2636. தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
ஏன்றுக்கொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
உரை: பிறப்பதும் இறப்பதுமாகிய சுழலின்கண் அகப்பட்டு வருந்தி மயங்குறும் தேவர்களின் இனத்தை நினைக்காமல் அருள் நிறைந்துள்ள நின்பாற் புகலடைந்தேன்; அடைந்த நாயேனை ஏற்றருள்வாயில்லையாயின், என்பால் இரக்கப்படுவார் ஒருவரும் இல்லையாம். எ.று.
தோன்றுதல் - பிறத்தல், மாய்தல் - இறத்தல். பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் மாறி மாறிச் சுழன்று வருவதுபற்றி, “தோன்றுவதும் மாய்வதுமாம் சூழ்ச்சி” எனக் கூறுகின்றார். சூழ்ச்சி - சுழலுதல். “கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி” (மெய்ப். 12) என்ற தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரை காண்க; சுழற்சி சூழ்ச்சியென வந்ததாம். மால் - மயக்கம். மாலென்னும் சொல்லடியாக வருவதோர் வினைச்சொல், “மான்று” என்பது. இவ்வாறே நிறைதற் பொருளைத் தரும் சால் என்னும் சொல்லடியாகச் “சான்று” என வருகிறது. மயக்கமுறும் தேவர் என்பது “மான்று கொளும் தேவர்” என வருகிறது. “மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்” (துருத்தி) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பிறப்பிறப்புடைமைபற்றித் தேவர்களைச் “செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள்” (முத்து) எனக் குமரகுருபரர் இகழ்கின்றார். இதனால் வடலூரடிகள், “தோன்றுவதும் மாய்வதுமாம் சூழ்ச்சி யிடைப்பட்டு அலைந்து மான்று கொளும் தேவர்” எனக் கூறுகின்றார். மரபு - இனம். திருவருளே நிறைந்த திருவுருவினனாதலால் சிவனை, “சான்று கொளும் நின்னை” என மொழிகின்றார். சரண் - புகலிடம். ஏன்றுகொளல் - வரவேற்று அருள் புரிதல். “ஈசன் தானெனை ஏன்று கொள்ளுங்கொலோ” (ஆருர்) என நவில்வர் ஞானசம்பந்தர்.
இதனால், திருவருள் சான்ற நீ ஏன்று கொள்ளாயெனில் இரங்குபவர் வேறில்லை யென முறையிட்டவாறாம்.
(6)
|