271. பாகைப் பொருவும் மொழியுடையீர்
என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர்
உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
தோகைப் பரிமேல் வருந்தெய்வச்
சூளா மணியே திருத்தணிகை
வாகைப் புயனே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே.
உரை: மயிலாகிய பரி மேல் இவர்ந்து வரும் தெய்வச் சூளாமணி போல்பவனே, திருத்தணிகையில் எழுந்தருளும் வெற்றி மாலை யணிந்த தோளை யுடையவனே, பொய்ப் பெண்டிராகிய மகளிர் முன்னின்று பாகு போன்ற சொற்களை யுடையவர்களே என்று பாராட்டிப் போற்றாமல் அருளின்பத்தில் மகிழும் நின்னுடைய திருத்தொண்டர்களோடு சேர்ந்து உண்மை ஞானம் பெறும் பொருட்டு அடியேன் தலைமேல் நின்னுடைய திருவடிகளை வைத்தருள வேண்டும், எ. று.
தோகைப் பரி - மயிலாகிய விரைந்த செலவை யுடைய ஊர்தி. சூளாமணி - தலை யுச்சியில் சூடிக் கொள்ளும் மணி. விண்ணுலகத்துத் தேவர்கள் அனைவரும் முடிமேல் திருவடி தங்குமாறு பணிந்து ஏத்தும் தலைவனாதலால் முருகனைத் “தெய்வச் சூளா மணியே” என்றும், சூரவன்மாவைத் தலைவனாகக் கொண்ட அசுரரோடு போராடி வென்று வாகை சூடிய செயல் நினைந்தும் அப்போர் வெம்மை தணியத் தணிகையில் தங்கியதைக் குறிக் கொண்டு பரவுவாராய்த் “திருத்தணிகை வாகைப்புயனே” என்றும் புகழ்கின்றார். வாகை - வெற்றி மாலை. இது வாகைப் பூவால் தொடுக்கப் படுவதால் வாகை யெனப் படுகின்றது. புயன் - தோள்களை உடையவன். பெண்களின் மொழி நலங்களைப் பாராட்டுவோர் கரும்பின் சாற்றிலிருந்து எடுக்கப்படும் வெல்லப் பாகை உவமம் கூறுப வாதலின், “பாகைப் பொருவும் மொழி யுடையீர்” என்று கூறுகிறார். பழிச்சுதல் - பாராட்டுதல். ஓகைபெறும் எனற்பாலது எதுகை நயம் பற்றி ஓகைப் பெறும் என வந்தது. ஓகை - மகிழ்ச்சி; இது ஞான வின்ப நுகர்ச்சி பற்றி வந்ததாம். திருத்தொண்டர்கள் உண்மை ஞானிகளாதலால் அவர் கூட்டம் தம்மைச் சேர்ந்தாரையும் ஞானிகளாக்குவது பற்றித் “திருத்தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவார்” என்று ஏதுக் கூறித் “திருத்தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே” என்று வேண்டுகிறார்.
இதனால் தொண்டர் கூட்டத்தைச் சேர்ந்தவர் உண்மை ஞானிகளாவது கண்டு திருவடியை முடிமேல் சூட்டுக என்று விளம்பியவாறாம். (10)
|