பக்கம் எண் :

2719.

     நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
     தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
     அங்ஙனமே னும்உன்அருட்பெருமைக் கிப்பெருமை
     எங்ஙனம்என் றுள்ளம் எழும்.

உரை:

      மானைக் கையில் ஏந்துகின்ற பெருமானே, நானில வளம் பெற்ற உலகில் நான் சிறியவனாயினும், செய்துள்ள பிழைகளை எண்ணினால், அவற்றின் தொகை சிறிதன்று; மிகவும் பெரிதாகும்; அற்றாயினும், உனது திருவருட் செயற் பெருமை நோக்குமிடத்து மிக மிகச் சிறிதாமென்று கருதப்படும். எ.று.

     சிவபெருமானைச் சான்றோர் “சிறுமான் ஏந்தி” (தலையங்க) எனச் செப்புவது பற்றி, “மான்கரத்தோய்” என்று கூறுகின்றார். அறிவாற்றல்களிற் சிறுமையுடையவன் என்றற்குச் “சிறியேன்” எனக் குறிக்கின்றார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்குமே வளமுடையவை; பாலைப் பகுதி அன்ன தன்மையால், அதனை விலக்கி ஏனைய நான்கையும் சிறப்பாகக் கொண்டு “நானிலம்” என்பது மரபு. அதனால் “இந்நானிலத்தில்” என்று உரைக்கின்றார். நான் செய்துள்ள பிழைகளை எண்ணினால் அவற்றின் தொகை உலகில் மிகப் பெரிதாகும் என்றற்குச் “செய்பிழைதான் சிறிதோ அன்று, உலகிற் பெரிது” என்று கூறுகின்றார். திருவருள் விளைவிக்கும் நலங்களையெண்ணுமிடத்து, அவை எண்ணற் கடங்காத தலைமைத் தன்மையும் மிகுதியுமுடையவாய்ப் பெருமையால் உயர்ந்தோங்குகின்றன என்பாராய், “உன் அருட்பெருமைக்கு” எனவும், என் செய்பிழைகளின் பெருமை மிகவும் புல்லிதாம் என்பாராய், “அருட் பெருமைக்கு இப்பெருமை எங்ஙன மென்று உள்ளம் எழும்” எனவும் இயம்புகின்றார். மிகுதிபற்றியும் தலைமை பற்றியும் பெருமை காணப்படும்; செய்பிழைப் பெருமை மிகுதி பற்றியது; அருட் பெருமை - மிகுதி பற்றியும் தலைமை பற்றியும் தன்மை பற்றியும் காண நிற்பது.

      இதனால், அருட் பெருமையை எண்ணுமிடத்து என் பிழை மிகுதி எளிதிற் பொறுத்தாற்றும் சிறுமை யுடையது எனப் புகன்றவாறாம்.

     (4)