2629. ஆசும் படியில் அகங்கா ரமும்உடை
யான்என்றெண்ணிப்
பேசும் படியில் எனக்கு
அருளாய்எனில் பேருலகோர்
ஏசும் படிவரும் பொய்வேடன்
என்றதை எண்ணிஎண்ணிக்
கூசும் படிவரு மேஎன்செய்
கேன்என் குலதெய்வமே.
உரை: என் குலதெய்வமே, குற்றமும் ஒப்பற்ற அகங்காரமும் உடையவன் என்று கருதிக் கண்டோர் தம்மிற் பேசிக்கொள்ளும் நிலையில் நீ எனக்கு உனது அருளனுபவத்தை நல்காயாயின், பெரிய இவ்வுலகத்தவர், என்னை ஏசியிகழும் பான்மை எனக்கு எய்துமே, பொய்வேடம் புனைபவன் என்று உரைப்பதப் பன்முறையும் நினைந்து நாணும் நிலைமை வந்து விடுமே; இதற்கு என்ன செய்வேன். எ.று.
ஒரு திரளாக வின்றி இனம் இனமாகப் பிரிந்து வாழ்தலால், இனத்தைக் குலமென்றும், இனத்தவர் வழிபடும் தெய்வத்தைக் குலதெய்வமென்றும் கூறுவது இயல்பாதலால், சைவ இனத்தார் பரவும் சிவமூர்த்தத்தைக் “குல தெய்வமே” எனக் குறிக்கின்றார். திருவருள் தனக்கு எய்தாவிடின் வரும் ஏதங்களை நினைந்து வருந்துகின்ற வடலூரடிகள், அருளை நினையாமல், பிறர் குற்றம் கண்டும், அவர் முன் அஞ்சாது தலை நிமிர்ந்து செல்லும் பிறரது திறம் கண்டும், இவன் குற்றம் மிக்கவன், இவன் அகங்காரி என்றும் பேசுவது மக்களுலகியல். அதனை “ஆசும்படியில் அகங்காரமும் உடையான் என்று எண்ணிப் பேசும்படி” எனக் கூறுகின்றார். படியிரண்டனுள் முன்னது ஒப்பு, பின்னது மக்களுலகம். மக்களுலகம் ஒருவன் வாழ்ந்தாலும் பொறாது வீழ்ந்தாலும் பொறாது என்பதற் கொப்ப, பிறரை நோக்காது தம் கருமம் செய்தொழுகும் பெரியோரைக் காணினும், குற்றம் மிக்கவனாதலால், நம் கூட்டத்தை நாடுகிறானில்லை; அகங்கொண்டவனாதலால், பிறரை மதிக்கின்றானில்லை என மனத்திற் கொண்டு பேசுவது இயற்கையாயிருத்தலால், “ஆசும் அகங்காரமும் உடையா னெ்றெண்ணிப் பேசும்படி” என வுரைக்கின்றார். இது பொருளியல் வாழ்வு; இவ்வாழ்வினின்றும் நீங்கி அருளியல் வாழ்வை எனக்கருளுக என்று வேண்டுகிற வடலூரடிகள், அருளா தொழியின் வரும் நிலைமையை விளக்குவாராய்; “எனக்கு அருளாயெனில்” எனவும், முன்னே சொன்னபடி உலகினர் என்னைக் கண்டு ஏசுவர் என்பார், “பேருலகோர் ஏசும்படி வரும்” எனவும் இயம்புகிறார். இங்கே படி, நிலைமை குறித்தது. மக்களின் எண்ணிக்கை பெரிதாதலால், “பேருலகோர்” என்கின்றார். “மாலற நேயம் மலிந்தவர் வேடமும்” (சிவ. ஞா. போ) பொய் மிக்க வுலகவர்க்குப் பொய் வேடமாகவும், அதனையுடையோர் பலராகவுமிருத்தலைக் காண்பார்க்குப் பெய் வேடமாகவும் தோன்றுதலால், “பேருலகோர் பொய் வேடன்” என்று புகல்கின்றார்கள். அதனைச் செவியுறக் கேட்டு மனம் புண்படும் வடலூர் அடிகள், “பொய் வேடன் என்றதை யெண்ணி யெண்ணிக் கூசும் படி வருமே” என வருந்துகிறார். தாம் பூண்ட வேடமும் அவ்வாறு எண்ணிக் கூசுவது புலப்பட, என்பதை எண்ணியென்னாமல் “என்றதை எண்ணி” என இறந்த காலத்தால், எடுத்தோதுகின்றார். உலைவாயை மூடினும் ஊர்வாயை மூடலாகாது என்பது பற்றி, “என் செய்குவேன்” “குலதெய்வமே” என்று உள்ளம் குமறுகின்றார்.
இதனால், அருள் வாழ்வு எய்தாவிடின் வரும் துன்பம் எடுத்துரைத்தவாறாம். (9)
|