழி” எனச் சான்றோர் வழங்குகின்றனர். காதலிக்கப்பட்டார் பொருளாகப் பிறர் சிறிது பழி கூறினும், காதலரின் காதலுள்ளம் பொறாதாகலின், அதனை நினைந்து தொல்காப்பியர், புறமொழியை, புறஞ்சொல் மாணாக் கிளவி” எனக் குறிக்கின்றார். காதலனாகிய சிவபெருமான்பால், புறனுரை யுண்டாதல் கூடாதே யென வருந்தும் நங்கை, கூறுவது பொருளாக வரும் பாட்டுக்களின் தொகுதியாகலின், இது புறமொழிக் கிரங்கல் எனப்படுகிறது.

 

      இதன்கண், இறைவன் திருவருள் செய்யாவிடில் தன்னைப் பற்றிய வகையில் அன்பும் சொல்லும் செயலும் வேடிக்கையாகும்; விரத ஞானம் பயனிலவாம்; அயலவர் சிவவிரதத்தைக் கேலி செய்வர் என்றும், உண்ணா நோன்பு மேற்கொண்டு முயல்வோர் பொய்யராவர்; சிவவிரதம் பொய்யாம்; சிவநெறிக் கொள்கைகள் பழிக்கப்படும்; சிவவேடத்தையும் மக்கள் இகழ்வர்; சிவவிரதம் விருத்த மெனக் கைதட்டி நகைப்பர்; அருட் பேறில்லையாயின் ஈன்ற தாயும் புறக்கணித் திகழ்வாள்; உலகர், விரதிகளை நோக்கி எது பெற்றனை, சொல்லென வாதிப்பர்; யானும் மக்கள் குறை கூறுவது பொறேன் என்றும் வருந்தி மொழிகின்றார். 

கட்டளைக் கலித்துறை

2621.

     கேளனந் தான் ஒரு போதுண்
          டனைமனக் கேதம்அற
     நீளனம் தேடு முடியான்
          எதுநினக் கீந்ததென்றே
     வேளனம் போல்நடை மின்னாரும்
          மைந்தரும் வேடிக்கையாய்
     ஏளனம் செய்குவர் நீஅரு
          ளாவிடில் என்அப்பனே.

உரை:

      எனக்கு அப்பனாகிய பெருமானே, நெடிய அன்னப் பறவையின் உருக்கொண்டு தேடியும் காணாத திருமுடியையுடைய சிவபெருமான் தனக்குக் காதலியாம் நலத்தை உனக்குத் தந்தானே யன்றி, உன் மன நோய் நீங்குமாறு எதனை நினக்குத் தந்தான் என்று அன்னம் போன்ற நடையும் மின்னற் கொடி போன்ற இடையுமுடைய மகளிரும் ஏனை ஆடவரும் நீ அருளா தொழிகுவையேல் வேடிக்கையாக என்னை ஏளனம் செய்வார்களே, என் செய்வேன். எ.று.

     கேள் அனம், கேளாகிய அன்னம் என விரிந்த காதற் கேண்மையாகிய நலம் எனப் பொருள் தருகிறது. அன்னம், உண்பொருளாய் நன்மைப் பொருள் மேலதாயிற்று. நலம் பெற்றாய் என்பது அன்னம் உண்டனை எனக் குறிப்பு மொழியாயிற்று. “தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்” என வருதல் போல. கேதம் - காதல் வேட்கை; காம நோயுமாம். “கேதமற நினக்கு ஈந்தது” என இயையும். சிவனது நெடுமுடி காணும் முயற்சிக்கு வேண்டிய ஆற்றலும் வன்மையும் கொண்ட அன்ன வுருவாயது விளங்க, பிரமனை “நீளனம்” என்கின்றாள். ஒருபோது - ஒருகால். ஒருகாலத்தே நீ சிவபெருமான் அன்பளிக்கப் பெற்றாயே யல்லது, அவனது சிவானந்தத்தைப் பெறவில்லையே என்பது குறித்தற்கு “எது நினக்கு ஈந்தது” எனவும், நீ ஏமாற்றமே எய்தினை என இகழ்வர் என்பாள் “என்று ஏளனம் செய்குவர்” எனவும், இயம்புகிறாள். வேடிக்கை, வினோதம், காம நுகர்ச்சியைச் சோறுண்பதாகப் பேசுவது காமுகர் கூட்டத்துக் குறிப்பு மொழி. வேள் அனம் -விரும்பப்படும் அழகுடைமை நோக்கி, “வேளனம்” என்றும், அன்னத்தின் நடை இளமகளிர் நடைக்கு உவமம் செய்யும் மரபு பற்றி, “வேளனம் போல் நடை” யென்றும், இடைக்கு மின்னற் கொடியை ஒப்புக் கூறுவது பற்றி, “மின்னார்” என்றும் கூறுகிறாள். மைந்தர், இளமை கனியும் ஆடவர். காமச் செவ்வியுடைய பெண்களையும் ஆடவர்களையும் குறித்து, “மின்னாரும் மைந்தரும்” எனவும், அப்பருவத்தினர்க்கும் காமச்சுவை கதுவிய சொல்லும் செயலும் இயல்பாதலால், இருபாலாரும் “வேடிக்கையாய் ஏளனம் செய்குவர்” எனவும் இசைக்கின்றாள். வினோத நிகழ்ச்சியை வேடிக்கை என்பது உலக வழக்கு.

      இதனால், நீ அருள் செய்யாயாயின், என் அன்பும் மொழியும் செயலும் வேடிக்கையாகி மக்களால் இகழப்படும் என்றாளாம்.

     (1)