பக்கம் எண் :

12

12. அடிமைப் பதிகம்

 

     அஃதாவது இறைவனது உடையனாம் தன்மையையும் தமது அடிமைத் தன்மையும் உண்மையறிவால் உணர்ந்து, நல்லடிமையாய்ச் சிறக்க அருள் புரிக என வேண்டிக் கொள்வதாம்.

 

      இதன்கண் சொன்னது செய்ய மாட்டாத தடிப்பினை யோதி இனியேனும் வீணாள் படாமை ஆண்டருள வேண்டுவதும், ஆண்டு மூவாறில் அருளறிவு பெற்றதும், அடிமைத் திறத்தில் மேம்பட வேண்டு மென்பதும், இளமைக் கண் அருளியது போல இனியும் அருளல் வேண்டு மென்பதும், எவ்வாறு நினைப்பினும் நல்லோர் சென்ற நன்னெறியறியாத அடிமையாள் என்பதும் பிறவும் ஓதப்படுகின்றன.

 

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2695.

     ஆள்வினையால் பயன்உறுவார் அசதி ஆட
          அந்தோஇப் புலைநாயேன் அன்பால் நின்பால்
     வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
          வேண்டும்இதற் கெம்பெருமான் கருணைசெய்யும்
     நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
          நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
     கேள்வியிலாத் துரைத் தனமோ அலது நாயேன்
          கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.

உரை:

      எங்கள் பெருமானே, தன் முயற்சியால் பயன் பெறுபவர் கண்டு இகழ்ந் துரைக்கும்வண்ணம், அந்தோ, புலைநாய் போன்ற யான், அன்பினால் நின்னிடத்து வேள்வி செய்யும் பெரிய தாபதர்க்கு விருந்து செய்தல் வேண்டும்; இதற்கு அருள் செய்க; நாள் என்று எனில் சின்னாட்களில் நடத்த வேண்டும்; இஃது உண்மை எனச் சொல்லி விட்டு உன்னையே நம்பி யிருந்தேன்; கேட்பார் இல்லாத ஆட்சியோ, அன்றி நாயினேன் கேட்கு முறைப்படி கேட்டேனில்லையோ? நீ என் சொல்லைக் கேளாயாயினை. எ.று.

     நாளும் அக்கினி காரியம் செய்யும் தவவேதிய ரொருவர்க்கு விருந்து செய்ய விழைந்து இறைவனிடம் விண்ணப்பித்து விட்டு அவரிடமும் கேட்டுக் கொண்டார்; இதனை “வேள்வி செய்யும் பெருந்தவர்க்கு வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணை செய்யும்” என்றதாக வுரைக்கின்றார். அது கேட்ட தாபதர் அந்த நாள் எப்போது எனக்கேட்க, சில நாட்களில் நடக்கும் என்று இறைவனை யெண்ணிச் சொல்ல, நீர் சொல்வது உண்மை யென நம்பலாமா? என அவர் கேட்க, “நம்பும்” என அடிகளார் கூறினார்; இதனை “நாள் வினவில் சின்னாளே; இதுதான் உண்மை நம்பும் என நவின்று” என்றும், அதற்கேற்ற பொருட்காக இறைவனைத் துதித்தாராக, அதனை “நம்பு மென நவின்றுனையே நம்பி நின்றேன்” என்றும் கூறுகின்றார். எதிர் பார்த்தவாறு பொருள் எய்தாமற் போகவே மனம் வருந்தி, சிவனே, உனது அருளரசு கேட்பாரிலாத ஆட்சியோ என வினவுவாராய், “கேள்வி யிலாத் துரைத்தனமோ” எனவும், தாம் கேட்பதில் முறை தவறு இருக்கலா மெனக் கருதி “நாயேன் கிளக்கு முறைக் கிலனோ” எனவும், நீ என் சொல்லைக் கேளாதொழிந்தாய் என்பார், “கேட்டிலாயே” எனவும் உரைக்கின்றார். முயற்சி வீணாயது கண்ட ஆள்வினையாளர் ஒருவர், அவ் விருந்தைச் செய்து அடிகளாரைப் பார்த்து இகழ்ந்து நகையாடியது விளங்க, “ஆள்வினையாற் பயனுறுவர் அசதி யாட” எனப் புகல்கின்றார். அசதியாடக் கேட்டிலாய் என இயையும். அசதி, இகழ்ந்து உரையாடல். ஆள்வினை, முயற்சி. புலை நாயேன் என்றது, தமது மாட்டாமை பற்றி நொந்து கூறும் கூற்று. வேள்வி, முன்னது ஆகவனீயம், காருக பத்தியம், தக்கினாக்கினீயம் என்ற அக்கினி காரியம்; பின்னது, விருந்து. கிளத்தல், சொல்லுதல், “நாள்விளைவில்” என்றும் பாடம்.

     இதனாற் சொல்லுவது செய்ய மாட்டாத தமது அடிமைப் பண்பின் திறம் கூறியவாறாம்.

     (1)