2703. விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
கருதறியாச் சிறுபருவத் தென்னை ஆண்டு
நிழற்கருணை அளித்தாய இந்நாள் நீகை
நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையிலேனே.
உரை: ஐயனே, பயனில்லாத விழலுக்கு நீர் இறைத்து கெட்ட வீணனாகிய நான், இந்த அகன்ற உலகில் இதுகாறும் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் நெருப்பிலிட்ட பஞ்சு போலப் போக்கி, நீ தானே என்னை ஆண்டளுவாயானால் வேண்டா என்று உன்னை விலக்குபவர் யார் இருக்கின்றார்கள்; நலம், தீங்கு ஒன்றும் அறிய மாட்டாத இளம் பருவத்தில் உலகத்துச் சான்றோர் அறியும்படி உனது திருவடிக்கு அடிமை யென்று என்னை ஆட்கொண்டாய். . . அங்ஙனம் என்னையாண்டு உனது திருவருள் நி.ழலில் என்னை இருக்க வைத்தாயன்றோ? இப்பொழுது என்னை அருளாது கைவிடுவாயாயின் ஒரு நிலையிலும் நில்லாமல் அலைகின்ற யான் யாது செய்வேன், அருளுக. எ.று.
விழல் - வன்மையான புல்லினத்துள் ஒன்று. இவை தொண்டை நாட்டவர் வீடுகட்கு கூரையாக வேய்வரே யன்றி ஆடுமாடுகட்கு இரையாக பயன்படுத்துவது இல்லை; அவையும் இவற்றை மேயவிரும்புவதில்லையாதலின் இவற்றிற்கு நீர் பாய்ச்சுவது வீண் செயலெனக் கருதுபவாதலின் பயனில் செயல்களைப் புரிந்து வழி யிழந்து வருந்தும் தம்மை “விழற் கிறைத்து மெலிகின்ற வீணனேன்” என்று கூறுகின்றார். மிகை, என்பது நலந் தீங்குகளை அளவிறப்பச் செய்வது. நல்லவற்றையும் மிகைபடச் செய்தவிடத்து குற்றமாய் முடிதலின் மிகை என்று உரைக்கின்றார். நல்லவும் தீயவு மானவற்றை மிகைப்படச் செய்தமை புலப்பட, “உலகில் விளைத்திட்ட மிகைக ளெல்லாம்” என்று விளம்புகின்றார். நல் வினைகளை அளவோடு செய்து நலம் பெறுதற்கு அமைந்தது இவ்வகன்ற நிலவுலகமாக, நான் மிகைபல செய்து கெட்டேன் என்பது புலப்பட, “இவ்வியனுலகம்” என்று விதந்து கூறப்படுகிறது. தீயால் அழிக்கப்பட்ட பொருள் மீள நலமுறாதவாறு போல என்பால் அழிக்கப்பட்ட மிகைகள் மீளத் தலை எடாதவாறு போக்கின என்பார், அழற் கிறைத்த பஞ்சனவே ஆக்கி” என்று சொல்லுகிறார். நலம் காணினும் குறை சொல்லித் தடுக்கும் மக்கள் உலகில் பலராதலின், குணமே உருவாகிய நின்பாற் போன்று தடுப்பவரிலராதலின் நீ அது நினைந்து எனக்கு அருள் செய்க என்பாராய், “தடுப்பவரிங்கு ஆரே ஐயா” என்று இயம்புகிறார். கழல் - ஆகு பெயராய்த் திருவடியைக் குறிப்பதாயிற்று. உலகியலின் உண்மை உணரும் திறம் இல்லாத இளம் பருவத்தே “சிவனடியே சிந்திக்கும்” திருவருள் ஞானத்தை தாம் பெற்றமை புலப்பட “ஒன்றும் கருதறியாச் சிறுபருவத் தென்னை யாண்டு, நிழற் கருணையளித்தாயே” என்று உரைக்கின்றார். இறைவன் திருவடி நிழல் அருளுருவினதாகலின் “நிழற் கருணை” என்று சிறப்பிக்கின்றார். இறைவன் தமக்குத் திருவருள் ஞானம் நல்கியதைச் சான்றோர் பலர் அறிந்தது கண்டு வியத்தமையின் “உலக மறிய” என்று சொல்லுகிறார். உலகம் - அறிவுடைய சான்றோர் சூழல். அருள் ஞானத்தை அந்நாள் வழங்கிய பெருமானாகிய நீ இந்நாளில் கைவிட் டொழிவது அறம் அன்று என்று இறைஞ்சுவார் “இந்நாள் நீ கை நெகிழ விட்டால் என் செய்கேன்” என்று கூறுகின்றார்.
இதனால், இளம் பருவத்தே அருள் ஞானம் வழங்கி, ஆதரித்ததை நினைந்து அதனைத் தொடர்ந்து அருள்புரிய வேண்டுமென முறையிட்டவாறாம். (9)
|