2722. என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னும்இந்தத்
துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
அன்பர்க் கருள்வோய் அருள்.
உரை: என்னுடைய அரசனே, நினது திருவடிக் கீழே நின்று எனக்குள்ள துன்பங்களைப் போக்கி யருள்க என்று நான் சொல்லிக் கொண்டதுண்டே யன்றி என்னைப் பெற்ற தாயிடத்தும் சொன்னதில்லை; இனியும் இந்தத் துன்பமாகிய சுமையை என்னால் சுமக்க முடியா தென்பேனாயின், அன்பராயினார்க்கு அருள் வழங்கும் நீ எனக்கும் அருளுதல் வேண்டும். எ.று.
செய்வினை கண்டு முறை செய்யும் அருள் இறைவனாதலால் சிவனை, “என்னரசே” என்று போற்றுகின்றார். மண்ணிற் பிறந்து வாழ்வார்க்கு உளதாகும் பிறவித் துன்பம் இங்கே “இடர்” எனப்படுகிறது. உற்ற துன்பத்தைப் பெற்ற தாயிடம் சொல்வது பிள்ளைகளின் இயல்பாதலின், “தாயுடனும் சொன்னேனோ” என வுரைக்கின்றார். துன்ப மிகுதி தோன்ற, “இன்னும் இந்தச் சுமையைச் சுமக்க முடியாது” என்று கூறுகின்றார். சிவபெருமான் தன்னுடைய அன்பர்க்கு அருள் வழங்குவது உலகறிந்த செய்தியாதலால், “அன்பர்க் கருள்வோய்” என்கின்றார். யானும் அன்பனாதலால் எனக்கும் அருள் செய்க என்பது குறிப்பு.
இதனால், பிறவித் துன்பத்தைப் பொறுக்க மாட்டாமை கூறி அருள் வேண்டியவாறாம். (7)
|