13
13. சரணப் பதிகம்
அஃதாவது இறைவன் திருவடியே தனக்குப்
புகலாம் எனத் தெரிவித்துக் கொள்வது. இக் கருத்து ஒன்றையே பொருளாகக் கொண்டு இப்பதிகம் அந்தாதித்
தொடையில் அமைந்துள்ளது.
இதன்கண் துன்பக் காலத்திலும் இன்பக்
காலத்திலும் தமது நெஞ்சம் சிவபரம் பொருளை மறவாமையும், தமக்குத் துன்பம் வருவிக்கும் ஏதுவாவது
தம்பாலுள்ள சிறுமை என்றும், அதற்குக் காரணம் மனத்தின்கண் படிந்துள்ள மாயை என்றும் தெரிவித்து,
குற்றங்களைப் போக்குதற்குத் திருவருள் ஞானம் அருள வேண்டுமெனவும், திருவருளல்லது தமக்குக் களைகண்
வேறு ஒன்றுமில்லையாதலால் அதனை விளங்க அருளுக எனவும் வேண்டுகிறார். மேலும் திருவருள் ஞானமென்பது
திருவடி ஞானமெனவும் வழங்குதலின், தமக்குத் திருவடிப்பேறு வேண்டுமெனவும், அதனையல்லது வேறு எதனையும்
சாரமாட்டாமை சொல்லி இரவும்பகலும் அதனையே நினைந்தொழுக வேண்டுமெனவும், அதனையும் இறைவன் தானே
உவந்து அருள வேண்டும் எனவும் விண்ணப்பித்துத் தனக்கு முடிந்த முடிபாகத் திருவடியே புகலிடமாம் எனப்
புகன்று மொழிகின்றார்.
கலிநிலைத்துறை
2705. மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநன்
துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
உரை: பிறைத் திங்கள் தங்கிய சடையை யுடைய பெரிய மணியாகிய பெருமானே, அருள் வழங்கும் வள்ளலே, நல்ல நிதியே, திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகிற நித்தனாகிய சிவனே, நின்னைத் துதியாதவனாயினும் உன்னையன்றி எனக்குத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டிலேனாதலால் என்னுடைய மனத்திலுள்ள எண்ணம் நிறைவேறும்படி எனக்குத் தலைவனாகிய நீ அருள்புரிய வேண்டுகிறேன். எ.று.
மதி - பிறைச்சந்திரன். மணி - ஈண்டுச் சிவந்த மாணிக்கமாயிற்று. உயிர்களின் திணை வேறுபாடும் மக்களுயிரின் நிலை வேறுபாடும் நோக்காமல் அருள் செய்தலால், “அருள் வள்ளலே” என்று கூறுகிறார். நலம் பயக்கும் செல்வம் என்றற்கு “நன்னிதியே” என்று சிறப்பிக்கின்றார். நித்தன் - என்றும் இருப்பவன். துணை செய்பவரைக் கண்டவிடத்து அன்பு செய்வதும், காணா விடத்துப் பாராட்டி மகிழ்வதும் மக்கள் இயல்பாயினும் யான் அது செய்வதிலேனாயினும், உன்னை யொழிய வேறு ஒருவரையும் துணையாக யான் மதிப்பதில்லை என்பார், “நின்னைத் துதியே னெனினும் உனையன்றித் துணையிலேன்” என வுரைக்கின்றார். பதி - தலைவன். திருவருள் ஞானம் பெற விழையும் என் கருத்து நிறைவுறும் படி அருளுக என வேண்டுகின்றாராகலின் “என தெண்ணம் பலிக்கும்படிக் கருளே” என்று கூறுகின்றார். பலித்தல் - பயன் தருதல்.
இதனால், திருவருள் ஞானம் எனக்கு எய்துமாறு அருள் புரிக என வேண்டியவாறாம். (1)
|