பக்கம் எண் :

2724.

     பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
     இகலில் இடையை இரட்டித் - தகவின்
     அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
     திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

உரை:

      பகுதி தகுதி விகுதி என வரும் இப்பாட்டில் சொற்களை மாற்றாமல், இவற்றின் இடையிலுள்ள மூன்று குக்களையும் இரட்டினால் வரும் அறுகு கொண்டு முறையாகத் திருவுடைய சிற்சபையில் நடம் புரியும் பெருமானை அருச்சித்தால் இவற்றின் முதலெழுத்துக்கள் கூட வரும் பதவி கடையெழுத்துக்களாகிய தி மூன்றும் கூட வரும் முத்தியாம். எ.று.

     இப்பாட்டில் என இகரச்சுட்டு வருவித்துக் கொள்க. இகலுதல் - ஈண்டு பகுதி முதலிய மூன்றும் நிலைமாறுதல். மாறிய வழிப் பதவி என்ற சொல் எய்தாது. இரட்டுதல், மூன்று கு அறுகு ஆதற்கு என அறிக. அருச்சனைக்கு முன் நீராடித் திருநீறணிந்து தூய மனத்தராய் நிற்றல் வேண்டுதலால், “தகவின் அருச்சித்தால்” என வுரைக்கின்றார். முன்னாம் அது. முன்னே யுள்ள எழுத்து; பதவி என்பவை. கடையாம் அது, தி; தகவுடன் அறுகு கொண்டு அருச்சித்தால் பெறும் பதவி முத்தி என்க. பதவி - இடம் - சிற்சபை. ஞானசபை. ஞான சபையாதலால், கண்டார் விரும்பும் பொற்புடைமை தோன்றத் “திருச்சிற்சபை” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், கூத்தப் பெருமானை எண்ணி அறுகு கொண்டு அருச்சனை செய்தால் முத்தி பெறலாம் எனத் தெரிவித்தவாறாம்.

     (9)