2677. வினையே பெருக்கிக் கடைநாயேன்
விடயச் செருக்கால் மிகநீண்ட
பனையே எனநின் றுலர்கின்றேன்
பாவி யேனுக் கருளுதியோ
நினையே நினையாப் பிழைகருதி
நெகிழ விடவே நினைதியோ
அனையே அனையாய் திருக்குறிப்பை
அறியேன் ஈதென் றடியேனே.
உரை: தாய் போன்ற பெருமானே, வினைகளை மிகவும் செய்து புலன்களின் ஆசை மயக்கத்தால், கடைப்பட்ட நாய் போன்ற யான் மிகவும் உயர்ந்த பனை மரம் போல வளர்ந்து கெடுகின்றேன்; பாவியாகிய எனக்கு அருள் செய்வாயோ, உன்னையே நினையா தொழிந்த குற்றம் பற்றி என்னைக் கைவிடுவாயோ, உனது திருவுள்ளம் இதுவாம் என்று அறிகிலேன். எ.று.
எவ்வுயிர்க்கும் இன்னருள் புரிவதில் தாய் போன்றவ னென்பது உணர்ந்து பரவுதலால், “அனையே அனையாய்” என்று கூறுகிறார். “அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக் கொண்ட தென்னெறும்பியூர் மலைமேல் மாணிக்கம்” என நாவுக்கரசரும், “அன்னை யொப்பாய் எனக் கத்தனொப்பாய் என்னரும் பொருளே” (நீத்தல்) என மணிவாசகரும் ஓதுவதறிக. கடை நாயேன் - கீழ்மை யுற்ற நாயின் தன்மையுடைய யான். திருவருட் பேற்றுக் குரிய நலமுடையனாதலின்றித் துன்பத்துக் கேதுவாகிய வினைவகைகளையே மிகவும் செய்துள்ளே னென்றற்கு, “வினையே பெருக்கி” என்றும், புலன்கள் ஐந்தின் மேற் செல்லும் ஆசைகள் விளைவிக்கும் மயக்கத்தில் வீழ்ந்து நெடிய பனை மரம் போல் நின்று கெடுகிறேன் என்பாராய், “விடயச் செருக்கால் மிக நீண்ட பனையே என நின்று உலர்கின்றேன்” என்றும் இயம்புகிறார். உலர்தல் - ஈரமற்றுக் கெடுதல் - விடயம் - புலன்கள் மேற்செல்லும் ஆசை. செருக்கு - ஈண்டு மயக்கத்தின் மேற்று. மிக்க வினை பாவமெனப்படுதலால் அதனை யுடைமை பற்றித் தம்மைப் “பாவியேன்” என்கின்றார். பாவம் செய்தவரை எவரும் கண்டு இரக்கப் படாராதலால், “பாவியேனுக் கருளுதியோ” என உரைக்கின்றார். நின் திருவருட் பேற்றுக்கு உரியவர், நின்னையன்றிப் பிறர் எத்தேவரையும் பொருளாக எண்ணி மனத்தால் நினையாதவர்; யான் அத்தகைய ஒருமைப் பண்பும் செயலு முடையவனல்லனாதலால், எனக்கு அருளுவது தகவாகாது எனக் கைவிட்டு விடுவாயோ என்பார், நினையே நினையாப் பிழை கருதி நெகிழ விடுவாயோ” என்றும், நினது திருவுள்ளக் கருத்து இன்னதென உணரவல்ல வனல்லன் என்பாராய், “அறியேன் திருக்குறிப்பை ஈது என்று அடியேனே” என்றும் இசைக்கின்றார்.
இதனால், நினையே நினையாப் பிழையால் நின் திருக்குறிப்பை அடியேன் அறியகில்லேன் என முறையிட்டவாறாம். (15)
|