2717. சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
காய்நின்று சந்துரைத்த தார்.
உரை: சங்கரனே மூன்று கண்களையுடைய சயம்பு மூர்த்தியே, முதுகிடத்தே தாழ்ந்த சடை முடிக்கண் படம் விரிந்த பாம்பையும் பிறைத்திங்களையும் அழகு விளங்க வைத்துள்ளவனே, வெவ்விய முதலையின் வாயிலிருந்து சிறுவனை வருமாறு பாடிய வன்றொண்டர் பொருட்டுத் தூது சென்று பேசியது நீதானே, வேறு யாவர் காண். எ.று.
சங்கரன் - சுகத்தையே செய்யும் இயல்பினனான சிவன். சயம்பு - தோற்றுவிக்கத் தோன்றாமல் தானே தோன்றிய தான்றோன்றிப் பெருமான். படம் விரிந்து நிற்கும் பாம்பு என்றற்குப் “பொங்கரா” என்று கூறுகிறார். திங்கள் - பிறைச் சந்திரன். திங்களைக் கலை தேய்ந்து கெடாவாறு விளங்கச் செய்தது பற்றி, “திங்கள் பொலிந்தோன்” என வுரைக்கின்றார். பிற வினைப் பொருளில் வந்ததன்வினை. நீராடிய சிறுவனை இரக்கமின்றி யுண்டமையால் முதலையை “வெங்கரா” என்கின்றார். கொண்டது விடாத கொடுமை யுடையதாகலின், முதலை, வெங்கரா எனப்படுகிற தென்றுமாம். கரா - முதலை. கொங்கு நாட்டுத் திருப்புக்கொளியூர் மடுவில் வாழ்ந்த முதலை; புக்கொளியூர் இப்போது அவினாசி என வழங்குகிறது. அவினாசி யப்புரை வேண்டி, “கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே” என நம்பியாரூரர் பாடியதும் முதலை கொணர்ந்து சிறுவனைத் தந்தமையால், “வெங்கரா வாய் நின்று பிள்ளை வரப்பாடும் வன்றொண்டர்” எனப் புகழ்கின்றார். இறைவனிடம் வன்மை புரிந்தமையால் நம்பியாரூரர்க்கு வன்றொண்டர். என்ற பெய ருண்டாயிற்று; “தன்மையினா லடியேனைத் தாமாட்கொண்ட நாள் சபை முன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்” (நாவ) என்று அவரே கூறுவது காண்க. வன்றொண்டரது அருட் பண்பு கண்டு முதலை வாய்ப் பிள்ளை வரச் செய்ததும், காதற் பண்பு கண்டு பரவையார் மனைக்குத் தூது சென்றதும் ஈண்டுக் கூறியது, தொண்டர் பொருட்டு யாதும் செய்யும் இயல்புடைய நீ என் பொருட்டு நல்லருள் செய்க என்னும் கருத்துப் பற்றி என்க.
இதனால், எனக்கு உயர் செய்கையாகிய திருவருள் ஞானம் வழங்குக என வேண்டியவாறாம். (2)
|