2630. ஐதட் டிடும்நெஞ் சகத்தேன்
பிழைகளை ஆய்ந்துவெறும்
பொய்தட் டிகல்உடை யேற்குன்
கருணை புரிந்திலையேல்
வெய்தட்டி உண்ட விரதாநின்
நோன்பு விருத்தம்என்றே
கைதட்டி வெண்ணகை செய்வர்கண்
டாய்அருட் கற்பகமே.
உரை: அருட் செல்வம் வழங்கும் கற்பகமே, சிலேத்துமம் மிக்கு உயிரிழக்கும் உடம்புடையவனும் செய்பிழைகளை யுணர்ந்து பொய்யால் மறைக்கும் மாறுபட்ட செயலுடையவனுமாகிய யான் உனது திருவருளைச் செய்யாயாயின், உலகினர் என்னை நோக்கிச் சுடுசோறே யுண்ணும் விரதத்தையுடையவனே, உன்னுடைய கொள்கை வீணாம் என்று சொல்லிக் கைகளைக் கொட்டி இகழ்ச்சி நகை செய்வரே, இதற்கு என் செய்வேன். எ.று.
வேண்டுவார் வேண்டும் பொருளீயும் தேவருலகக் கற்பகம் போலாது வேண்டுவார்க்கு அருளே வழங்கும் பேரருளாளனாதலின் “அருட் கற்பகமே” எனப் புகழ்கின்றார். ஐ - சிலேத்துமம், வாதபித்த சிலேத்துமமாகிய மூன்றனுள் ஒன்று “மிகினும் குறையினும் நோய் செய்யு” (குறள்) மாதலின், “ஐதட்டிடும் நெஞ்சகத்தேன்” என்று கூறுகின்றார். தட்டுதல் - மிக்குத் தடுத்தல். சிலேத்துமம் மிக்க போது மூச்சுத் தடைப்பட்டு, உணர்விழந்து, உயிர் உடலினின்றும் நீங்குதல்பற்றி “ஐதட்டிடும்” எனவும், நெஞ்சமாகிய கருவியை அகத்தேயுடைய உடம்புடையேன் என்றற்கு, நெஞ்சகத்தேன் எனவும் இயம்புகிறார் ஐ மேலிட்ட வழிப்பொறி புலன்கள் நெறி மாறி, உணர்வு மயங்கி அலமருதலை, “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி, அறிவழிந்திட்டு ஐ மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றருள் செய்வான்” (ஐயாறு) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. செய்பிழைகள் பிறர் அறிந்தபோது, மானக்கேடு விளைத்தற்கஞ்சி மறைக்க முயல்வது மக்கட்கியல்பாயினும், அதனைப் பொய்களால் மறைப்பது விளங்க, “பிழைகளையாய்ந்து பொய் தட்டு இகலுடையேன்” எனப் புகல்கின்றார். தட்டுதல் - ஈண்டு மறைத்தல் குறித்தது. இகல் - மாறுபடுதல்; பிழை கண்டுரைப்பாரைச் சினந்து முரணுதலுமாம். இஃது உயிர்க் குற்றமாதலின், பொறுத்தாற்றி அருளுக என வேண்டுவார், அருள் செய்க; அருளாயாயின், உலகினர் பழிப்பர் என்பாராய், “இகலுடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் கைதட்டி வெண்ணகை செய்வார்கள்” என விளம்புகின்றார். கருணை - திருவருள். உலகினர் என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது; வெளிப்படத் தோன்றாமையும் எழுவாய் வேற்றுமைக்கு இயல்பு. பழைய துண்ணாமையும், வேக வைத்தெடுத்த புதிதுண்டலும் உணவுக் கொள்கையாதலால், “வெய்தட்டி யுண்ட வீரதா” என இகழ்கின்றார்கள். வெய்து - தீயில் வெந்தமைந்த உணவு. நோன்பு - விரதம். விருத்தம் - பயனில்லாதது. கை தட்டுதல் - இகழ்ச்சிச் செயல் வெண்ணகை, எள்ளல் மெய்ப்படுத்தும் நகைப்பு; வெடிச் சிரிப்பென்பர் நச்சினார்க்கினியர் (சீவக. 258)
இதனால், திருவருள் பெறாவிடில் வெந்ததே யுண்டுலவும் விரதம் விருத்தமென உலகம் இகழும் என வருந்தியவாறாம். (10)
|