பக்கம் எண் :

2704.

     நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
          நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
     இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
          எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
     கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
          கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
     அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
          அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.

உரை:

      அலைகளால் அலைக்கப்படாத திருவருட் கடலாகிய பெருமானே, அமுதமும் தேனும் போல்பவனே, தில்லையம்பலத்தில் எழுந்தருளும் என்னுடைய ஞான குருவே, நன்னிலை யொன்றும் நான் அறியேன்; நன்னிலைக்கண் நின்று ஞான நலம் பெற்ற பெருமக்கள் மேற்கொண் டொழுகும் நெறியைத் தானும் அறிகிலேன் என்றாலும், உன்னுடைய நட்பையன்றி வேறு எனக்கு உடைமையில்லை; உடைமை யாவதும் வேறு ஒன்றும் அறியேன்; பிற மக்களையோ தேவர்களையோ துணையா மென்று கனவிலும் எள்ளத் தனையும் எண்ணுவதில்லேன்; நல்ல கல்வியைக் கற்றிலேனாயினும்: என்னுடைய மனத்தில் எழுந்தருளி அறிவன அறிவித்தருளினாய்; அதனால் யான் சிலவற்றைக் கண்டுணர்ந்தேன்; என்றாலும் நீயே அவற்றைக் காட்டி யருள வேண்டும்; நான் உனக்கு அடிமையான், அன்றோ. எ.று.

     கடல்கள் யாவும் அலைகளால் அலைக்கப்படும் இயல்பினவாகலின், அவற்றினின்றும் வேறுபடுத்தற்கு “அலையறியா அருட்கடலே” எனச் சிவபரம் பொருளைப் புகழ்கின்றார். அருட் கடல், அருளுருவாகிய கடல். உள்ளத்தாற் கொள்ளப் படுதலால், “அமுதே” எனவும், நாவால் திருப்பெயரை ஓதுந் தோறும் இன்பத் தேன் சுரந்து மகிழ்வித்தல் பற்றித் “தேனே” எனவும் பாராட்டுகின்றார். தில்லையம்பலத்தின்கண் தனது திருநடனத்தால் காண்பார்க்கு ஞானம் எய்துவித்தலால் “அம்பலத்து என் குருவே” எனவுரைக்கின்றார். நிலை நல்லொழுக்க நல்லற நெறிகளால் எய்தும் உயர்நிலை. நின்னிலைகளைப் பெறும் திறம் அறியேன் என்பாராய், “நிலையறியேன்” என்றும், அறியா விடினும் நிலை நின்றுயர்ந்த சான்றோரைக் கண்டு அறிந்து கொள்ளலாமெனின் அந்த வாய்ப்பு பெற்றிலேன் என்றற்கு, “நிலை யறிந்து பெற்ற நல்லோர் நெறி யறியேன்” என்றும் கூறுகின்றார். நன்னிலையையும் அதனை யடையும் நெறியும் அறியேனாயினும், எனக்கு உன்பால் அசையாத அன்புண்டே யன்றி வேறில்லை என்பாராய், “எனினும் உன்றன் நேச மன்றி இலை” என்றும், இவ்வன்பினும் சீர்த்த உறுதிப் பொருள் வேறு உண்டோ என்று கண்டறியேன் என்பார், “அறியேன்” என்றும் கூறுகின்றார். இத்தகைய அன்புடையனாதலால், எனக்குத் துணையாவர், மக்களிலோ தேவர்களிலோ ஒருவரையும் சிறிதளவும் நான் நினைப்பதில்லை என்றற்கு, “மற்றவரைக் கனவிலேனும் எட்டுணையும் ஓர் துணை எனவும் எண்ணுகிறேன்” என்கின்றார். நனவில் நெஞ்சின்கண் நினையாதனவும் கனவின்கண் எய்துவ துண்மையின் “கனவிலேனும்” எனவும், கனவுக் காட்சி சிறிது போதில் இடையறவுபடுவது பற்றி, “எட்டுணையும்” என்று சிறப்பிக்கின்றார். எட்டுணையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. எண்ணுதல் இல்லேன் என்பதை வலியுறுத்தற்கு “எண்ணுறேன்” என்று குறிக்கின்றார். எண்ணுதல் உறேன் - எண்ணுறேன் என வந்தது. கலை, கற்றற்குரிய கல்வி; பல்வேறு நூல்களைக் கற்றறியாமை புலப்படுத்தற்குக் “கலை யறியேன்” எனவும், கல்லாவிடத்தும் கலைஞானம் தமக்குக் கைவரப் பெற்றமை யுணர்ந்து அதற்குக் காரணம் திருவருள் உள்ளிருந்து உணர்த்தும் திறம் என்பார், “கருத்திலிருந்து அறிவித்தாய்” எனவும் இயம்புகிறார். கண்முதலிய இந்திரியங்களால் கண்டறிவதும் மெய்யறிவுப் பேற்றுக்கு வாயிலாதலைத் தழீஇக் கோடற்கு, “நான் கண்டறிந்தே னெனினும்” என்றும், கண் முதலிய கருவிகள் நின் திருவருள் காட்டக் காணும் இயல்பின என்பது பற்றி, “எனினும் அவை காட்ட வேண்டும்” என்று உரைக்கின்றார். “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” என திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. காட்டக் காண்பதும், செய்விக்கச் செய்வதும், நினைப்பிக்க நினைத்தலும் உடையனாதல் என்னை நினக்கு அடிமைப் படுத்துதலால், “நான் அடிமை யாளே” என எடுத்தோதுகின்றார்.

     இதனால், தான் இறைவற்கு அடிமையாள் என வடலூர் வள்ளல் வற்புறுத்தவாறாம்.

     (10)