பக்கம் எண் :

265.

    ஆறாத் துயரம் தருங்கொடியார்க்
        காளாய் உழன்றிங் கலையாதே
    கூறாப் பெருமை நின்அடியார்
        கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
    தேறாப் பொருளாம் சிவத்தொழுகும்
        தேனே தணிகைத் திருமலைவாழ்
    மாறாச் சுகமே நின்திருத்தாள்
        அடியேன் முடிமேல் வைப்பாயே.

உரை:

     இன்ன தன்மைய தென்று தெளியப்படாத சிவபரம் பொருளிடத்தே தோன்றிய தேன் போன்றவனே, திருத்தணிகை மலைமேல் கோயில் கொண்டிருக்கும் என்றும் மாறாத இன்பம் தரும் பொருளே, நீங்காத துன்பத்தைத் தரும் கொடி போன்ற மகளிர்க்கு அடிமை யாளாய்க் கிடந்து இவ்வுலகில் அலையாமல், சொல்லுதற்கரிய பெருமை கொண்ட நின்னுடைய அடியார் கூட்டத்தில் கலந்து அவருடன் நின் திருமுன் சென்று மகழுமாறு நின் திருவடியை என் தலைமேல் வைப்பாயாக, எ. று.

     தெளிந்த ஞானவான்களாலும் இன்ன தன்மையது என்று உணரப்படாததாதலின் சிவபரம் பொருளைத் “தேறாப் பொருளாம் சிவம்” என்று கூறுகின்றார். “இன்ன உரு, இன்ன நிறம் என்றறிவதே லரிது” (வைகாவூர்) என ஞானசம்பந்தர் முதலியோர் உரைப்பர். சிவபரம் பொருள் சிவனாகிய திருவுருவில் நெற்றிக் கண்ணில் தோன்றி வழிபடுவார்க்கு இனியனாய் விளங்குதல் பற்றி முருகப் பெருமானைச் “சிவத்து ஒழுகும் தேனே” என்றும், தணிகை மலையில் எழுந்தருளி அன்பர்களுக்கு நிலைத்த இன்பம் தருவதால், “தணிகைத் திருமலை வாழ் மாறாச் சுகமே” என்றும் இயம்புகின்றார். தேறுதல் - தெளிதல். மாறாமை - நிலை பேறுடைமை. உடம்புள்ளளவும் நீங்காது நின்று வருத்தும் நோய்களைத் தருவதால், “ஆறாத் துயரம் தரும் கொடியார்” என்று பொருட் பெண்டிரைக் குறிக்கின்றார். கொடியார்-கொடி போல்பவர். அவர்களது உறவு கொண்டவர் தன் வயம் இழந்து அவர் வழியே சென்று அவர் உவப்பன செய்து வருந்தித் திரிதலால் அது தமது மெய்ந் நெறிக்கு இழுக்காதல் பற்றிக் “கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே” என்று விளம்புகிறார். அடியார்களின் பெருமையும் புகழும் எடுத்து ஓதற்கரியன என்பது பற்றிக், “கூறாப் பெருமை நின்னடியார்” எனவும், அவர் கூட்டம் ஞானப் பெருஞ் சூழலாய்த் தன்னைச் சேர்ந்தாரை அந்நெறிக் கண்ணே நிறுத்தி ஞான இன்பத்தில் கிடந்து மகிழச் செய்வதால், “நின் அடியார் கூட்டத்துடன் போய்க் குலாவும் வண்ணம்” எனவும், அதனைப் பெறுதற்கு முருகன் திருவடி இன்றியமையாதாகலின், “நின் திருத்தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே” எனவும் சொல்லி வேண்டுகிறார்.

     இதனால் அடியார் கூட்டத்தில் கலந்து குலாவுதற்காகத் திருவடியை முடிமேல் சூட விழைகின்றவாறு பெற்றாம்.

     (4)