பக்கம் எண் :

2694.

     பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
     எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
     கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
     உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.

உரை:

      எல்லாம் உடைய பெருமானே, பள்ளம் நோக்கி விரைந்தோடும் நீரைப் போல என்னுடைய உள்ளமும் உன் திருவருளை நோக்கிப் பதைத்து ஓடுவதன்றி, எள்ளியிகழும் செயற்கண் என் மனமே யன்றி அதனையுடைய நானும் செல்லுவதில்லை; இதனை நெஞ்சிற் கள்ளம் வைத்துச் சொல்லுகின்றேனில்லை; என் மனத்தின்கண் நின்னுடைய கழலணிந்த திருவடிகள் நிற்கின்றன; அவ்விடத்தே அவற்றை நீயே கண்டருள்க. எ.று.

     உலகும் பொருளும் உயிர் நின்ற உடல் கருவி கரணங்களும் இறைவன் உடைமையென்பது உலகறிந்த செய்தியாதலால், வாளா “உடையவனே” என்று பராவுகின்றார். பள்ளம் நோக்கி விரைந்தோடுவது நீர்க்கு இயல்பாதலின், திருவருளை நோக்கி உள்ளம் ஓடுதற்கு அதனை உவமம் செய்கின்றார். பள்ளத்திற் பெரிது கடலாதல் போலத் திருவருளும் கடல் போறலால், உள்ளம் பரந்தோடுகிற தென வுரைக்கின்றார். பரப்பது - ஈண்டுப் பதைத் தோடுவதன் மேற்று. எள்ளல் - எள்ளம் என அம்மீறு பெற்றது. சிறிதாயினும் என்றது வன்புறை. எந்தாய் - எந்தையே; அருள் நிறைந்த தந்தை என்பதாம். கள்ளமாவது மனத்தின் உண்மையைச் சொல்லாலும் செயலாலும் மறைக்கும் தொழிற்பண்பு. அலன் என்ற அன்மைச்சொல் மறுத்தற் பொருட்டு. நின்ற, அன்பெறாத அஃறிணைப் பன்மை வினைமுற்று.

      இதனால் உள்ளத்தின் உண்மை கூறி ஏற்றருள் என இரந்தவாறாம்.

     (10)