பக்கம் எண் :

11

11. கலி விண்ணப்பம்

 

     அஃதாவது உலகியலில் தாம் எய்தி வருந்தும் துன்பங்களை இறைவன்பாற் சொல்லித் திருவருள் நல்குக என வேண்டுதலாம். கலியென்னும் சொல் துன்பத்தைக் குறிப்பது.
 

      இதன்கண் அருட் செயல் இடையறவு படுதற்கும், செய்வன பிழையாய் வருத்துதற்கும் கல்லா மனநினைவுகட்கும், மனநல மின்மைக்கும், அன்பு நெறியில் நிற்க மாட்டாமைக்கும், வடலூர் வள்ளல் பெரிதும் துன்புறுகிறார். செல்வரொடு கூடிக் கழிதலைப் பெருந் துன்பமாகக் கருதுகிறார். இடையிடையே திருவருள் முறையை வியந்தும், சிவஞானத்தைச் சிறப்பித்தும், உள்ளத்தின் உண்மையை நினைந்தும் பாடுகின்றார்.

 
கட்டளைக் கலித்துறை

2685.

     செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
     அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
     குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
     முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.

உரை:

      எங்கட்குத் தலைவனாகிய பெருமானே, செறிவின்றி வஞ்சக நினைவுகளை நெஞ்சில் கொண்டவனாகிய யான், சிறுமை மிக்க இவ்வுலகில் பிறர் அறியாததை நன்கறிந்தவன் போலச் சில அரிய செயல்களைச் செய்வது, நினது திருவடி ஞானத்தைப் பொருளாக உள்ளத்தில் கொண்டுள்ளமையேயாகும். வேறில்லை; ஆகவே எந்தையே, எளியேனாகிய யான் நினது திருக்கருத்தை மறுக்காமல் அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.

     ஆணை யென்றது வற்புறுத்தற்கு. வினயால் விளையும் அஞ்ஞான மயக்கத்தைப் போக்குதலின், தலைவனாகிய சிவபெருமானைக் “கொற்றவனே” என்று புகழ்கின்றார். செறிவு - அடக்கம். சீலத்தாலும் நோன்புகளாலும் உளதாகின்ற மெய்யடக்கம் புலனடக்கம் வாயடக்கம் முதலிய நற்பண்புகளில்லாமல் மாறாய நினைவுகளை மனத்தில் மறைத்தொழுகும் வஞ்சகன் என்று தம்மைக் குறிக்கலுற்ற வடலூர் வள்ளல், “செறியாத நெஞ்சக வஞ்சகனேன்” என்று கூறுகின்றார். “சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேன்” (ஆனந்த) என மணிவாசகனார் உரைப்பது காண்க. இப்பண்புகள் அறிவாற் சிறுமையுற்றவர் கூட்டத்தில் காணப்படுவனவாதலால் அவர்களைச் “சிறு தலம்” என எடுத்தோதுகின்றார். தலம் - ஈண்டுக் கூட்டத்தின் மேற்று; சிற்றினத்தோர் திரளைச் சிற்றுலகு எனவும், சிறுதலம் எனவும் குறிப்பது புலமை மரபு. மக்களின் பசிப் பிணி நீக்குவது, ஒழுக்க முரைப்பது, நூற் பொருளுரைப்பது, நுண் பொருளை விளக்குவது போன்ற பெருஞ் செயல்களைப் புரிகின்றேன்; அறிவாற் சிறியராகிய மக்கட்கு இஃது அரிய செயலாகத் தோன்றுகிற தென்பார், “அறியா தறிந்தவன் போல் சில செய்திடல்” என்றும், இதனை யான் செய்வது நின்னுடைய திருவருளைப் பெறுவது கருதியாகும் என்றும் தெரிவித்தற்கு “ஐயா நின்தாள் குறியா தரித்தல் அல்லது மற்றில்லை” எனவுரைத்து, மேலும் இஃது உண்மையென வற்புறுத்தற்கு “ஆணை” என்று உரைக்கின்றார். குறியா தரித்தல் என்பது, குறி ஆதரித்தல் எனவும், குறியாகத் தரித்தல் (மேற் கொள்ளல்) எனவும் பிரிந்து பொருள் தருவதாகும்; குறி-நோக்கம். ஒழுக்கம்; கருத்துமாம். உடல் பற்றிய பசி நோய் நீக்கமும், உயிர் பற்றிய அறியாமை நீக்கமும் இறைவன் திருவருள் நோக்கமாகும். (இவற்றை, Healing, Teaching and preaching என அருள் நெறித் தொண்டர் கூறுப.) அவற்றைச் செயற் படுத்துதல் திருவருள் நோக்கத்தைத் தரித்தலாகும். இவற்றைத் தொடர்ந்து செய்வதோ, இடையில் விட்டொழிப்பதோ நினது திருவுள்ளக் கருத்தாகும்; யான் அறியேன், என் செயலன்று என்பாராய், “முறியாது அருள் செய்தியோ தெரியேன் எந்தை முன்னியது தெரியேன்” எனத் தெரிவிக்கின்றார். கொற்றம் - வெற்றி. எண்ணி மேற் கொண்ட செயலைக் கடைபோகச் செய்து நற்பயன் காண்பது வேண்டி, “கொற்றவனே” எனக் கூறுகின்றார்.

      இதனால், திருவருட் பேறு கருதி மேற் கொண்ட என் செயல் இடை முறியாது நடை பெறுதற்கு அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (1)