2642. கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
உரை: கல்வியறிவு இல்லாமல் கீழ்ப்பட்ட தன்மை யுடையவனாயினும் நின் திருவருட் சூழலை யடைந்து உன்னையே நினைந்து உன் திருப்பெயரை நாளும் ஓதுவதன்றி, வேறே யாதும் தெளிந்து செய்வதில்லேனாகலின், எனது கொடுந் துன்பத்தினீங்கி உள்ளம் குளிருமாறு நீ சிறிது மனமிரங்கி அருள் செய்தால், அது நன்றாகாதோ? எ.று.
கல்வி கேள்விகளால் உளதாகும் அறிவும், நற்குண நற்செயல்களுமில்லாமையால் கடைப்பட்டுப் புலைத்தன்மை யுடையனாயினேன் என்பாராய், “கற்றறியாக் கடைப்புலையேன்” என்றும், எனினும் யான் கற்றவர் விரும்பும் திருவருட் குழாத்தை யடைந்து உன் திருப்பெயரை எண்ணுவதும் ஓதுவதும் செய்கின்றேன் என்பார், “நின்றன்னை யுற்று நினைந்து ஓதுகின்றேன்” என்றும் உரைக்கின்றார். “கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” (தனி. இருக்கு) எனப் பெரியோர் கூறுதலால், கல்வியறிவை முற்பட வைத்து, “கற்றறியா” என மொழிகின்றார். நல்ல கல்வி, கற்றவனை நன்றே நினைந்தொழுகும் நல்லொழுக்க முடையனாக்குவதாக, யான் அஃதன்றிக் கீழ்மை எய்துவிக்கும் பண்பும் புலைத்தொழிலும் உடைய னென்பது விளங்க, “கடைப்பட்ட புலையேன்” என்று இசைக்கின்றார். புலைய ரினத்தைச் சேர்ந்தவரல்ல ராயினும், புலை முதலிய குற்றவினத்தைச் சேர்ந்த பொய் களவு ஆகிய குற்றங்கள் அப்புலையினத்திற் செலுத்துவதால், புலையேன் எனத் தம்மைப் பழித்துரைப்பது பொருத்தமேயாகும். பொய், களவு, கள், காமம், புலை என்ற ஐந்தையும் பெருங்குற்றம் என்று அறிஞர் தொகுத்து ஐம்பெரும் பாதகம் என்பர். கல்லா தொழியினும் ஒருவன் கற்றவர் சூழலை விரும்பி யிருப்பானாயின் ஆங்கு அவர் உரைப்பன கேட்டு நன்ஞான நல்லொழுக்கமுடைய ஞானியாகலாமாகலின், “நின்னை உற்று” எனவும், சிவன் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை மனத்தால் எண்ணி வாயால் ஓதும் ஞானநெறி கைவருதல்பற்றி, “நின்றுன்னை யோதுகின்றேன்” எனவும், அடியார் கூட்டமும் அஞ்செழுத் தோதலுமாகிய இரண்டுமன்றி வேறுள்ளவற்றைப் பொருளாக யான் மதிப்பதில்லை யென்பாராய், “மற்றேதும் தேறேன்” எனவும் இசைக்கின்றார். எய்தி வருத்தும் துன்பத்தை வேறு எவ்வகையிலும் போக்க மாட்டாமையின் நின் திருவருள் இன்றியமையாது என்ற கருத்துத் தோன்ற, “வன்துயர் தீர்ந்து” என்றும், துன்பத்தால் வெதும்பும் உள்ளம் தீர்ந்த வழிக் குளிர்ந்து இன்புறுதல் ஒருதலையாதலால், “உள் குளிர” என்றும் இயம்புகிறார். உள் - உள்ளம். தயவு - திருவருள். அருணெறியை நாவுக்கரசர் தயாமூல தன்மம் என்பதும் இக்கருத்தே பற்றி என அறிக. “தயாமூல தன்மமென்னும் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலம் கொடுக்கும் நம்பி” (நள்ளாறு) என்பது காண்க. “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்” (குறள்) என்பது பற்றி எனக்கு அருள்வது கூடாதெனக் கொள்கின்றாய் போலும் என்பாராய், “தயவு செய்தால் ஆகாதோ” எனக் கூறுகின்றார்.
இதனால், கல்லாமை புலை யொழுக்கங்கள் ஆகியன அருட்பேற்றுக்குத் தடையாதல் சிந்திக்கப்பட்டவாறாம். (2)
|