பக்கம் எண் :

10

10. அபராத விண்ணப்பம்

 

     அஃதாவது தன்பாலுள்ள குற்றங் குறைகளை எடுத்தோதிப் பொறுத்தாற்றி அருள் செய்யுமாறு சிவபெருமானிடம் முறையிடுவது. எனினும் இறைவன் அருள் நலம் புகழ்ந்து வேண்டலும், தமது நிலைமையைக் கூறலும், தமக்கு அருளாவிடின் வரும் குறைகளும் பேசப்படுகின்றன. அவற்றுள், கலகம் நிறைந்த நினைவுகளையுடைய மனத்தனாதல், தாயும் பொறாத குற்ற முடையனாதல், தற்கொலை புரிந்து கொள்ள நினைத்தல், மனநலிவுற்றுச் சான்றோர் உறவு நாடாமை, துன்பம் சுமக்கும் தூணாதல் முதலிய அபசார வகையில் காணப்படுகின்றன; திருவருள் பெறலாமென ஏமாற்ற மெய்துவதும், மனம் போக்கிற் போவது, குற்ற முணராது அருள் பெற விழைதல், இறைவனையே நினையாமை, பலர் கண்டிகழ வருந்துதல் முதலியன அபராத மெனப் படுகின்றன; விண்ணப்ப வகையில் நடம் காண விழைதலும், ஊழ்வினை பிறவிக் கேது வாதலும், திருவடியே துணையாதல் சொல்லுவதும், நன்னெறியாளர் நலம் கண்டு பரவுவதும், வினைப் பிணிப்பு நீங்கல் வேண்டு மென்பதும் பிறவும் உரைக்கப்படுகின்றன. இவ்விண்ணப்பம் பாராயணத்துக் குரியதாதல் பற்றி அந்தாதித் தொடையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

                  அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2663.

     உலகம் பரவும் பொருளேஎன்
          உறவே என்றன் உயிர்க்குயிரே
     இலகம் பரத்தே பரம்பரமாய்
          இன்ப நடஞ்செய் எம்இறையே
     கலகம் பரவும் மனத்தேனைக்
          கைவிட் டிடநீ கருதுதியோ
     திலகம் பரவும் நுதற்பாகன்
          என்ப தருளின் திறத்தன்றே.

உரை:

      உலகனைத்தும் பரந்து நிற்கின்ற பரம் பொருளும் எனக்கு உறவும், என் உயிர்க் குயிரும், விளங்குகின்ற ஞானாகாசத்தில் மேலும் கீழுமாய் நிறைந்து இன்பத் திருக்கூத்தாடும் அரசுமாகிய சிவ பெருமானே, கலக நினைவுகள் நிறைந்த மனத்தை யுடையனாகிய என்னைக் கைவிட்டொழியக் கருதுகின்றாயோ? கருத வேண்டா; திலகமணிந்த நெற்றியை யுடைய உமாதேவியைப் பாகமாக வுடையவன், என்று உன்னைச் சொல்வது அருளாளன் என்ற கூறுபாட்டாலன்றோ? எ.று.

      உலகங்கள் அனைத்திலும் அணுப் புதைக்கவும் இடமின்றிப் பரந்திருக்கின்றான் இறைவன் என்பது கொண்டு, “உலகம் பரவும் பொருளே” என்று போற்றுகின்றார். “பாரொடு விண்ணாய்ப் பரந்த வெம்பரனே” (வாழாப்) என மணிவாசகர் உரைப்பது காண்க. பரவும் பொருள் என்றதற்குப் போற்றித் துதிக்கும் பரம்பொருளே என்றலுமுண்டு “அம்மையே அப்பா” என சிவனோடு உறவு கொண்டுரைப்பதால் “உன் உறவே” எனவும், உயிருணர்விற் கலந்து உணர்வன உணரச் செய்தலால் “உயிர்குயிரே” எனவும் இயம்புகின்றார். இலகுதம், விளங்குதல். அம்பரம் - ஆகாசம் ஈண்டுச் சிதாகாசமாகிய ஞானாகாயத்தின் மேற்று. ஞான வானத்தில்மேல் இது கீழ் இது என்றற் கின்மை பற்றிப் “பரம்பரமாய்” என்றும், உயிர்கட்கு இன்ப மெய்துதற் பொருட்டுத் திருக்கூத்து இயற்றுவது பற்றி, “இன்ப நடம்செய் எம் இறையே” என்றும் கூறுகின்றார். மனத்தின்கண் விருப்பு வெறுப்புணர்வுகளே யன்றி மாறுபட்ட எண்ணங்களும் எழுவதால், “கலகம் பரவும் மனத்தேன்” எனவும், அந்த மனமுடைமை துன்பத்துக்குக் காரணமாதல் கண்டு என்னைப் புறம்பாகத் தள்ளலாகாது என்பார், “கைவிட்டிடக் கருதியோ” எனவும் உரைக்கின்றார். அருட் சத்தியாகலின், உமையொருபாகனாய் இருப்பது திருவருள் புரியும் திருமூர்த்தம் என்பது பற்றியே “திலகம் பரவும் நுதற்பாகன் என்பதருளின் திறத்தன்றே” என இயம்புகின்றார். திலகம் பரவும் நுதல் என்பது அடை யடுத்த ஆகு பெயராய் உமையம்மைக்காயிற்று.

      இதனால், கலக நினைவு நிறைந்த மனத்தனாகிய குற்றம் பற்றி என்னைக் கைவிடலாகாது விண்ணப்பித்தவாறாம்.

     (1)