2684. நின்பால் அடைந்தார் அன்பாலே
அடியார் எல்லாம் நெடுவினையேன்
வன்பால் மனப்பேய் தன்பாலே
வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
தென்பால் நோக்கி இன்பநடம்
செய்யும் இறைவா சிறுவனுக்கா
முன்பால் அமுதக் கடல்அளிந்த
முதல்வா என்னை முன்னுதியே.
உரை: தென்திசை நோக்கி இன்பத் திருக்கூத்தாடுகின்ற இறைவனே, பால் வேண்டி யழுத முனிச் சிறுவன் பொருட்டு முன்பொருகால் அமுதந் தரும் பாற் கடலை யளித்தருளிய முதல்வனே, அடியராயினார் எல்லாரும் மெய்யன்பு செய்து நின் திருவடி ஞானப் பேறு பெற்றார்கள். நெடிய வினைகளால் பிணிப்புண்டிருக்கும் யான், வன்கண்மை பொருந்திய மனப் பேயால் வருந்தி உலகியல் வாழ்வில் சுழன்று, மயங்குகிறேனாதலால், எளியேனை நின்னருள் உள்ளத்தில் நினைந்தருள்க. எ.று.
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண், தென் திசை நோக்கிச் சிவபெருமான் திருக்கூத் தியற்றுதலால் “தென்பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா” என்றும், சிறு குழவிப் பருவத்தே பால் வேண்டி யழுத உபமன்யுவுக்குப் பாற்கடலை இறைவன் அருளினான் என்ற வரலாற்றை நினைவு கொண்டு “சிறுவனுக்கா முன் அமுதக் கடலளித்த முதல்வா” என்றும் பராவுகின்றார். தென் திசை நோக்கி நின்று இறைவன் ஆடுஞ் சிறப்பைத் “தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்” (சாழல்) என்று திருவாசகம் கூறுவது காண்க. திருநடனம் ஆன்மாக்களின் மலம் நீக்கிச் சிவப் பேற்றின்பத்தை வழங்கும் நாட்டமுடைய தென்று பெரியோர்கள் நவில்வதால் அதனை “இன்ப நடனம்” என்று சிறப்பிக்கின்றார். “பால் அமுதக் கடல்” என்பதை “அமுதப் பாற்கடல்” என இயைத்துக் கொள்க. கடைந்த தேவர்கட்கு அமுதமளித்த பெருமை பற்றி “அமுதக் கடல்” எனப் புகழ்கின்றார். சிறு குழவியாயினும் கடலின் சிறப்பையும், குழவியின் ஆற்றலையும் உலகறிதல் வேண்டிச் “சிறுவனுக்கா அமுதப் பாற் கடல் அளித்தான்” என்கின்றார். பாலுக்குப் “பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” (பல்லாண்டு) என்று சேந்தனார் எடுத்தோதுவது காண்க. குழவியின் சிறுமையும் கடலின் பெருமையும் நோக்காது பால் கொடுத்தது வியப்புக் குரியதாயினும், தவக் குழவியின் ஆற்றல் கடலினும் பெரிது என்பதை முற்ற உணர்ந்தவன் என்பதற்கு “முதல்வா” என்பதனால் புலப்படுத்துகின்றார். அடியார்கள் சிவனடியே சிந்திக்கும் திருவுடையோர்கள். சிவன்பால் அன்பே அவர்கட்கு உண்மை ஞானம். அதனால், அவர்கள் “திருவடிப் பேறு” எய்துகின்றார்கள். “நின்பாலடைந்தார் அன்பால் அடியா ரெல்லாம்” என்றும், யான் அது பெறாது வருந்துகின்றேன் என்பாராய், “நெடுவினையேன் வன்பால் மனப்பேய் தன்னாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்” என்றும் முறையிடுகின்றார். முன்னைப் பிறவி பலவற்றுள் செய்யப்பட்டுப் பயன் நுகரப் படாது தொடர்கின்ற வினைத்திரளை யுடையேன் என்றற்கு “நெடுவினையேன்” என்றும், அதனால் எனது அகக்கருவியாகிய மனம் வன்கண்மையும் அன்பின்மையும் உடையதாய் பேய்போல் என்னை அலை கின்றமையே காரணம் எனத்தெரிவித்தற்கு “வன்பால் மனப்பேய்” என்றும் உரைக்கின்றார். மயர்தல் - மயக்குறுதல். முன்னுதல் - நினைத்தல்.
இதனால், வினையால் மனம் வன்மையுற்று, மயக்குறுகின்ற தெனக்குறிப்பிட்டு, வினைப் பிடிப்பையும் மயக்கத்தையும் போக்கி அருள் ஞானம் வழங்குதல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (22)
|