2678. அடியேன் முடுகிச் செயும்பிழைகள்
அனந்தம் அவற்றை அந்தோஇக்
கொடியேன் நினைக்குந் தொறும் உள்ளம்
குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
செடியேன் மனமோ வினையோநின்
செயலோ செய்கை தெரியேன்வெண்
பொடியே திகழும் வடிவுடையாய்
யாது புரிவேன் புலையேனே.
உரை: வெண்ணிறத் திருநீறு விளங்கும் திருமேனியையுடைய சிவபரம்பொருளே, புலைத் தன்மையை யுடைய அடியவனாகிய யான் முற்பட்டுச் செய்த குற்றங்கள் முடிவில்லாதவை யாதலின் அவற்றை மனத்தின்கண் நினைக்கும் தோறும் குழைந்து உடல் நடுங்கி வருந்துகின்றேன்; குற்றமும் கொடுமையும் உடைய என் மனமோ, எனது தீவினையோ, நின்னுடைய அருட்செயலோ, காரணம் அறிகிலேன்; இதற்கு யான் யாது செய்வது. எ.று.
வடலூர் வள்ளல் தம்மை நோக்கும் போதெல்லாம் தாம் செய்துள்ள குற்றங்கள் நினைவில் தோன்றி வருத்துவதாலும், குற்றங்களின் மிகுதியும் கொடுமையும் மிகப் பெரியவாய் மனக்கண்ணிற் புலனாவதாலும் தம்மைக் “கொடியேன்”, “செடியேன்”, “புலையேன்” என இழித் துரைக்கின்றார். செடி - குற்றம் - குற்றங்கள் கீழ்மைப் படுத்துவதால் “புலையேன்” என்று புகல்கின்றார். குற்றங்கள் சிறியவும் பெரியவுமாய் மிகப் பலவாய் அளவுக்கடங்காமற் பெருகித் தோன்றுவது பற்றியும் அவற்றை விரைந்து எழுச்சியுடனும் செய்தமை எண்ணி, “முடுகிச் செயும் பிழைகள் அனந்தம்” எனவும், தெள்ளிய அறிவுடைய பெருமானாதலால், அவற்றைச் செய்தற்குக் காரணம் காண முற்பட்டு, அது மனமாகலாமோ, முன்னை வினைப்பயனாகுமோ, திருவருள் தானோ என ஆராய்கின்றமை விளங்க, “மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன்” என்று செப்புகின்றார். செய்கை - செய்தற்குக் காரணம். யாதானும் காரணம் பற்றியே வினையும் குற்றமும் செய்யப்படுவதால், இவ்வாறு ஆராய்கின்றார். மனம் மொழி மெய் யென்ற கரணங்களும், கண் முதலிய கருவிகளும் திருவருளின் இயக்கம் காரணமாகச் செயல் புரிகின்றன என மெய்ந்நூல்கள் ஓதுவதால், “நின் செயலோ” என எண்ணுகிறார். செயல் - ஈண்டுத் திருவருள் மேற்று. இந்நினைவுகளால் கையறவு படுவது விளங்க, “யாது புரிவேன் புலையேனே” எனப் புலம்புகிறார்.
இதனால், எய்தி வருந்தும் துன்பங்கட்குக் காரணம் தெரியாது கையறவு படுவது தெரிவித்தவாறாம். (16)
|