2662. மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
என்னப் பாஎனக் கின்அருள் ஈந்துநின்
பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.
உரை: வான மின்னைப் போன்று ஒளிரும் விரிந்த சடையையுடைய அப்பனே, எனக்கு உனது திருவருளை நல்கி, உன்னுடைய பொன் போன்றனவாகிய இரண்டு அழகிய திருவடிகளைப் போற்றி நினைக்கும் அவ்வியல்புடைய உயரிய ஒழுக்க நெறியில் என்னைச் செலுத்தி யருள்வாயாக. எ.று.
சிவ பெருமானுடைய திருமுடிச் சடை, வானத்தில் தோன்றும் மின்னற் கொடி போல் ஒளி செய்வ தெனச் சான்றோர் கூறுதலால் “மின்னொப்பாகி விளங்கும் விரி சடை” என விளம்புகின்றார். திரட்டி முடிக்காமல் விரிந்தே கிடத்தலின், சிவன் முடியிலுள்ள சடை “விரிசடை” எனக் குறிக்கப்படுகிறது. அப்பன்- தந்தை; தலைவனுமாம். திருவருள் இனிமைப் பண்பின் உருவாதலால், “இன்னருள்” என்கிறார். 'பொன்னின் நிறமும் பொற்பும் பூவின் மென்மையும் தோன்ற, 'பொன்னொப்பாம் துணைப் பூம்பதம்” என்று புகழ்கின்றார். “அவன், அருளாலே அவன் தாள்” வணங்க வேண்டுதலின், “இன்னரு ளீந்து போற்றி யுன் அப்பாங்கு” என இயைய வுரைக்கின்றார். உன் அப்பாங்கு - உன்னுகின்ற அத்தன்மை. பாங்கு - தன்மை. உயர்நெறி - உயர்ந்த வொழுக்கமாகிய பத்தி நெறி. உன்னுதல், நினைத்தல்; தியானித்தல் எனினும் அமையும். போற்றுதலும் தியானித்தலும் வழிபாட்டு முறையென அறிக. உய்த்தல் - செலுத்துதல்.
இதனால், உன்னருளாலே உன் திருவடியைப் போற்றித் தியானிக்கும் உயர் நெறிக்கண் உய்த்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (12)
|