பக்கம் எண் :

2639.

     கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
     வாடா முலைகொடுத்த வள்ளல்என நான் அடுத்தேன்
     வாடாஎன் றுன் அருளில் வாழ்வான் அருளிளையேல்
     ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.

உரை:

      ஒப்பொருவரும் இல்லாத பெருமானே, பன்றி யொன்று பதினாறென்ற முறை மாறாமல் ஈன்ற குட்டிகள் பலவற்றிற்கும் தாய்ப்பன்றியாய்த் தோன்றி முலையாற் பாலுணவு தந்த வள்ளல் நீ யாவாய் என்று எண்ணி உன் திருவருளை நாடுகின்றேன்; அத் தன்மையனாகிய என்னை நோக்கி இங்கே “வாடா” என்று கூவி யழைத்து உன் அருளில் வாழ்தற்கு நீ அருளா தொழிகுவையானால், இவ்வுலகில் வேறே என்னை யாவர் ஆதரித் தருள்வார்கள், கூறுக. எ.று.

     ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித் தலைமைப் பெருமானாதலின், “ஈடாருமில்லாய்” என இசைக்கின்றார். “தன்னானைத் தன்னொப்பாரில்லாதானை” (ஆவடு) என்று நாவுக்கரசர் பன்முறையும் கூறுவர். பன்றி கோடாமை தரும் குட்டி என இயையும். கோடுதலாவது - முறை திறம்புதல். பன்றி பதினாறு குட்டி யீனும் என்றலின், அவ்வாறே இயலுவது தோன்றக் “கோடாமை தரும் குட்டி” என்று உரைக்கின்றார். பன்றியின் குட்டிகள் எனப் புறக்கணிக்காமல், தாயிறந்தமை நோக்கித் தானே தாய்ப் பன்றியாய் உருக்கொண்டு பால் கொடுத்த செய்தி திருவிளையாடலிற் கூறப்படுவதால், வாடா முலை கொடுத்த வள்ளல்” எனப் பரவுகின்றார். பால் வற்றாத முலை என்பார், “வாடா முலை” என்கின்றார். பன்றிக் குட்டிகள்பால் அருள் கொண்டு பால் தந்த வள்ளல் மக்களினத்து, எனக்கும் அருள்வன் என்று கருதி உன் திருவடியை உள்ளி வந்துள்ளேன் என்பார், “வள்ளலென நான் அடுத்தேன்” என்றும், அடுத்து நின்ற என்னை நோக்கி, “வாடா என்று உன்னருளில் வாழ்வான் அருள்கிலை” என்றும் சொல்லி வருந்துகிறார். வாடா என்பது தன்னின் தாழ்ந்தான் ஒருவனை அழைக்கும் வழக்குச் சொல். “வா அடா” என்பது வாடா என மருவியது. இதற்குப் பெண்பால் “வாடி” என வரும். “வருவார் அழைத்து வாடி” (4482) எனப் பிறிதோரிடத்திற் கூறுவது காண்க. வாடா என்று அழைத்து உன் திருவடி நீழலில் வாழச் செய்க என்பது கருத்து. நீ அவ்வாறு அழைத்து அருள் செய்கின்றிலை: அருளா விடில் எனக்கு இரங்கி அருள் செய்பவர் ஒருவருமில்லை என்பாராய், “அருளில் வாழ்வான் அருள்கிலையேல் எனக்கார் இரங்குவரே” எனச் சொல்லிப் புலம்புகின்றார். அருளில் வாழ்தலாவது, திருவருள் ஞானவின்பம் பெற்று நுகர்ந்திருத்தல்; “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகிய அன்னலார் சேவடிக் கீழ்” அமர்ந்திருத்தல்.

     இதனால், அருளில் வாழும் பேறு அருளாயாயின், வேறு யாவர் அதனை எனக்கு நல்குவார் என முறையிட்டவாறாம்.

     (9)