2702. இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
உரை: எந்தையே, இவ்வுலகில் என் விருப்பப்படி வாழ்க்கையை நடத்துகின்றேனே யன்றி வேறே யாதும் எண்ணுவதில்லை; எண்ணுமாறு செய்விப்பாயாயின், யான் என்ன செய்வேன்; தேன் பொருந்திய மலர் போன்ற நின் சிவந்த திருவடி யாணையாகச் சொல்லுகிறேன்; யான் நினைக்குமாறே வாழ்தற்கு அருள் புரிய வேண்டுகிறேன்; இவ்வாறன்றி இவன் ஒரு துட்டனென்று கருதிக் கைவிட நினைப்பாயாயின், சூறைக்காற்றில் அகப்பட்ட துரும்புபோல் அலைந்து, வானத்தில் எறியப்பட்ட கல் சுழன்றுகொண்டே நிலத்தில் வீழ்வதுபோலப் பிறவியாகிய கடற்குள் வீழ்வேனேயன்றி, வீணனாகிய யான் வேறு என்ன செய்வேன். எ.று.
இட்டவகை - இஷ்டம்போற் செல்லுவது; இட்ட வகை வாழ்வதாவது மன நினைவுக்கேற்ப வாழ்வது; மனம் போன போக்கில் செல்வதாம். விதி எனக்கென வகுத்தபடி வாழ்கிறேன் என்பது முண்டு; “வகுத்தான் வகுத்த வகை யல்லாற் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது” (குறள்) என்பர் திருவள்ளுவர். இவ்வாறு வாழ்ந்தால் வரும் விளைவு இதுவாம் என யான் எண்ணினதில்லை என்பாராய், “நானே எண்ணுகிலேன்” என்று கூறுகின்றார். எண்ணிலேன் என்னாமல் எண்ணுகிலேன் என்றது எண்ணமாட்டாமை புலப்படுத்துகிறது. எண்ணுதற் கமைந்த கருவி கரணங்களை நோக்கினால் நினது அருட்சக்தி இயக்கினாலன்றி இயங்குவனவாக இல்லை; ஆகவே, நினது அருள் என் வாழ்வு பொருளாக என்னை எனைப்பிக்குமாயின் என் வாழ்வின் உளவாய குற்றங்கள் பல என் நினைவில் தோன்றும் அவற்றைப் போக்கித் தூய்மை செய்து கோடற் கேற்ற ஆற்றலும் எனக்கில்லையாதலால் யான் என்ன செய்வேன் என்று சொல்லலுற்றவர், “எண்ணுவித்தால் என்செய்வேன்” என்று இயம்புகின்றார். தான் கூறுவதன் உண்மையை வலியுறுத்தற்கு நின் திருவடி யாணையென்பவர், “மட்டலர் சேவடி ஆணை” என்கின்றார். மட்டு - தேன். அலர் - மலர். சேவடி - சிவந்த திருவடி. நினது திருவருள் விளக்கத்தால் நல்ல நினைவுகளும் செயல் நெறிகளும் தோன்றுமாயின் அவ்வழியே நான் வாழ வேண்டும்; அதற்கு அருள் செய்க என்பார். “நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும்” என வேண்டுகிறார், அருளாது கைவிடலாகாது என்றற்கு “இந்த வண்ணமல்லால் துட்டன் எனத் துணிதியாயின்” எனவும், துணிந்து கைவிட்டவிடத்துத் தமக்கெய்தும் தீங்கினைக் கூறலுற்று, இம்மையில் இவ்வுலகில் சூறைக் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் அலைந்து கெடுவேன் என வருந்துவாராய், “அந்தோ சூறையுறு துரும் பெனவும்” எனவும், வானத் தெறிந்த கல் தன்னிற் சுழன்றுகொண்டு நிலத்தில் வீழ்ந்து மேலெழுதலின்றி அழுந்துதல் போலப் பிறவிக் கடலில் வீழ்ந்து ஆழ்வேன் என்றற்கு, “சுழன்று வானில் விட்ட சிலையெனப் பவத்தில் விழுவேன்” என்றும் உரைக்கின்றார். சூறை - சூறாவளி; இது சூறைக் காற்றெனவும் வழங்கும். சிலையென என்றவிடத்து எண்ணும்மை தொக்கது. சுழன்று பவத்தில் விழுவேன் என இயைக்க. இக் கல்லுவமையை, “வல்லானொருவன் கைம்முயன்றெறியினும், மாட்டா வொருவன் வாளா எறியினும், நிலத்தின் வழா அக்கல்லே போல, நலத்தின் வழாஅர் நின்னாம நவின்றோரே” (திருவிடை மும்மணி) எனப் பட்டினத்தடிகள் வழங்குவது காண்க. துரும்பு போல் அலைத்தலும் பவக் கடலில் வீழ்தலுமன்றி வேறு எனக்குச் செயல் இல்லையாம் என யாப்புறுத்தற்கு, “வேறு எது செய்வேன் விழலனேன்” எனக் கூறுகின்றார். விழலன் - புல்லாய்ப் பயன்படாத வீணன்.
இதனால், திருவருளால் நினைப்பிக்குமாறு யான் வாழ்தல் வேண்டுமென்ற விருப்பம் தெரிவித்தவாறாம். (8)
|