பக்கம் எண் :

7

7. திருப்புகற் பதிகம்

 

     திருவருள் ஞானம் கொண்டு அதன் இன்பத்தை நுகர்ந்து அவ்வருள் நினைவில் வாழ்வது அருள் வாழ்வு; அந்த அருள் நிலையமே உயிர்கட்குப் புகலிடமாகும்; அதனை வற்புறுத்துவது இப்பதிகம் என்பதாம்.

 

      இதன்கண், அருண் ஞானப் பேற்றுக்குத் தகுதி யுண்டு பண்ணுவது நமச்சிவாயம் என்ற திருப்பெயரின் நலமறிந்து ஓதி யொழுகுவதாகும் அதனை யருள்பவன் நீயே; அருள் தான் பெரிய பொருள்; அதனைப் பெறாவிடில் உலகவர் இகழ்வர்; ஆதரிப்பவரும் காப்பாற்றுவோரும் இலராவர். எனது நிலையைக் கண்டு இரங்குபவர் நீயல்ல தில்லை; அருள் வாழ்வு தருபவரும் நீயன்றி யில்லை; அருட் பேற்றுக்குச் செய்பிழையை நினைந்து வருந்தி, நின்னருளை நோக்கி மனம் திரும்பி வேண்டுகிறேன் என்ற கருத்துக்கள் எடுத் துரைக்கப்படுகின்றன.

 

கொச்சகக் கலிப்பா

2631.

     வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
     தேம மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
     மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
     ஏக இனிமற் றெனச்கார் இரங்குவரே.

உரை:

      கங்கையாறும் பிறைத் திங்களும் பொருந்திய சடையையுடைய ஒருவனே, வேக மிக்க நெஞ்சுற்ற மெலிவையும், எளியவனாகிய என உடம்புற்ற மெலிவையும் தெரிந்திருந்தும், நீ இப்பொழுது திருவுள்ளமிரங்கி எனக்கு அருள் புரியாவிடில், வேறே யாவர் அவ்வருளைச் செய்வார், சொல்லுக. எ.று.

      நினைவுகளால் விரைவுடன் சுழலுவது பற்றி, “வேகம் உறும் நெஞ்சம்” எனவுரைக்கின்றார். மெலிதல், வன்மை குறைதல். மன மெலியுமாயின அதனின் வேறாயினும் அதன் வழி நிற்கும் இயல்பினதாகையால் உடம்பும் மெலிவுற்ற தென்பார், “எளியேன்றன் தேக மெலிவு” எனத் தெரிவிக்கிறார். அருள் பெறாமையால் சோர்ந்தமை தோன்ற “எளியே” னென்கிறார். மாகதி, ஆகாய கங்கை. மதி, ஈண்டுப் பிறைச்சந்திரன் நதிக்குப் பெருக்கும் மதிக்குக் கலைவளர்ச்சியும் இயல்பாதலின் “மாக நதியும் மதியும் வளர்சடை” என மொழிகின்றார். ஏகன், ஒருவன்; “ஏகன், அநேகன் இறைவன் அடி வாழ்க” (சிவபுரா) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. இனி, இப்பொழுது, உன்னை யொழிய வேறு எவரையும் உணர்தல் இல்லேனாதலால் “எனக்கு ஆர் இரங்குவர்” எனக் கூறுகின்றார். “உன்னையன்றி மற்றொன்று உண்டென உணர்கிலேன் யானே” எனச் சேந்தனார் (இசைப்பா) கூறுவது காண்க.

     இதனால் அருள்பவர் நீ யல்ல தில்லை என முறையிட்டவாறாம்.

     (1)