பக்கம் எண் :

2655.

     பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
     குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
     உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
     கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.

உரை:

      கற்றவரும் தவச்செல்வரும் பரவும் கண் மூன்றுடைய பெருமானே, பல்வகைப் பற்றுக்கள் நிறைந்த நெஞ்சினைக் கொண்ட பாதகனாகிய யான் செய்யும் குற்றங்களனைத்தையும் பொருட்குணம் எனக் கொண்டு, மிகுதியாக வுள்ள உன் திருவருளை எள்ளளவேனும் உதவுதல் வேண்டும். எ.று.

      கற்றவர் கற்றற் குரியவும் அரியவுமாகிய நூல்களை முற்றக் கற்றவர்; கற்றதன் பயன் இறைவன் நற்றாளைத் தொழுவதாகலின், கற்றவரைக் கூறுகின்றார். நற்றவர் - நல்ல தவத்தைச் செய்தவர். நற்பயன் தரும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று செயல்களையும் நன்கு செய்தவர்கள் என்பதாம். எத்தகைய நற்செயல்களையும் எய்தும் இடையூறுகட்கும் இடுக்கண்களுக்கும் அஞ்சாமல் அயராமல் கடை போகச் செய்து முடிப்பது தவம்; அத்தவநெறிக்கண் நிற்பவர், நற்றவராவர். கற்ற நற்றவர், உம்மைத் தொகை. கல்வியும் தவமுமாகிய இரண்டாலும் நல்ல இன்பம் நுகர்பவராதலின், அது பெருகுதல் விரும்பி, கண்ணுதற் கடவுளே எனக் கைதொழுது பராவுகின்றார்களாதலால், “கற்ற நற்றவர் ஏத்தும் முக்கண்ணனே” எனப் போற்றுகின்றார். இனி இதற்குக் கற்பன முற்றக் கற்ற நற்றவர் எனப் பொருள் கூறுவதுமுண்டு. பற்று - நான் என்னும் அகப்பற்று, எனதென்னும் புறப்பற்று என்ற இரண்டு. அகப்பற்றைத் தன்முனைப்பு, தற்போதம், பசுபோதம், என்றெல்லாம் குறிப்பர். புறப்பற்று, எனது என்று தனக்குரிய பொருள் மேற் செல்லும் விருப்பு குணநலம் குறியாமல் எப்பொருள் மேலும் பெருக்கம் குறித்துச் செல்வது பற்றி இதனை மமகாரம் என வடமொழியிற் கூறுவர். நான் என முனையும் அகப்பற்றி, தீச் செயற்கும் வினை முதலாதலால், அகங்காரம் எனப்படுவதுண்டு. அகம் - பாவம். இதனால், நான் எனது இரு பற்றுக்களையும் முறையே அகங்கார மமகாரங்கள் என நூலோர் வழங்குகிறார். இப் பற்றுக்களே நிறைந்த மக்கள் வாழும் உலகில் வினை செய்தற்கும் செயப்படு பொருளின் பயனை நுகர்தற்கும் இன்றியமையாதனவாயினும், ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புற்றுப் பகைத்துத் துன்பம் செய்து கெடுதற்கும் காரணமாதலின், நல்லோர் ஆகாதனவென வுரைக்கின்றார்கள். நலம் சிறிதும் தீங்கு பெரிதும் விளைத்தலால் இவை ஆகாதவை எனப்படுகின்றன. நான் எனதென்னும் இவ்விரண்டுமில்லையெனின் நிலவுலகில் மக்கட்கு வாழ்வில்லை என்பது கருதியே இறைவன் இவ்வுணர்வுகளைப் படைத்து இயக்குகிறான் என்பாராய் மணிவாசகர் “யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாய்” (சதக) என்று சிவபிரானைப் போற்றுகின்றார். பற்று மிகுதியே பல பாதகச் செயல்கட்குக் காரணமாதலின், “பற்று நெஞ்சகப் பாதகனேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். எடுத்த உடம்பு இனிது நெடிது வாழ்தல் வேண்டிக் கணந்தோறும் மாறும் இயல்பினையுடைய குணங்களின் மாற்றத்தால் குற்றங்கள் உளவாதலை நினைந்தே, “குற்றம் யாவும் குணமெனக் கொண்டு அருள்க” என்று இயம்புகிறார். உனது திருவருளறிவு சிறிது எய்தினும் குற்றங்கள் பெரிதும் நீங்கி உய்தி பெறுவேன் என்பாராய், “உற்ற அருள் எள் துனையேனும் உதவுவாய்” என வுரைக்கின்றார். உற்ற அருள் என மாறுக. மிகுதிப் பொருளதாகிய உறு என்னும் உரிச்சொல் உற்ற எனப் பெயரெச்சமாயிற்று. உற்ற எள் என இயைத்து, சிறுமை மிகுதியாகப் பொருந்திய எள்ளென்றலும் பொருந்தும். எள்ளத்தனைச் சிறிதாயினும் தீப் பெருகிப் பேரொளி செய்தல்போல, திருவருள் ஞானம் சிறிது நல்கிடின், பெருகி மனவிருள் முற்றவும் போக்க வல்லதாம் என்பது குறிப்பு.

     இதனால் நீ நல்கும் அருள் சிறிதாயினும் நலம் பெரிது தந்து என்னை உய்விக்கும் எனத் தெரிவித்தவாறாம்.

     (5)