2709. மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
உரை: மறப்பதின்றி என்றும் வாழ்த்தி வணங்கும் உண்மை யன்புடைய பெருமக்களைப் பெரிய இந்நிலவுலகத்தில் இறந்து கொடாதபடி ஆட்கொண் டருளுகின்ற சிவபெருமானே, நிலைத்த உறவாகிய நினது திருவடியன்றி வேறு ஒன்றையும் நான் பொருளாக எண்ணுவதில்லையாதலால் எனக்குப் பிறவாப் பெருவாழ்வு அருளுக என வேண்டுவது மிகை யன்றோ, சொல்லுக. எ.று.
சிவன்பால் உண்மை யன்புடையவர்கள் அல்லும் பகலும் அவனையே நினைந்தொழுகுவது பற்றி, “மறவாது உனை வாழ்த்தும் மெய்யன்பர்” எனச் சிறப்பிக்கின்றார். மெய்யன்பர்கள் பிறப்பிறப்பில்லாத பெருவாழ்வு எய்துவதைப் பெருநூல்கள் எடுத்தோதுதலால், மெய்யன்பரை “மாநிலத்தே இறைவா வகை ஆட்கொண் டருளிய ஈசனே” எனப் போற்றுகின்றார். “பிறவா வாழ்க்கைப் பெரியோன்” எனச் சான்றோரால் சிறப்பித்துரைக்கப்படுவதால், சிவபெருமான் தனது அடியவரை இறவா வகை ஆட்கொண்டருளுகின்றான். இறவா வகை ஆட்கொளப்பட்ட மார்க்கண்டன் வாழ்வு இங்கே நினைக்கப்படுகிறது. இறைவன் திருவடிக்குச் செய்யும் அன்பு நிலைபேறு கொண்டதாதலின், அதனை “மெய்யுறவாகிய நின்பதம்” என்று சிறப்பிக்கின்றார். அதனினும் சிறந்த பற்றுக்கோடாவது பிறிதொன்று மில்லையாதலால், “நின்பதமன்றி ஒன்று ஓர்கிலேன்” என்று உரைக்கின்றார். இறைவன் திருவடியைப் பற்றாக உடையார் பிறவாப் பேரின்ப வாழ்வு பெறுவது உலகறிந்த உண்மையாதலின், அதனை எடுத்தோதுவது வேண்டாக் கூறலாய் முடிதலின், “நான் பிறவாநெறி தந்தருள் என்பது என் பேசிடாய்” என இயம்புகிறார்.
இதனால் திருவடியன்றி வேறு பற்றுக்கோடு இல்லாமையால் எனக்குப் பிறவாப் பெருவாழ்வு தருக என விண்ணப்பித்தவாறாம். (5)
|