பக்கம் எண் :

263.

    தாழும் கொடிய மடவியர்தம்
        சழக்கால் உழலாத் தகையடைந்தே
    ஆழும் பரமா னந்தவெள்ளத்
        தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
    ஊழுந் தியசீர் அன்பர்மனத்
        தொளிரும் சுடரே உயர்தணிகை
    வாழும் பொருளே நின்திருத்தாள்
        அடியேன் முடிமேல் வைப்பாயே.

உரை:

     நல்வினைப் பயனாய் மேம்பட்ட சிறப்புடைய மெய்யன்பர் உள்ளத்தின்கண் ஒளி செய்யும் ஞானச் சுடரே, உயரிய தணிகை மலையில் எழுந்தருளும் மெய்ப் பொருளே, கீழ்மைச் செயல்களில் கருத்தைச் செலுத்தும் மகளிரின் காமக் கலக்கத்தால் வருந்தாத தகுதி பெற்று ஆழ்ந்து நுகர்தற்குரிய பரமானந்தமாகிய கடலுள் படிந்து இன்புறும் தன்மை எனக்கு வாய்க்குமாறு நின்னுடைய திருவடிகளை அடியவனாகிய என் தலைமேல் வைத்தருளுக, எ. று.

     “தவமும் தவமுடையார்க் காக்கும்” என்ற முறைப்படி மெய்யன்பரும் முன்னை நல்வினைப் பயனால் இறைவன் பால் உண்மை யன்புடையராவர் என்பது விளங்க, அவர்களை, “ஊழுந்திய சீர் அன்பர்” எனவும், அன்பே ஞானமாதலால் அவர் மனத்தின் கண் இறைவன் ஞானக்காட்சி அருளுவன் என்பது பற்றி, “அன்பர் மனத்து ஒளிரும் சுடரே” எனவும் இயம்புகிறார். ஞானம் ஒளிப் பொருளாவது பற்றி ஞானமூர்த்தியாகிய முருகனை, “மனத்து ஒளிரும் சுடரே” எனச் சிறப்பிக்கின்றார். பரம்பொருள் என்பது தோன்றத், “தணிகை வாழும் பொருளே” என்கின்றார். நேர்மையில்லாத மனமுடையவர்களாதலின் மகளிர் கருத்துக் கீழ்மைக் கண் செல்லுதல் பற்றித், “தாழும் கொடிய மடவியர்” என்றும், அவர்பால் உளதாகும் காம வேட்கை தீமை பயப்பதால், “சழக்கு” என்றும் கூறப்படுகின்றது. அதனால், அவரை அடையும் ஆடவர் துன்புறுவதியல்பாதலால், அதனை உற்றுக் கேடுறாத மனத்திண்மை யெய்தும் பொருட்டுச் “சழக்கால் உழலாத் தகை அடைந்து” எனவும், அத்தகைமை உண்டாகாத வழி ஞானப் பேரின்பத்தை யெய்துவது இல்லாமையால், “அழும் பரமானந்த வெள்ளத்து அழுந்திக் களிக்கும்படி வாய்ப்ப” எனவும் “திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாய்” எனவும் வேண்டுகிறார்.

     இதனால் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து களிக்கும் தகைமை உண்டாகும் பொருட்டு இறைவன் திருவடியைத் தன் முடிமேல் வைத்தல் வேண்டும் என்று முறையிட்டவாறாம்.

     (2)