பக்கம் எண் :

2637.

     தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
     சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
     கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
     தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.

உரை:

      நாள் முழுதும் தீமையே செய்தாலும் பொறுத்தாற்றும் சாந்தப் பண்பனைத்தும் நிறைந்த அருட்செல்வன் நீயாவாய் என்று உன் திருவடியை நினைந்தடைந்த எனது குற்றமெல்லாம் ஒழியத் திருவுள்ளம் கொள்ளாயாயின், நலம் என்பது சிறிதும் இல்லாத பாவியாகிய எனக்கு இரங்கி யருள் செய்பவர் வேறே யார் இருக்கின்றார்கள். எ.று.

     தீது - தீவினை. நாள் முழுதும் தீவினையே செய்வதென்பது, நாளெல்லாம் தீதே நினைந்து தீதே மொழிந்து தீதே செய்தொழுகுதல்; மறந்தும் எவ்வுயிர்க்கும் நலம் புரியாமை எனலுமாம். செயினும், முற்றவும் செய்யாமை யுணர நின்றது. தீமையே முற்றிலும் செய்யும் குற்றவுருவினரும், நன்மையே முற்றவும் செய்யும் குணவுருவினர்க்கு இவ்வுலகம் இடமாவதில்லை; குணமே யுருவாயினார் தேவருலகிலும், குற்றமே யுருவாயினார் நரகத்தும் இருப்பவர். குணமும் குற்றமும் கலந்தவர்க்கே நிலவுலகம் வாழிடம் என்பர்: அதனால், “தீது முற்றும் நாளும் செயினும்” எனக் கூறுகின்றார். சாது - சாந்த குணமுடையவர். சூழ்தல், ஈண்டு உருவாய் நிறைவதை யுணர்த்துகிறது. தயாநிதி - தயையாகிய செல்வ முடையவன். தயை - அருள். “தயாவான தத்துவன்” (திருவாசகம்) என்று சான்றோர் சொல்லக் கேட்டு உன் திருவடியை நினைந்து சேர்ந்தேன் என்பாராய், “என்று அடைந்தேன்” என வுரைக்கின்றார். கோது - குற்றம். விலக்கத் தக்கதாதல் பற்றிக் குற்றம் கோதெனப்படுகிறது. தீர்தல் - நீங்குதல். குறித்தல் ஈண்டு மனத்திற் கொள்ளுதல் மேற்று. நலம் சிறிதும் இல்லாத பாவி யெனத் தம்மை இகழ்ந்துரைத்தலால், “நன்மை யென்பது ஏதுமற்ற பாவி” எனத் தம்மையே இகழ்கின்றார்.

      இதனால், நன்மை யேதுமில்லாத பாவியாகிய எனக்கு நீயல்லது இரக்கம் கொள்பவர் யாருமில்லை யென முறையிட்டவாறாம். 

     (7)