பக்கம் எண் :

2646.

     பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
     நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
     தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
     தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.

உரை:

      தாயொப்பவனே, பேயின் குணஞ் செய்கைகளை யுடையவரோடு கூடிப் பிழைகள் பல புரிந்துளேனாயினும் நாய் போன்றவனாகிய யான் நின் திருப்பெயரை அன்புடன் ஓதுகின்றேன்; நெருப்புச் சுடுவது போல் தாக்கி வருத்தும் துன்பங்களால் நான் அறிவு மயக்கி விடுவதைக் கண்டிருந்தும் சிறிதும் அருள் புரிகின்றா யில்லையே, என்ன செய்வேன் எ.று.

     பேய்க் குணமும் பேய்ச் செய்கையுமுடைய மக்களை மக்களுருவில் இருப்பதால் “பேயனையார்” என்றும், அவர்கள் பிழையாவன வல்லது செய்வ திலையாதலின், “பேயனையா ரோடும் பிழை புரிந்தேன்” என்றும் எடுத்து உரைக்கின்றார். நன்றி மறவாமை குறித்தற்கு “நாயனையேன்” என்கின்றார். சிவன் திருப்பெயரை எப்போதும் ஓதுவது சிவநெறியாளர் கொள்கை; கடலும் திரையும் போல மக்களிடையே முக்குணங்களும் கணந்தோறும் மாறி மாறி எழுந்தடங்குவதால் மறத்தலும் நினைத்தலும் தோன்றி யலைத்தவண்ண மிருத்தலின், சிவன் திருப்பெயரை ஓதிய வண்ணமிருப்பர். அதனால் “நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்” என வுரைக்கின்றார். “நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என்னாவில் மறந்தறியேன்” (அதிகை. வீரட்) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது நோக்குக. துன்பம் நெருப்புப் போற் சுடு மென்பதும் இன்பம் தண்ணீர் போற் குளிர்விக்கும் என்பதும் வழக்கு. துன்பத்தால் தாக்குண்டு அறிவு மயங்குமாறு கூறுவார், “தீயனைய துன்பில் திகைக்கின்றேன்” என்று கூறுகின்றார். துன்பம் - துன்பு என வந்தது. “துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” (குறள்) என்று சான்றோர் உரைப்பது காண்க. திகைத்தல், மருளுதல். இறைவனது பேரன்பை விளக்குதற்குத் “தாயனையாய்” என்கின்றார். தயவு - அருள்; மிக்க அன்பு எனினும் அமையும்.

      இதனால், பேயனைவரோடு கூடிப் பிழை புரியினும், நாமத்தை மறத்த லில்லாமை கூறி அருள்புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (6)