பக்கம் எண் :

2632.

     கள்ள மனத்துக் கடையோர்பால் நானுறும்என்
     உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
     எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
     எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே.

உரை:

      கள்ளம் பொருந்திய மனத்தையுடைய கீழ்மக்கள்பாற் சென்று நாணத்தாற் சுருங்கும் என் மனமெலிவையும் தேக மெலிவையும் பார்த்திருந்தும், திருவுள்ளம் இரங்கி எவ்வளவு அருளும் செய்யாயானால் கண்டாரை இகழும் இயல்பினரான உலக மக்களிடையே என்பால் இரக்கப்படுவோர் யாவர்? ஒருவரும் இல்லையாம். எ.று.

      நெஞ்சிற் கள்ள நினைவும் சொற்களில் வேறு தன்மையும் உடையவர் கீழ்மக்களாதலால், “கள்ள மனத்துக் கடையோர்” எனப்படுவர். நெஞ்சிற் கள்ளமுடையார் கருத்து வஞ்சனை யுடையதாகலின் கீழோராதற்குக் காரணம் என்க. “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு உள்ளமொன்றி யுள்குவார்” (ஆருர்) என ஞானசம்பந்தர் மெய்யன்பரைக் குறித்துரைப்பதால் இவ்வுண்மை தெளியப்படும். தன்மையன்றி பிறர் எவர் வரினும் இகழ்வது இயல்பாகலின், அறியாது செல்பவர் உள்ளம் சுருங்கி உடல் சுருங்கி வருந்துவாராதலால், “கடையோர்பால் நாணுறும் என் உள்ள மெலிவும் உடல் மெலிவும்” எனவும், இந்நிலையில் காண்கின்றவரனைவரும் இரக்கமுடையவராகவும், நின்னிடத்தே சிறிது இரக்கமும் தோன்றவில்லையே என்பாராய், “கண்டிருந்தும் எள்ளினளவும் இரங்கி யருளாய்” எனவும், நீ அருளாவிடில், என்னைக் கண்டு இரங்குவார் ஒருவரும் இலராவர் என்பார், “உலகில் எனக்கோர் இரங்குவரே” எனவும் இயம்புகின்றார். எள், சிறுமைக்கு எல்லையாகக் காட்டப்படுகிறது. “எள்ளிருக்கின்றதற் கேனும் சிறிதிட மின்றி” (2230) என அடிகளார் பிறிதோரிடத்திற் காட்டுவது காண்க. யாரையும் எள்ளி யிகழும் கீழ்மக்கள் பெருகியது உலகமாதலால், “எள்ளும் உலகு” என எடுத்தோதுகின்றார்.

     இதனால், நீ சிறிது இரங்காதொழியினும் என்னைக் கண்டு உலகில் எவரும் இரங்க மாட்டார்கள் என முறையிட்டவாறாம்.

     (2)