பக்கம் எண் :

2686.

     தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
     யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
     போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
     மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.

உரை:

      உமைநங்கையைப் பாகத்திற் கொண்ட பெருமானே, எல்லாம் அறிந்தவன் போல இந்நிலத்தில் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கின்றேன்; செய்யும் செயல்களில் தீமையைக் காண்கின்றேனேயன்றி நற்பயன் சிறிதும் பெற்றிலேன்; என் பிழைகள் யாவற்றையும் பொறுத்தருளுக; நினது திருவடித் துணையன்றி நல்ல துணையாவது வேறில்லை காண். எ.று.

     “பண்ணினேர் மொழியாள் பங்க நீ யல்லாற் பற்று நான் மற்றிலேன்” (வாழாப்) என மணவாசகர் முதலிய நன்மக்கள் உரைத்தலால், துணை வேண்டும் வள்ளற் பெருமான், “மாதொன்று பாக” எனப் போற்றுகின்றார். நான் செய்வேன் செய்கிறேன் எனச் செய்யப்படும் செயல்கள் பலவும் துன்பமே பெரிதும் விளைப்பதை நேரில் அறிகின்றமை தோன்ற, “தீதொன்றுமோ கண்டறிந்த தல்லால்” என்றும், இதனை யாப்புறுத்தற்குப் “பலன் சேர நலம் யாதொன்றும் நான் கண்டறியேன்” என்றும் இசைக்கின்றார். தீது கண்டு செய்தலை ஒழியாது மேன்மேலும் செய்கின்றமைக்குக் காரணம், எல்லாம் அறிந்துள்ளோம் என்ற செருக்குற்று, எல்லாம் அறிந்தவன்போலக் கருதி, வீணிற் பொழுதைக் கழிக்கின்றேன் என்பாராய், “அறிந்தவனென்ன இங்கே போதொன்று போக்குகின்றேன்” எனவும், செய்கைக் குரியவற்றை இருள் தீர என்ணாது செய்வதால் பிழைகளே செய்யப்படுகின்றன; அவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்பார், “பிழை யாவும் பொறுத்தருள்வாய்” எனவும் வேண்டுகிறார். “மாதொரு பாக” என்றது, அம்மை யப்பனாய் விளங்கும் மூர்த்தம் அருள் நிறைந்த திருவுரு நிலையைக் குறித்தற்காக. படைப்பின் நோக்கமும் உயிர் வாழ்க்கையின் பயனும் கெடும் என்பதும் தோன்றப் “பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண் பாலி யோகெய்தி வீடுவர் காண்” (காழல்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. பிறர் துணையெல்லாம் கடைபோக நில்லாமல் இடையில் கெட்டொழியுமாகலின், உமைபாகன் “துணையன்றி நற்றுணை மற்றிலை” என நவில்கின்றார்.

      இதனால் செய்வன யாவும் பிழையாய்த் துன்பம் பயத்தலால், இறைவன் துணையல்லது நற்றுணை வேறில்லை எனத் தெளிந்துரைத்தவாறாம்.

     (2)