2679. புலையே புரியும் மனம்போன
போக்கே அல்லால் புண்ணியநல்
நிலையே அறியேன் சிறியேனுக்
கருளல் அழகோ நிறைந்தகுண
மலையே மணியே மருந்தேஎன்
வாழ்வே எல்லாம் வல்லோனே
கலையே கருதும் கழலுடையாய்
அருளா மையும்நின் கடன்அன்றே.
உரை: குணமே நிறைந்த குன்று போல்பவனே, மணியே, மருந்தாய் நலம் செய்பவனே, எனக்கு வாழ்வானவனே, எல்லாம் வல்லவனே, கலையின் உருவே, யாவரும் நினைந்து மகிழும் திருவடிகளை யுடையவனே, புலைச் செயல்களைச் செய்யும் மனம் போன போக்கிற் போவதன்றி, புண்ணிய நன்னெறி நிற்கும் இயல்பறியாத சிறுமையுடைய எனக்கு அருள் செய்வது நினக்கு அழகாகாதோ? அருள் புரியாமை நினக்குக் கடன் அன்றன்றோ. எ.று.
நற்குணங்கள் நிறைந்த செம்மலை போல் விளங்குவது பற்றிச் சிவனை “நிறைந்த குணமலை” என்றும், மலையிடத்தே பெறப்படும் மாணிக்கமணி போல்வதால், “மணியே” என்றும், பிணி கொடுக்கும் மருந்து போலப் பிறவி நோயைப் போக்கும் ஞானமருந் தென்றற்கு “மருந்தே” என்றும் புகழ்கின்றார். இனிது வாழ்தற் கின்றயமையாத நல்லறிவும் ஒழுக்க நெறியும் நல்குவதால், “என் வாழ்வே” எனவும், வரம்பிலாற்றலுடையவன் என மெய்ந்நூல்கள் விளம்புவது பற்றி, “எல்லாம் வல்லோனே” எனவும், கலைகளும் மறைகளுமாகிய யாவையும் அவனுருவே யெனப் பெரியோர் மொழிதலால், “கலையே” எனவும் கட்டுரைக்கின்றார். “கலையவன் மறையவன் காற்றொடு தீ மலையவன்” (சிரபுரம்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. கல்லாரும் கற்றவரும் வல்லாரும் மாட்டாரும் ஆகிய எல்லாரும் பணிந்து பரவுவதால், “கருதும் கழலுடையாய்” எனக் கூறுகின்றார். புலாலுண்ணுதல், அதற்கேற்ப உயிர்களைக் கொல்லுதல் முதலிய நினைவும் செய்கையும் “புலை” எனப் பொதுப்படக் குறிக்கப்படுகின்றன. புலைச் செயற்குரிய நினைவுகளையேயுடைய தென்றற்கு மனத்தை, “புலையே புரியும் மனம்” எனவும், அது பாவமெனக் கருதாமல் அது செல்லும் நெறியிலேயே தன்னையுடையவனைக் கொண்டுய்த்தல் பற்றி, “மனம்போன போக்கே யல்லால்” எனவும் இயம்புகின்றார். அந்த மனத்தை அடக்கி நன்னெறிப் படுத்தி நல்வினைக் கண் செலுத்தி நிற்கும் நற்பண்பை, “புண்ணிய நன்னிலை” என்று குறிப்பிட்டு அந்நிலையில் அறிவுற்று நில்லாமல் சென்றலைந்து சிறுமையுற்றேன் என்பாராய், “நன்னிலையே யறியேன் சிறியேன்” என வுரைக்கின்றார். இத்தகைய எனக்கு நீ அருள் புரிவது, மறை முகத்தால் பாவ வினைகளை யூக்கி வளர்ப்பது போறலின், அழகாகாது என்றற்குச் “சிறியேனுக்கு அருளல் அழகோ” என்றும், அருளே உருவாகிய உனக்கு அருளாமை கடமையாகாது என்பார், “அருளாமையும் கடனன்று” என்றும் இசைக்கின்றார்.
இதனால், மனம் போன போக்கிற் செல்லும் எனக்கு அருளுதலும், அருளாமையும் முறைமை யல்ல வென விண்ணப்பித்தவாறாம். (17)
|